உலகின் நீளமான அடல் சுரங்கப்பாதை பணிகள் நிறைவு

புதன் செப்டம்பர் 16, 2020

உலகின் நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதையான அடல் சுரங்கப்பாதை பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், இம்மாத இறுதியில் பயன்பாட்டிற்கு வர உள்ளது.

இமாச்சல பிரதேசத்தின் மணாலிக்கும் லடாக்கின் லே பகுதிக்கும் இடையே 8.8 கிலோ மீட்டர் நீளத்திற்கு, மலையை குடைந்து சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 3100 மீட்டர் உயரத்தில் இந்த பாதை உள்ளது. இந்த பாதை ரோடங் பாதை என்றும், முன்னாள் பிரதமர் அடல் பிகார் வாஜ்பாயின் நினைவாக அடல் சுரங்கப்பாதை எனவும் அழைக்கப்படுகிறது. மணாலி-லே நெடுஞ்சாலையில் உள்ள இந்த சுரங்கப்பாதையின் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், இந்த மாத இறுதிக்குள் பொது பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது. பிரதமர் மோடி இதனை திறந்து வைக்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.

இந்த சுரங்கப்பாதை பயன்பாட்டிற்கு வந்ததும், மணாலி-லே இடையிலான பயண தூரம் 46 கிலோ மீட்டர் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அனைத்து தட்பவெப்ப நிலைகளையும் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள அடல் சுரங்கப்பாதையானது 10 மீட்டர் அகலம் கொண்டது. இரு வழிப்பதையாக இது அமைக்கப்பட்டுள்ளது.

 

அடல் சுரங்கப்பாதை

 

திறப்பு விழாவிற்கு சுரங்கப் பாதை தயாராக உள்ள நிலையில், இதுபற்றி தலைமை பொறியாளர் பிருசோத்தமன் கூறுகையில், ‘அடல் சுரங்கப்பாதை 10 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை ஆகும். சுரங்கப்பாதையின் ஒவ்வொரு 60 மீட்டர் தொலைவிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும், ஒவ்வொரு 500 மீட்டர் தொலைவிலும் அவசரகால வெளியேறும் சுரங்கம் உள்ளது. அடல் சுரங்கப்பாதை பயன்பாட்டிற்கு வந்தால், மணாலி-லே இடையிலான பயண தூரம் 46 கிலோ மீட்டர் குறையும், பயண நேரத்தில் 4 மணி நேரம் மிச்சமாகும்’ என்றார்.