வலிப்பு நோயை வென்றவர்கள்!

புதன் மார்ச் 11, 2020

வலிப்பு ஒரு சாபக்கேடோ, வாழ்வின் முடிவோ அல்ல. வலிப்புகளை மீறி வெற்றிகளைக் குவித்த சில சாதனையாளர்களை அறிந்தால், இது புரியும்.

வலிப்பு நோய் உள்ளவர்கள், “எனக்கு மட்டும் ஏன் டாக்டர் இந்த நோய் வந்திருக்கு?“ என்று விரக்தி அடைந்து, வேதனையுடன் கூறுவார்கள்.

அவர்களுக்கு சொல்ல வேண்டியது ஒன்று தான். இது முற்றிலும் கட்டுப்படுத்தி வைத்திருக்கக்கூடிய ஒரு நோய் என்பது தான். எல்லோரையும் போல ஒரு வளமான எதிர்காலம் அவர்களுக்கும் இருக்கிறது.

 

வலிப்பு ஒரு சாபக்கேடோ, வாழ்வின் முடிவோ அல்ல. வலிப்புகளை மீறி வெற்றிகளைக் குவித்த சில சாதனையாளர்களை அறிந்தால், இது புரியும். உலகையே வென்று ஆட்சி செய்த மாவீரன் அலெக்சாண்டர், போரிட்டுக்கொண்டிருந்த நேரத்தில்கூட வலிப்பு நோயால் அவதிப்பட்டதாக வரலாறு சொல்கிறது.

பியோதர் தாஸ்தாவ்ஸ்கி உலகப் புகழ்பெற்ற ரஷிய நாவலாசிரியர். இவர் ‘இடியட்’ என்ற தனது நாவலில், மனதுக்கு சுகம் தரும் உணர்ச்சிகள் முன்னெச்சரிக்கையாக ஏற்பட்டு, உடனே வலிப்பு வருவதாக குறிப்பிடுகிறார். அவரும் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர் தான். நோபல் பரிசை உருவாக்கிய விஞ்ஞானி ஆல்பிரெட் நோபல் ஒரு வலிப்பு நோயாளி என்பது பலருக்கு தெரியாது. அவர் டைனமைட் கண்டுபிடித்து உலகப் புகழ்பெற்றார்.

ஹாலிவுட் திரையுலகிலும், நாடக உலகிலும் கொடிகட்டி பறந்த டான்னி குளோவர், தி மாட்ரிக்ஸ் அறிவியல் பட வில்லன் நடிகர் ஹியுகோ வாலஸ் வீவிங், புகழ்பெற்ற நாவலாசிரியர் சார்லஸ் டிக்கன்ஸ், தலைசிறந்த தத்துவ ஞானி சாக்ரடீஸ், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன் டோனி கிரெய்க் என்று வலிப்பு நோயை வென்று, வாழ்ந்து காட்டியவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

நமது மூளையின் வெவ்வேறு பகுதிகளின் செயல்பாடுகள் பாதிக்கப்படுவதால், வெவ்வேறு வகையான வலிப்பு தோன்றுகிறது. இதனால் ஒவ்வொருவருக்கும் ஏற்படும் வலிப்பு, மற்ற வலிப்புகளில் இருந்து மாறுபடும். மூளையின் பெரும்பாலான பகுதிகளில் ஏற்படும் பாதிப்பால் ஏற்படுபவை. நாம் அவ்வப்போது காணும் பொதுவான அறிகுறிகளான நினைவிழத்தல், கை கால் வெட்டி இழுத்தல், வாயில் நுரை தள்ளுதல் போன்றவற்றுடன் வரும் வலிப்புகள்.

மூளையின் ஏதேனும் ஒரு பகுதியில் ஏற்படும் பாதிப்பால் மட்டும் வருவது பகுதி வலிப்பு. இது, ‘சிம்பிள்', ‘காம்ப்ளெக்ஸ்' என இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது. சிம்பிள் பகுதி வலிப்புகள் என்பதில், நினைவிழத்தல் இல்லை, வேறு சில பிரச்சினைகள் இருக்கும்.

காம்ப்ளெக்ஸ் பகுதி வலிப்புகள், சிம்பிள் பகுதி வலிப்பாகத் தொடங்கி, நினைவிழத்தல் வரை செல்லும். இதுபோக வெட்டி இழுத்தல், தசைகளில் விரைப்புத் தன்மை இன்றி, ‘துணி’ போல் சுணங்கி விழுதல், இடையில் நினைவு திரும்பாமல், தொடர்ந்து வலிப்பு வந்துகொண்டே இருப்பது போன்று வேறு சில வாய்ப்புகளும் இருக்கின்றன. எனவே சிகிச்சை அளிக்கும் மருத்துவருக்கு வலிப்பு வகையை பற்றிய பரிபூரண அறிவு மிகவும் அவசியம்.