தமிழர் தேசிய நினைவெழுச்சி நாள்!

வெள்ளி டிசம்பர் 06, 2019

கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம், மார்க்கம் ஃபெயர் கிரவுண்ட் வெளியரங்கத் திடலில் கார்த்திகை 27 அன்று  முன்னெடுத்த தமிழர்  தேசிய நினைவெழுச்சி நாள், மிகவும்  உணர்வு  பூர்வமாக, மிகப் பெருந் திரளாகத்  திரண்டு வந்த மக்களின் எழுச்சி மிக்க  வருகையோடு உணர்வு பூர்வமாக  நடை பெற்றது.

கார்த்திகை 27இல், மார்க்கம் ஃபெயர் கிரவுண்டில் காலை 7.00 மணிக்கு முதல் நிகழ்வும், மதியம்.12.00 மணிக்கு  இரண்டாவது நிகழ்வும்  மாலை 6.00 மணிக்கு மூன்றாவது நிகழ்வும் என மூன்று நிகழ்வுகள்  வழமை போல் இடம் பெற்றன.

மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் தமது  இளைய  இன்னுயிர்களை  ஈகம்  செய்த  மாவீரர்களை  வணங்கும் இந்தப்  புனித  நாளைக்  கனடியத்  தமிழர்  நிiவெழுச்சி அகவமானது,  தேசியக் கட்டமைப்புக்கள், தமிழ்  இளையோர்  அமைப்பினர், உணர்வாளர்கள், செயற்பாட்டாளர்கள், மொழியார்வலர்கள், தன்னார்வத்  தொண்டர்கள், கனடா வாழ்  ஈழத்  தமிழ் மக்கள் என்று அனைவரது  ஒத்துழைப்போடும் எழுச்சியுடன் நடாத்தியுள்ளது.. 

வானம் பாடிகளின்  தாயகப்  பாடல்கள்,  நடனம், கவியரங்கம், மாணவர் பேச்சுக்கள்,  கவிதைகள், உரைகள், சிலம்பம், நாடகம் என்று  நடை பெற்ற  நிகழ்ச்சிகள்  அனைத்தும்  மாவீரர்  வீரத்தினையும், ஈகத்தினையும்,  தாயகப் பற்றினையும்  மக்கள்  துயரையும் ஈழ விடுதலையையும். வெளிப்படுத்தியிருந்தமை இங்கு குறிப்பிடத்  தக்கதாகும்.

மாவீரர்களது  ஒளிப் படங்கள் மிக  நேர்த்தியாக  ஒழுங்கமைக்கப் பட்டிருந்தமை, தாயகத்தில்  அமைக்கப்  பட்ட  துயிலும்  இல்லங்களின் முகப்பத்  தோற்றங்கள்  வைக்கப்  பட்டிருந்தமை, கல்லறைகள்  வரிசைப் பட்டிருந்தமை, சூடேற்றப் பட்ட  கொட்டகை  சிவப்பு,  மஞ்சள்  வர்ணங்களால்  அலங்கரிக்கப் பட்டிருந்தமை போன்ற விடயங்கள், மக்களின்  மனதில் மாவீரர்களது தாகத்தையும், இலக்கையும் மீள் பதிவு  செய்வதாக  அமைந்திருந்தது.

மாலை 6.00 மணிக்கு நடை பெற்ற  நிகழ்வுக்கு மக்களின் வருகையானது மிக, மிக அதிக அளவில் காணப்பட்டது. வீதிகளில் மட்டுமன்றி, நுழை வாசலிலும், மண்டபத்திற்குள்ளேயும், பல மணி நேரம்  பொறுமையாகக் காத்திருந்த மக்கள்,  கல்லறையில்  கார்த்திகைப்  பூ வைத்து  வீர வணக்கம்  செலுத்திச்  சென்றனர்.  இந்தக்  காட்சியானது,  தமிழர்களின்  தாகத்தை எல்லோருக்கும்  எடுத்துணர்த்தியுள்ளது.

மழைத் தூறலையும்  பொருட்படுத்தாது, மூதாளர்கள், பெண்கள், குழந்தைகள், குறிப்பாக  இளைஞர்கள் என்று  அனைவரும் கனடாவின்  பல  பாகங்களிலும்  இருந்து  வந்து மாவீரரை  வணங்கிச் சென்றமை தமிழர்  தேசிய  நினைவெழுச்சி  நாளின் உன்னதத்தை  உலகெங்கும்  எடுத்துணர்த்pயுள்ளது என்பது தான் உண்மையாகும்.  
அகவமானது, கனடா வாழ் ஈழத் தமிழ் மக்களின் ஒத்துழைப்போடு தனது  எதிர் காலப்  பணிகளைத் தொடரும்.     
 
  நன்றி. வணக்கம்.
  தமிழரின்  தாகம்  தமிழீழத்  தாயகம்.