யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஓர் அவசர கடிதம்!

வியாழன் அக்டோபர் 24, 2019

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு அன்பு வணக்கம்.
இதற்கு முன்பும் சில தடவைகள் உங்களுக்குக் கடிதம் எழுதியிருந்தோம்.

அவை பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகின்றோம்.
இப்போது இந்தக் கடிதத்தை உங்களுக்கு அவசரமாக எழுத வேண்டியுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் என்றால் அவர்களுக்கான மதிப்பும் மரியாதை யும் தனித்துவமானது.

தேர்தல்கள் வரும்போதெல்லாம் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் என்ன சொல்கிறார் கள் என்று கேட்கின்ற ஒரு பண்பாடு இன்று வரை எங்கள் தமிழ் மக்களிடம் இருக்கிறது.

அந்தளவுக்கு உங்கள் மீது தமிழ் மக்கள் பற்றும் நம்பிக்கையும் கொண்டுள்ளனர்.

எனினும் சில கல்வியாண்டுகளில் நடை முறையில் இருந்த யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் செயற்பாடுகள் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

ஒருமுறை யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் செயற்பாடு தொடர்பில் கருத்துரைத்த வரலாற்றுத்துறைப் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் அவர்கள், யாழ்.பல்கலைக்கழக வரலாற் றில் கறுப்பு முத்திரை குத்தப்பட்டுவிட்டது எனக் கூறியிருந்தார்.இதனை நாம் விரிவுபடுத்திக் கூற விரும்பவில்லை.

இதுபோல யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தில் ஒரு பீடத்துக்கான பிரதிநிதியாக இருந்த மாணவர் ஒருவர் கடந்த பொதுத் தேர்தல் காலத்தில், ஒன்றியத்தின் கடிதத் தலைப்பைப் பயன்படுத்தி ஒரு கட்சியை மாணவர் ஒன்றியம் ஆதரிப்பதாக அறிக்கை எழுதி ஒன்றியம் முழுமைக்குமான தலைவராகத் தன்னைப் பிரகடனப்படுத்தி கையொப்பம் இட்டு வெளியிட்டிருந்தார்.

அவரின் இந்த அநாகரிகச் செயலுக்குப் பின்னால் அன்பளிப்புகள் இருந்ததாகப் பேசப் பட்டபோது கடவுளே! எங்கள் தலைவிதி என்னே என்று மக்கள் கலங்கிப் போயினர்.

இத்தகைய இழுக்கான செயல்கள் இனி மேலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெறுவதை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முக்கிய தீர்மானங்களை எடுப்பதாக  இருந்தால், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்து அனைத்துப் பீட மாணவர்களையும் அழைத்து அவர்களின் கருத்துக்களையும் ஒப்புதல்களையும் பெற்ற பின்பே தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்ற இறுக்கமான நிபந்தனைகளை நீங்கள் முன்வைக்க வேண்டும்.

இப்போதுகூட யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஐந்து தமிழ் அரசியல் கட்சித் தலைவர்கள் ஒன்றுபட்டு ஒப்பமிட்டனர்.

ஆனால் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து ஆராய்வதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூடியது என்றால் 13 அம்சக்கோரிக்கை, கட்சிகளின் உடன்பாடு, கையயாப்பம் எல்லாம் எதற்கானது என்பதுதான் நம் கேள்வி.

ஆம், ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் யாரை ஆதரிப்பது என்று ஆராய்வதாக இருந்தால் ஐந்து கட்சித் தலைவர்களும் ஒன்றாகக் கூடி ஆராய வேண்டும்.

இதைவிடுத்து ஒவ்வொரு கட்சிகளும் தம்பாட்டில் ஆராய்வதாயின் ஒன்றுபட்டதென்பது வெறும் நாடகமா?ஆக, அன்புக்குரிய யாழ்.பல்கலைக்கழக மாணவர்களே! நீங்கள் மிகவும் நிதானமாக இருக்க வேண்டிய நேரம் இது.

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் என்ற மதிப்பார்ந்த பெயரை எவரும் துஷ்பிரயோகம் செய்யவோ அல்லது தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தவோ நீங்கள் அனுமதிக்கக் கூடாது என்று எம் இனத்தின் பெயரால் கேட்டுக் கொள்கின்றோம். 

நன்றி-வலம்புரி