யுத்த குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களுடன் கைகுலுக்கி படமெடுக்கும் மேற்குலக இராஜதந்திரிகள்

புதன் செப்டம்பர் 16, 2020

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவைக்கான தனது அறிக்கையில் மனித உரிமை ஆணையாளர் மிச்செலே பச்செலெட் எதிர்மறையான போக்குடைய விடயங்கள் இடம்பெறுவதை சுட்டிக்காட்டி இலங்கை குறித்து புதிப்பிக்கப்பட்ட கவனத்தை செலுத்துமாறு மிகசரியான வேண்டுகோளை விடுத்துள்ளார் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தெரிவித்துள்ளது.

ஐக்கியநாடுகள் மனிதஉரிமை ஆணையாளர் தனதுகுறுகியஉரையில் தெரிவித்துள்ளதை விட இலங்கையில் புதிய ராஜபக்ச அரசாங்கத்தின்கீழ் மனித உரிமை நிலவரம் மோசமானதாக உள்ளதாக தென்னாபிரிக்காவை தளமாக கொண்ட அமைப்பு தெரிவித்துள்ளது.
 

மனித உரிமைகள் அழிக்கப்பட்டுள்ள போதிலும் பெரும்பான்மை இனமத அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ள போதிலும் இலங்கையுடன் தொடர்ந்தும் வழமையான நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என மேற்குஉலக மற்றும்வடஅமெரிக்கா நாடுகள் சிந்திக்கின்றன என சர்வதேச உண்மைமற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.
 
மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை யுத்தகுற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டனர் என குற்றம்சாட்டப்பட்ட சிரேஸ்ட இராணுவஅதிகாரிகளை அரசாங்கத்தின் முக்கிய பதவிகளுக்கு நியமித்தமை குறித்து கண்டிப்புடன் கேள்வி எழுப்பியுள்ளதுஎன சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தெரிவித்துள்ளது.

இவர்களில் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ணவும் அடங்குகின்றார்,2009 இல் யுத்தத்தில் அவரின் செயற்பாடுகள் குறித்த விடயங்கள், ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர்அலுவலகம் இலங்கை குறித்து மேற்கொண்ட விசாரணை அறிக்கையில் இடம்பெற்றுள்ளது,எனவும் சர்வதேச உண்மைமற்றும் நீதிக்கான திட்டம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் பதில் முப்படை பிரதானியாகவும் பணியாற்றும் இராணுவதளபதி சவேந்திரசில்வா கட்டளை தலைமப்பீட பொறுப்பு என்ற அடிப்படையில் சட்டவிரோத படுகொலைகள் உட்பட மிகமோசமான மனித உரிமை மீறல்களில் அவருக்குள்ள தொடர்புகள் காரணமாக 2019 இல் அமெரிக்க அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்டார் எனவும் சர்வதேச உண்மைமற்றும்நீதிக்கானதிட்டம் தெரிவித்துள்ளது.

 
அவர் தொடர்ந்தும் அந்த பதவியில் நீடிக்கின்றார் கொவிட் 19 நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார் எனவும் சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையில் உள்ள இராஜதந்திரிகள் சவேந்திரசில்வாவை தொடர்ச்சியாகசந்திக்கின்றனர், மனித பேரழிவு நிவாரணம் என்ற அடிப்படையில் பரிசுப்பொருட்களை பரிமாறிக்கொள்கின்றனர் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

அவர்கள் யாருடன் கைகுலுக்கிக்கொள்கின்றனர் ஒன்றாக சேர்ந்து படமெடுக்கின்றனர் என்பது குறித்து எச்சரிக்கவேண்டும் என தெரிவித்துள்ள ஜஸ்மின் சூக்கா இவற்றின் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் முன்னரை விட அதிகளவு பாதுகாப்பற்றவர்களா உணர்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

இதனை தவிர முன்னாள் இராணுவ அதிகாரிகள் வெளிவிவகார செயலாளர்களா சுகாதார அமைச்சின் செயலாளர்களாக விவசாய அமைச்சின் செயலாளர்களா ஜனாதிபதியின் பிரதானிகளாக பல செயலணிகளின் உறுப்பினர்களாக நியமிக்கப்படுகின்றனர் எனவும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம்தெரிவித்துள்ளது.