வளவெல்லாம் வடலி என்றால் தீயினால் ஊர் எரியுமே!

புதன் அக்டோபர் 23, 2019

பனை எங்கள் வடபுலத்தின் வளம் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.பனை மரத்தை கற்பகதரு என்று நம் முன்னோர்கள் போற்றினர்.

அதற்குக் காரணமும் உண்டு. நம் மூதாதையர்கள் பனை மரத்தால் சீவியம் நடத்தியவர்கள்.பனாட்டு,பனங்கிழங்கு,ஒடியல், புளுக்கொடியல் என்பன அன்றாட  உணவாயிற்று.

காலையில் ஒடியல் பிட்டு, மதியம் ஒடியல் கூழ் என்றவாறு எங்கள் சீவியத்தோடு கலந்த பனையின் இதர பாகங்கள் அனைத்தும் எங்கள் வாழ்வியலுக்காயிற்று.

பனையோலைப் பாயும் குருத்தோலைப் பாயும் எங்கள் அலங்காரப் பஞ்சணைகள். குருத்தோலைக்குச் சாயம் காய்ச்சி அலங்காரமாய் இழைக்கின்ற குருத்தோலைப் பாயின் அழகுக்கு நிகர் ஏதுமில்லை.

தவிர,பனை ஓலையால் வேய்ந்த வீடு இயற்கையால் குளிரூட்டப்பட்ட வாசஸ்தலம். இது மனிதர்களுக்கு மட்டுமல்ல.பாலைப் பொழிந்து தரும் பசுக்கள் கட்டப்படும் மால்களும் பனை ஓலையால் வேயப்பட்டு வெப்பம் தணிக்கக் கையாண்ட நுட்பத்தின் பெருமை சொல்லிமாளா.

வைரப்பனை பார்த்து பாய்ச்சு மரம் வெட்டி நாத்தியில் சிற்ப வேலை செய்து நாற்சார வீடு கட்டி வாழ்ந்த காலம் போயிற்று.

இப்போது ஆலயங்களில் இருக்கின்ற பனை மரத்துக் கூரைகளைக் கழற்றி எடுத்து முழுமையும் சீமெந்து கொங்கிறீற் போடுகின்ற காலமாயிற்று.

பனையோலைப் பாயும் நெல் வயலில் விரிந்து கிடக்கும் களப்பாயும் அருங்காட்சியகங்களிலும் காணமுடியாப் பொருட்களாயிற்று.இப்போ பனம் பழங்கள் மாடுகளுக்கும் தேவையற்ற பண்டமாயிற்று.

இந்நிலையில் பனை வளம் காக்க பிறர் வளவெல்லாம் வடலி வளர்க்கும் பண்பாடு அரங்கேறி இருக்குது.

அவனவன் தன் சொந்த வளவில் நிற்கும் வடலிகளை அகற்றி நிலத்தைச் சுத்தப்படுத்தலாமென்றால் வடலி அழிக்கத் தடையாம்.யதார்த்தம் புரியாதவர்கள், வளவெல்லாம் வடலி வளர்க்கச் சட்டம் போடுகிறார்கள்.

பனை வளத்தைப் பாதுகாப்பதாயின் பொது நிலத்தில் அரச காணிகளில் பனை விதை போட்டு வடலி வளர்த்து பனையாக்குக. இடமுள்ள வீதியின் இரு மருங்கிலும் வடலி செய்க.

இதைவிடுத்து அவனவன் காணியில் இருக்கின்ற வடலியயல்லாம் வளம் என்றால் வடலிதான் வளருமா? பனைதான் உருவாகுமா?

காணிக்குள் நுழையத்தான் முடியுமா? வேலி போடலாமா? எல்லை கட்டலாமா? எதைத்தான் செய்ய முடியும்.

நிலம் பல உள்ளவன் இதனையே சாட்டாக்கி காணியைத் துப்புரவாக்காமல் வடலி வளர்க்க,அயல் வீட்டு ஏழை என்ன செய்வது.வடலி எதுவும் செய்யாது. ஆனால் பாம்புகள் குடியிருக்கவும் நுளம்புகள் பெருகவும் அதுவே நிலையமாகலாமல்லவா?

என் வீட்டில் உள்ள பனை ஒன்று தறிக்க 200 ரூபாய் கட்டணம்.ஏன்? எதற்கு? என்றால் பனை விதை நாட்டவாம். அப்படியானால் எங்கெல்லாம் பனை விதை நாட்டினீர்கள். ஒரு கணக்குக் காட்டலாமே.

மற்றவன் வளவு முழுவதும் வடலி வளர்த்தால் காற்றினில் அள்ளுண்டு வரும் ஒரு தீப் பொறியும் அந்த ஊரையே எரித்து நீறாக்கு மல்லவா.ஆகையால் அவரவர் காணியை துப்புரவு செய்யத் தூண்டுங்கள்.

அதுவே சுகம் தரும். பொறுப்புடைய நீவிர் ஒழுங்காய், வண்ணமாய், வடிவாய், பனை விதை நட்டு வடலி வளர்த்து பனை வளம் பெருக்குக.அதுவே நிலைத்த பனை அபிவிருத்தியாம்.

நன்றி-வலம்புரி