ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான் தன் கண்ணீரை மூடிக்கொண்டு இன்பம் கொடுப்பான்!

புதன் அக்டோபர் 30, 2019

டேமியன் சூரி. இது ஒரு சாதாரணமான பெயர்தான். ஆனால் இவர் சாதித்ததும், பாதித்ததும், அர்ப்பணித்ததும், அயராது உழைத்ததும், ஆட்கொண்டதும், ஆழுகைசெய்ததும் பட்டுணர்ந்தவர் மட்டுமன்றி, சற்று எட்ட இருந்து பார்த்தவரும் உணர்ந்திருப்பர், உருகியிருப்பர்.

குருநகரை பிறப்பிடமாகக்கொண்டவர் . புனித ஜேம்ஸ் பாடசாலை, புனித சம்பத்திரிசியார் கல்லூரிகளில் பயின்று, இலங்கைக் காவல்துறையில் பணிபுரிந்தார். சிறுவயதிலே தன் சொந்தக் கிராமத்தில் அண்ணாவிமாருடன் பழகும் சந்தர்ப்பங்களை பெற்றவர். எல்லோரையும்போல சிறுவயதில் கூத்துக்களில் அதிக நாட்டமோ, விருப்பமோ இருக்கவில்லை.

கூத்துக்களில் அதீத ஈடுபாடுகொண்டு செயல்படுபவர்களில், பலருக்கு சிறுவயதில் கூத்தில் நாட்டம் இல்லாமல் இருப்பது இயல்பு. அண்ணாவிமார்களின் தூண்டுதலின் பெயரில் பல கூத்துக்களில் பாடி ஆடியிருக்கிறார். 1977, 1978ல் புலவர் பி.மிக்கேல்பிள்ளை எழுதி அண்ணாவியார் சாமிநாதன் நெறியாள் கைசெய்த ‘போருக்குப்பின்’ கூத்தில் அரசனாக தோன்றி, கம்பீரக்குரலாலும் ஆட்டத்தாலும் பலரை மிரளவைத்தார்.

111

இந்தக் கூத்தில் இவரின் நண்பனான பெஞ்சமின் இம்மானுவேல் அரசனாக இவரை அலங்கரித்து அழகுசேர்த்தார்.வளர்ந்துவரும் பருவத்தில் வணபிதா மரியசேவியரின் அரவணைப்பும் ‘திருமறைக் கலா மன்றத்தின்’ செயற்பாடுகளும் இவரை வலுவூட்டின.

ஆரம்பத்தில் அரங்க அமைப்பாளனாக தொடங்கி சிறிய மேடைகள் தொட்டு பிரமிக்கவைக்கும் பெரிய மேடைகள் வரை அமைக்கும் அனுபவங்களைக் கற்றார். இவருடைய கைவண்ணத்தில் திருமறைக்கலாமன்ற அரங்குகள் மெருகுபெற்றன. பலரை ‘இப்படி மேடையயன்றால் நாங்களும் நடிக்கலாம்தானே?’ என்று முணுமுணுக்க வைத்தது. இவருடைய ஒழுங்கு, கட்டுப்பாடு, நிர்வாகம், எடுத்த காரியம் நோக்கி கற்சிதமாய் நகரும் பண்புகளை, திருமறைக் கலாமன்றம் கூர்தீட்டிவிட்டது.

புலம்பெயர்வு இவரையும் தாய்நிலத்தில் இருந்து பிடுங்கி எறிந்தது. இயல்பாகவே புலம்பெயர்ந்த மக்களில் பலர், புதிய பிரச்சனைகளுக்கும், புதிய இடர்பாடுகளுக்கும் இடையே, தங்களைத் தாங்களே புலம்பெயர் தேசத்தில் தொலைத்துவிடு

வது தவிர்க்கமுடியாத சோகமாகிறது. ஆனால், சிலர் இதிலிருந்து மாறுபட்டு தங்களுடைய மண்ணையும், மண்சார்ந்த கலைகளையும் தூக்கி நிறுத்தி செயல்படுவது, பன்மடங்கு வேகமாகிறது. அவ்வாறு வேகமாகவும், நேர்மையாகவும், அர்ப்பணிப்போடும் செயற்பட்டவர்தான் திரு. டேமியன் சூரி அவர்கள்.

சிறுவயதில் கூத்தில் அவருக்கிருந்த அலட்சியமும் பிடிப்பின்மையும் எதிர்மறையாகி, பெருவிருப்பையும், ஆன்ம திருப்தியையும் பெரும் அர்ப்பணிப்பையும் வாழ்வின் இறுதிக் கணம் வரை செய்யத் தூண்டியது.

1995களில் பிரான்ஸ் திருமறைக் கலாமன்றத்துடன் செயல்படத் தொடங்கிய எனக்கு 2009 க்கு பிறகு செயற்பாடுகளில் கொஞ்சம் வேகம் அதிகரித்தது. கூத்து என்னையும் சூரி அண்ணனையும் பிரிக்க முடியாதபடி தறைந்தேபோட்டது. கூத்துதொடர்பான இக்கட்டான வேளைகளில் ஒருவருக்கொருவர் உற்சாகம் தருபவர்களாகவும் ஒருவருக்கொருவர் நம்பிக்கை தருபவர்களாகவும் மாத்திரமே இருந்தோம்.

அவர் கூத்தை யாசித்தார், சுவாசித்தார் என்பதை நன்கறிவேன். இன்று கூத்துக்கலையை தன் உயிரைவிட மேலாக நேசித்தார் என்பதை உலகறியும். அரங்க அமைப்பாளனாகவும், நடிகனாகவும், நிர்வாகியாகவும் புலம்
பெயர்ந்தவர், பின்னர் கூத்து எழுதுகின்ற புலவராகவும் கூத்தை பழக்குகின்ற அண்ணாவியாகவும் விஸ்வரூபம் கொண்டார்.

செங்கோல் (2009)
மனிதருள் மாணிக்கம் (2010)
திருந்திய உள்ளம் (2011)
தர்மத்தூதுவன் (2012)
வீணைக்கொடியோன் (2013)
உள்ளக் கமலமடி (2018)
தங்கத் தமிழ் வேந்தன் (2019)

இத்தோடு ஏகலைவன், அனைத்தும் அவரே, நீ ஒருபாறை, திருப்பாடுகளின் காட்சி போன்ற பிரதிகளை, தாயகத்தில் இருந்து எடுத்து மேடையிலே காட்சிப்படுத்தினார். சூரியண்ணன், எ.ரகுநாதன், இலண்டன் யோசேப் இவர்களின் முயற்சியால் ஏகலைவன் கூத்து காணொளிக் காட்சியாகவும் தயாரிக்கப்பட்டு வெள்ளித்திரைகளில் காண்பிக்கப்பட்டு பலரது வரவேற்பை பெற்றது.

திருப்பாடுகளின் காட்சி 100க்கு மேற்பட்ட கலைஞர்களுடன் பாரிசில் பலதடவைகளும், இலண்டனில் ஒரு தடவையுமாக மேடையேற அயராது உழைத்து வெற்றிகண்டார். 2015இல் தான் எழுதிய 5 கூத்துக்களை ‘யாழ்ப்பாணக் கூத்துக்கள்’ என்று புத்தகமாக வெளியிட்டு அழியாப் பதிவாக்கினார்.

கூத்தினுடைய சகல இராகங்களும் நன்கு தெரிந்தபடியால் கூத்து எழுதுவது இவருக்கு சுலபமாகியது. கூத்து எழுதுவது, பழக்குவது, பிற்பாட்டுப் பாடுவது, மேடையமைப்பது, நடிப்பது, நடிகர்களை ஒழுங்கமைப்பது என ‘அ’ தொடங்கி ‘ஃ’ வரை கூத்து அரங்கேற்ற என்ன தேவையோ அனைத்தும் கைவரப் பெற்றார்.

வருடாவருடம் நடக்கும் திருமறைக்கலா மன்றத்தின் கலை வண்ணத்தில் ஒரு கூத்து இருக்கும் என்பதை எழுதப்படாத சட்டமாக்கினார். அவரின் குரலும் உடலும் மேடையை கட்டிப்போட்டது. இந்தக் கூத்துகளுக்கு மறைந்த கலைஞர் றொபேட்டின் விரல்கள் ஆர்மோனியத்தில் வித்தை காட்டின.

என்.ரி.குணம், எஸ்.ஜே.கமிலஸ், மயில் அண்ணன், அருள் அண்ணன் இவர்களின் ஒப்பனை எல்லாவற்றையும் தூக்கி நிறுத்தியது. செபமாலை இன்பராசா, தபேலா மனோ தங்கள் வித்தைகளால் இரசிகர்களை வாயடைக்க வைத்தனர். தாசன் மேடையமைப்பில் மெருகாக்கினார். எல்லாம் சேர்ந்து புலம்பெயர் மண்ணில் நடக்கும் கூத்துக்கள் தாயகத்தில் நிகழும் கூத்துக்கள்போல தாக்கத்தை ஏற்படுத்தின.

வழமையாக மேடையிலே அடுத்த நிகழ்வாக கூத்து நடக்கும் என்ற அறிவிப்பு வரும்போது ‘வாங்க போய் தேத்தண்ணி குடிப்பம்’ என்று புறப்பட்ட இரசிகர்களை ‘வாங்க போய் கூத்துப்பாப்பம்’ என்று கூடிவர வைத்தவர். பரிசில் வாழக்கூடிய அத்தனை பேரோடும் சிறியவர், பெரியவர் என்றில்லாமல் பணியாற்றினார். அத்தனை பேரை பட்டியலிட என் ஒருவனால் மட்டும் முடியாது. யாரோடு பணியாற்றவில்லை என்று வேண்டுமானால் முயற்சிக்கலாம்.

அதிலும் நான் தோற்றுவிடுவேன். எல்லோரோடும் பணியாற்றினார். ஒவ்வொருவரோடும் ஒவ்வொரு விதமான பாசப்பிணைப்பை பற்றவைத்தார்.

‘தங்கத் தமிழ் வேந்தன்’ என்ற இராவணனுடைய கதையை ஆரியர் சூழ்ச்சியும், தமிழர்களின் வீழ்ச்சியுமாக, இராமனின் சூழ்ச்சியும் இராவணனின் வீழ்ச்சியுமாக புலவர் குழந்தை எழுதிய புத்தகத்தை பேராசிரியர் சச்சிதானந்தத்தின் ஆலோசனையின் பெயரில் கூத்தாக்கி அதை 28.09.2019 அன்று பரிஸ் அண்ணாமலை பல்கலைக்கழகம் நடத்திய நான்காவது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாட்டிலே மேடையேற்றி பலரது பாராட்டையும் பெற்றார்.

இறுதியாக 20.10.2019 கலைவண்ணத்தில் இதே நாடகம் மேடையேற்றப்பட்டபோது, அதே கும்பகர்ணன் வேடத்தில் தோன்றி அவர் எழுதிய அவரே பாடிய பாடலை பாடினார்.

‘எந்தன் தந்தை தாயுமான அண்ணா இந்த தம்பி உயிர் உடல் அனைத்தும் உனக்காய்..
எந்தன் பலம் கொண்டு சமர் செய்து நான் வெல்வேன் இல்லை உயிர் துறப்பேன் உனக்காய்..’
கூத்தின் படி யுத்தம் முடிந்தது. முதலில் கும்பகர்ணனும் பிறகு இராவணனுமாக வீழ்ந்தோம். ஓரிரு நிமிடத்தில் உரை முடிந்தது. அனைவரும் எழுந்தோம்...
சூரி அண்ணை தவிர..!

- செபமாலை ஆனந்தன் - 

நன்றி: ஈழமுரசு