வயல் வேலைக்கு ரோபோ உழவுஇயந்திரம்!

ஞாயிறு பெப்ரவரி 09, 2020

விவசாய வேலைகளை செய்யும் ஆட்களுக்கு பற்றாக்குறை ஜப்பானில் தலைதுாக்கியிருக்கிறது.எனவே,அமெரிக்கா,இங்கிலாந்து போன்ற நாடுகளைப் போல, ஜப்பானும்,தானோட்டி டிராக்டர்களை உருவாக்கும் ஆராய்ச்சியில் இறங்கியுள்ளது.

குபோடா என்ற நிறுவனம் உருவாக்கியுள்ள, 'எக்ஸ்-டிராக்டர்' முழுவதும் மின்சாரத்தில் இயங்கக்கூடிய தானோட்டி டிராக்டர்.

கழனியில் இறங்கி நெல் விதைப்பது, பயிருக்கு பாசனம் செய்வது, விளைச்சளை கண்காணிப்பது, அறுவடை செய்வது என்று சகல வேளாண் பணிகளையும் தானாகவே செய்யும் திறன் கொண்டது எக்ஸ்டிராக்டர் என,குபோடா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த தானோட்டி டிராக்டரில் மண் பதம், ஈரம், பருவநிலை போன்றவற்றை அளக்கும் உணரிகள்,வயல் வெளியின் மேடு, பள்ளங்களை பார்க்கும் கேமராக்கள்,களத்தில் முடிவெடுத்து இயங்கும் செயற்கை நுண்ணறிவு மென்பொருள் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.

இதில் நான்கு சக்கரங்களுக்கு பதில் பீரங்கிகளுக்கு உள்ளது போன்ற உலோகப் பட்டைகள் பொருத்தப்பட்டுள்ளன. எனவே சகதி, சரளை நிலங்களில் நன்கு நகர முடியும். தவிர, பயிர்களின் உயரத்திற்கு இந்த டிராக்டரின் உடல் பகுதி உயரவும் தாழவும் முடியும்.

விளை நிலத்தில் பொருத்தப்பட்ட சூரிய ஒளிப்பலகை மூலம் மின்சாரத்தை இலவசமாகப் பெற்று இயங்கும் குபோடா டிராக்டருக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என நம்பலாம்.