வெள்ளை குதிரை மீது சவாரி செய்யும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன்!

புதன் அக்டோபர் 16, 2019

கொரிய தீபகற்பத்தின் மிக உயர்ந்த சிகரமான பைக்டு மலையில் பனி மூடிய நிலப்பரப்புகளில் வட கொரிய அதிபர்  கிம் ஜாங் அன் ஒரு வெள்ளை குதிரை மீது  சவாரி  செய்யும்  புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

தொடர்ந்து அணு ஆயுத சோதனை மூலம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து வரும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் தற்போது ஒரு வித்தியாசமான வைரலை ஏற்படுத்தியுள்ளார்.

அடர்ந்த பனிகளுக்கு இடையேயும், மரங்களுக்கு இடையேயும் கிம் குதிரையில் அமர்ந்தபடி பயணம் மேற்கொண்டார். அதிபர் கிம் ஜாங் அன்னின் சந்தோஷமான தருணத்தை பார்த்த அதிகாரிகள் அவரது இந்த பயணம் வடகொரிய புரட்சியில் முன்னேற்றமடைய வழிவகுக்கும் என்று கூறியிருக்கின்றனர்.

கிம் தனது முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன்பு  பைக்டு மலைக்கு பயணம் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. குறிப்பாக 2013 ஆம் ஆண்டு தனது மாமாவிற்கு மரணதண்டனை வழங்கியது மற்றும் 2018 ஆம் ஆண்டு  தென் கொரியா-அமெரிக்காவுடனான சமரச பேச்சுவார்த்தைக்கு முன்பு அங்கு பயணம் செய்து இருந்தார்.

கொரிய தீபகற்பத்தின் 1910-45 காலனித்துவ ஆட்சியின் போது கிம்மின் தாத்தாவும் தேசிய நிறுவனருமான கிம் இல் சுங்கிற்கு ஜப்பானுக்கு எதிரான கெரில்லா தளம் இந்த மலைப்பகுதியில் இருந்தது என்று வட கொரிய ஆவணங்கள் கூறுகின்றன.ஏழு தசாப்தங்களாக வடகொரியாவை ஆண்ட கிம் குடும்பத்தின் பிரச்சார அடையாளமாக வெள்ளை குதிரை உள்ளது.