வன்னிமயில் 2020 தாயகப் பாடலுக்கான நடனப்போட்டி!

புதன் பெப்ரவரி 26, 2020

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழ்ப் பெண்கள் அமைப்பினரால் 11 ஆவது ஆண்டாகத் தாயக விடுதலைப் பாடல்களுக்கான வன்னிமயில் – 2020 நடன நிறைவு நாள் போட்டிகள் மிகவும் பேரெழுச்சியாக கடந்த (22.02.2020) சனிக்கிழமை ஒள்னெ சு புவா பகுதியில் இடம்பெற்று முடிந்தது. முதல்  நான்கு நாள் நிகழ்வுகள் கடந்த 15 ஆம், 16 ஆம், 17 ஆம் மற்றும் 18 ஆம் நாள்களில் பாரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான குசான்வீல் பகுதியில் வெகுசிறப்பாக இடம்பெற்றிருந்த நிலையில் நிறைவுநாள் போட்டிகள் இடம்பெற்றிருந்தன. 

i

ஐந்து தினங்களும் ஆரம்ப நிகழ்வாக மாவீரர் திரு உருவப்படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர்வணக்கம் செலுத்தப்பட்டு, அகவணக்கத்தைத் தொடர்ந்து போட்டிகள் ஆரம்பமாகியிருந்தன.
 
ஒள்னேசுபுவா பகுதியில் பிரமாண்டமான அரங்கில் நிறைவுநாள் நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றிருந்தன. 


இந்நிகழ்வில் ஈகைச்சுடரினை 24.03.1997 அன்று முல்லைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையின் கடற்கலம்மீதான தாக்குதலில் வீர்சாவடைந்த கடற்புலி லெப். மாவேந்தன் அல்லது சுகுணன் மற்றும் 18.04.2009 அன்று வன்னிமீதான சிறிலங்கா படையினரின் இனவழிப்புத் தாக்குதலின் போது வீரச்சாவடைந்த ராதாவான்காப்புப் படையணியின் லெப். கேணல் உருத்திரன் ஆகிய ரெண்டு மாவீரர்களின் சகோதரர்  ஈகைச்சுடர் ஏற்றிவைக்க, பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுப் பொறுப்பாளர் திரு.மகேஸ் அவர்கள்  மலர்வணக்கம் செலுத்தினார்.

 அகவணக்கத்தைத் தொடர்ந்து நடுவர்கள் அரங்கிற்கு அழைக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டு, நடுவர்களிடம் போட்டியாளர்களின் விபரம் அடங்கிய கையேடு பிரான்சு தமிழ் பெண்கள் அமைப்பு பொறுப்பாளர் திருமதி சுகந்தினி சுபாஸ்கரன் அவர்களால் வழங்கப்பட்டு, போட்டிகள் ஆரம்பமாகின. 

தொடர்ந்து போட்டிகள் விறுவிறுப்பாக இடம்பெற்றன. மண்டபம் நிறைந்த பார்வையாளர்கள் மேலும் தமது கரகோசத்தால் போட்டியாளர்களையும் நடுவர்களையும் உற்சாகமூட்டிக்கொண்டிருந்தனர். 

ஒள்னே சுபுவா நகர உதவி மேயர் உள்ளிட்டோர் மேடையில் பொன்னாடை போர்த்து மதிப்பளிப்புச் செய்யப்பட்டதுடன், அவர்கள் வன்னி மயில் நிகழ்விற்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தனர். 

சிறப்புரையினை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு. மேத்தா அவர்கள் ஆற்றியிருந்தார். 

அவர்தனது உரையில், இந்தக் குழந்தைகள் எம்மை நம்பிவந்திருக்கின்றார்கள், நாங்கள் நாட்டைப் பெற்றுத்தருவோம் என்று.  இது பிரான்சு தேசத்துக்கு மட்டுமல்ல அனைத்து புலம்பெயர் தேசங்களுக்குமான செய்தி, தாயகத்தில் மிகுந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் அவர்களின் போராட்டங்களையும் தேச விடுதலை உணர்வுகளையும் கொண்டுசெல்கின்றார்கள். ஆனால், புலம்பெயர்தேசங்களில் அவ்வாறில்லை. ஆகவே, நாம் எமது மண்ணின் விடுதலைக்கு அரசியல் ரீதியாக உழைப்போமென்று இந்தச் சந்தர்ப்பத்தில் உறுதி எடுத்துக்கொள்வோம். இந்தக் குழந்தைகளை சரியான இடத்திலே கொண்டு செல்லவேண்டியது ஒவ்வொரு அண்ணாமாருக்கும் அக்காமாருக்கும் இருக்கின்றது. அவர்களோடு சேர்ந்து உழைக்கின்ற, ஆதரவுகொடுக்கின்ற கடமை ஒவ்வொரு பெற்றோருக்கும் இருக்கின்றது. இவர்களுக்கும் அப்பால் இந்த நடன ஆசிரியர்களுக்கு இருக்கின்றது. இந்த ஆசிரியர்களை வழிநடத்துக்கின்ற பள்ளிகளுக்கு இருக்கின்றது. இதனை ஒவ்வொருவரும் மனதில் நிறுத்தி உறுதிகொள்ளவேண்டும் என்பதை இந்த வன்னிமயில் 11 ஆவது நிகழ்வில் வேண்டிநிற்கின்றேன் - என்றார்.  
 
பிரான்சு தமிழ் பெண்கள் அமைப்பினரின் இந்த நிகழ்வில் இருந்து கிடைக்கும் நிதியானது முழுமுழுக்கத் தாயகத்தின் வாழ்வாதாரத்துக்கே அனுப்பிவைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. அத்தோடு, தமிழ் பெண்கள் அமைப்பினரால் நல்வாய்ப்பு சீட்டு உருட்டப்பட்டு, வெற்றிபெற்றவருக்கு ஒரு பவுண் பெறுமதியான தமிழீழ இலச்சினை பொறிக்கப்பட்ட நாணயம் மேடையி;ல் வழங்கிவைக்கப்பட்டது. 

தொடர்ந்து நன்றியுரையினை பிரான்சு தமிழ்ப் பெண்கள் அமைப்பின் உறுப்பினர் திருமதி ஜெனனி ஜெயதாசன் அவர்கள் வழங்கியிருந்தார். தொடர்ந்து நடுவர்கள், பிரான்சு தமிழ்ப் பெண்கள் அமைப்பினரால் மதிப்பளிக்கப்பட்டதையடுத்து, நடன ஆசிரியர்கள் நடுவர்களால் மதிப்பளிப்புச் செய்யப்பட்டனர். அதனைத்தொடர்ந்து வெற்றிபெற்றவர்களுக்கான கிண்ணங்களும் சான்றிதழ்களும் வழங்கிவைக்கும் நிகழ்வு இடம்பெற்றது. ஒவ்வொரு முடிவுகளை அறிவிக்கும்போதும் மண்டபம் நிறைந்த கரகோசத்தால் வானதிர்ந்தது. 2020 ஆம் ஆண்டு வன்னிமயிலாக திருவாட்டி ரூபி தில்லைரூபன் அவர்களின் மாணவி திருஞானசுந்தரம் ஆராதனி (அதி அதி மேற்பிரிவு)  தெரிவுசெய்யப்பட்டார். அவருடைய பெயர் அறிவிக்கப்பட்டதும் மகிழ்ச்சிப் பெருக்கில் மிதந்ததைக் காணமுடிந்தது. அரங்கில் பிரமுகர்கள், நடுவர்கள், தமிழ் பெண்கள் அமைப்பினர் என அனைவரும் புடைசூழ்ந்து நிற்க வன்னிமயில் மகுடம் சூட்டப்பட்ட காட்சி எழுச்சியாக இருந்தது. 

ஆராதனியின் தமிழ் ஆசிரியை எமது ஊடகப்பிரிவிடம்  தெரிவிக்கையில், இங்கு பிறந்த பிள்ளைகள் தாயக எழுச்சிப்பாடல்களுக்கு நடனம் ஆடுவதென்பது, எமக்குத் தாயகத்தையும், விடுதலைப் போராளிகளையும், மக்களையும்  நினைவு படுத்தவதாக அமைந்துள்ளதுடன் எமக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்துகின்றது. இந்த வன்னிமயில் ஒவ்வொரு வருடமும் இடம்பெறும் போதும் எமக்கென்று ஒரு நாடு உருவாக்கப்படவேண்டும் என்ற உணர்வு வருகின்றது. அதனை இந்தத் தமிழ்ப்பெண்கள் அமைப்பு ஏற்படுத்தித் தந்துள்ளது. அவர்களுக்கு நாம் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம். இன்று தெரிவான எனது மாணவியும் அவரது சகோதரியும் நடனத்தில் மட்டுமல்லாமல் தமிழ்மொழியிலும் சிறந்த தேர்ச்சி பெற்றவர்கள். இவர்கள் தாயக உணர்வுடனேயே இந்த நடனத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நேரத்தில் நான் இவர்களை வாழ்த்தி நிற்கின்றேன். என்றார். இதேவேளை - வன்னிமயில் வென்ற ஆராதனி எம்மிடம் தெரிவிக்கையில், நான் எதிர்பார்க்கவே இல்லை. 

இம்முறை மூன்றாவது இடம்கூடக்கிடைக்கவில்லை என வருத்தமாக இருந்தேன். திடீரென எனது பெயர் அறிவிக்கப்பட்டதும் நம்பமுடியாமல் இருந்தது. 2014 ஆம் ஆண்டு எனது சகோதரி ஆதங்கனியும் வன்னிமயில் விருதைப்பெற்றுக்கொண்டார். இதேவேளை, ஏனையமாணவர்கள் தோல்வியைக்கண்டு சோர்ந்துவிடாமல் தொடர்ந்து முயற்சிசெய்யவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். தன்னை ஊக்குவித்த ஆசிரியர்கள் மற்றும் அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டார்.   தொடர்ந்து, நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடனும் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடனும் நிகழ்வுகள் இனிதே நிறைவுபெற்றன. 

•போட்டி முடிவுகள் தொடர்ச்சி…. 
•அதிமேற்பிரிவு                                                                                        
பிரிவு (அ)                                                                                                            1 ஆம் இடம்: கிருபாகரன் சோபியா                                                                2 ஆம் இடம்: கோவிந்தராஜ் சௌந்தர்யா                                                                                                                                                                  3 ஆம் இடம்: அற்புதநாதன் ஆருசா
பிரிவு (ஆ)                                                                                                            1 ஆம் இடம்: சிமிர்னா தர்மகுலசிங்கம்                                                2 ஆம் இடம்: வசந்தகுமார் லேனா                                          3 ஆம் இடம்: விமலேந்திரன் கார்த்திகா
பிரிவு (இ)                                                                                                          1 ஆம் இடம்: சுரேஸ் சொந்திரின்;                                                2 ஆம் இடம்: வசந்தகுமார் லெனிதா                                                         3 ஆம் இடம்: சிவதுமாரன் சாம்பவி
•அதி அதி மேற்பிரிவு                                            
பிரிவு (அ)                                                                                                           1 ஆம் இடம்: பாஸ்கரன் பிரசாந்தி                                                          2 ஆம் இடம்: அருமைநாயகம் லிண்டா                                                      3 ஆம் இடம்: விக்டர் தர்சிகா 
பிரிவு(ஆ)                                                                                                              1 ஆம் இடம்: புஸ்பகரன் அட்ஷயா                                                    2 ஆம் இடம்: குமாரதாஸன் ஆதர்ஷா                                                     3 ஆம் இடம்: லஜீந்திரன் சௌமியா
சிறப்புப் பிரிவு                                                                                                  1 ஆம் இடம்: சுரேந்திரன் லாவண்யா                                                      2 ஆம் இடம்: மாணிக்கா சரண்யா                                              3 ஆம் இடம்: ம்பேபி லியேயுவா
கீழ்ப் பிரிவு குழு                                                                                                  1 ஆம் இடம்: இல.11 அழகான தமிழீழம்                                       2 ஆம் இடம்: இல. 05, சின்னமகளே, இல.06, துணையின்றி வாழ்ந்தோமே                                             3 ஆம் இடம்: இல. 02, டப்பாங்கூத்து பாட்டு, இல.08, வேலுப்பிள்ளை பிரபாகரன்  
வன்னிமயில் 2020 
திருஞானசுந்தரம் ஆராதனி (அதி அதி மேற்பிரிவு)  

                                         
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)