தமிழினப் படுகொலை நிகழ்ந்ததை அங்கீகரிக்க மறுத்த பிரித்தானிய பழமைவாதக் கட்சித் தலைமை – வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்!

புதன் டிசம்பர் 11, 2019

தமிழர்களுக்கு சிறீலங்கா அரசு புரிந்தது இனப்படுகொலை என்பதை அங்கீகரிப்பதற்கு பழமைவாதக் கட்சித் (Conservative Party) தலைமை மறுத்தமை பற்றிய திடுக்கிடும் தகவல்கள் சங்கதி-24 இணையத்திற்குக் கிடைத்துள்ளன.

 

Boris-Mangala

 

தமிழர்களுக்கு இழைக்கப்பட்டது இனப்படுகொலை என்பதற்கு அங்கீகாரம் பெறும் மாநாடொன்றைக் கடந்த 24.10.2019 அன்று பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாடு செய்திருந்தது.

 

இதற்கு அனுசரணை வழங்கியிருந்த தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு, ஏனைய நாடுகளில் நிகழ்ந்த இனப்படுகொலைகளை அங்கீகரிப்பதில் முன்னிலை வகித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இம் மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என்று அறிவித்திருந்தது.

 

APPGT Letter

 

இம் மாநாட்டிற்கான இணை அனுசரணையை தொழிற்கட்சிக்கு ஆதரவான தமிழர்கள், பழமைவாதக் கட்சிக்கு ஆதரவான தமிழர்கள் ஆகிய இரு முன்னணி பிரித்தானியக் கட்சிசார் அமைப்புக்கள் வழங்கியிருந்தன.

 

இதில் தொழிற்கட்சிக்கு ஆதரவான தமிழர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் தொழிற்கட்சியின் தலைவரும், பிரித்தானிய மகாராணியின் அதிகாரபூர்வ எதிர்க்கட்சித் தலைவருமான ஜெரமி கோர்பின் அவர்கள் பங்கேற்றுத் தமிழர்களுக்கு ஆதரவாக உரையாற்றியதோடு, தமிழீழ தாயகத்தை விட்டு சிங்களப் படைகள் வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

 

இவரோடு தொழிற்கட்சியின் ஏனைய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் பங்கேற்று மாநாட்டில் உரையாற்றியதோடு, இம் மாநாட்டில் பங்கேற்ற தொழிற்கட்சியின் பன்னாட்டு வணிகத்துறை நிழல் அமைச்சர் பரி கார்டினர், தமது கட்சி ஆட்சிக்கு வந்தால் மனித உரிமைகளுக்கு சிறீலங்கா அரசாங்கம் மதிப்பளிப்பதன் அடிப்படையிலேயே அதற்கான வரிச்சலுகைகள் வழங்கப்படும் என்று எச்சரித்திருந்தார்.

 

இதேநேரத்தில் இம் மாநாட்டில் ஆளும் பழமைவாதக் கட்சியின் முன்னணி அமைச்சர்கள் பலர் கலந்து கொள்வார்கள் என்று நிகழ்வின் ஒழுங்கமைப்பாளர்களான தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர்கள் ஊடகவியலாளர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தனர்.

Email

 

அதிலும் குறிப்பாக பழமைவாதக் கட்சியின் நிதி அமைச்சர் சஜீத் ஜாவீட், வெளியுறவுத்துறை அமைச்சர் டொமினிக் ராப் போன்றோர் இம் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடும் என்று, பழமைவாதக் கட்சிக்கு ஆதரவான தமிழர்கள் அமைப்பின் பிரதிநிதிகளை மேற்கோள் காட்டி தமிழ் ஊடகவியலாளர்களுடன் உரையாடும் பொழுது அதிகாரபற்றற்ற முறையில் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர்கள் தெரிவித்திருந்தனர்.

 

எனினும் இவ்வாறு தெரிவிக்கப்பட்ட படி பழமைவாதக் கட்சியின் அமைச்சர்கள் எவருமே இம் மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை.

 

இதற்கு மாறாக தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவரும் பழமைவாதக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவருமான போல் ஸ்களி மற்றும் இன்னும் இரண்டு பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களான ரொபேர்ட் கல்போன், ரொம் ரகன்ட்ஹற் ஆகியோர் மட்டுமே மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினர். இம் மூவருமே பழமைவாதக் கட்சியின் கீழ்மட்டத்தைச் சேர்ந்தவர்களாவர்.

 

இவர்களை விட பழமைவாதக் கட்சியின் முன்னாள் தலைவரான இயன் டன்கன் ஸ்மித் அவர்கள் மாநாட்டிற்கு வருகை தந்திருந்த பொழுதும், ஒரு பார்வையாளராகப் பின் வரிசையில் அமர்ந்திருந்து விட்டு எதுவும் பேசாமல் இடை நடுவில் மண்டபத்தை விட்டு அவரும் நழுவிச் சென்று விட்டார்.

 

இதனால் அதிர்ச்சியடைந்த ஊடகவியலாளர் ஒருவர், இது பற்றி தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் ஒருவரிடம் வினவிய பொழுது பதிலுக்கு அது பற்றி பழமைவாதக் கட்சிக்கு ஆதரவான தமிழர்கள் அமைப்பின் பிரதிநிதிகளிடம் அவர் விளக்கம் கோரியுள்ளனர்.

 

இந்நிலையில் இதற்குத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர்களுக்குப் பதிலளித்த பழமைவாதக் கட்சிக்கு ஆதரவான தமிழர்கள் அமைப்பின் பிரதிநிதிகளில் ஒருவர், இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டாம் என்று அன்று காலை பிரித்தானிய வெளியுறவுத்துறை மற்றும் பொதுநலவாய அமைச்சில் இருந்து பழமைவாதக் கட்சியின் அனைத்து அமைச்சர்களுக்கும் கண்டிப்பான சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாகவும், இதனை அடுத்தே அவர்கள் எவருமே உறுதியளித்தபடி மாநாட்டில் பங்கேற்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

 

ஈழப்பிரச்சினைக்கு இருநாட்டுத் தீர்வைப் பழமைவாதக் கட்சி வலியுறுத்தியிருப்பதாக பழமைவாதக் கட்சியின் ஆதரவாளர்கள் மேற்கொண்டு வந்த பரப்புரைகள் உண்மைக்கு புறம்பானவை என்று ஏற்கனவே பழமைவாதக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான போல் ஸ்களி, தெரேசா விலியேர்ஸ் ஆகியோர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள நிலையில், தமிழர்களுக்கு இழைக்கப்பட்டது இனவழிப்பு என்பதை அங்கீகரிப்பதற்கு பழமைவாதக் கட்சியின் தலைமை மறுத்துள்ளமை பற்றிய திடுக்கிடும் தகவல்கள் தற்பொழுது வெளிவந்துள்ளமை பிரித்தானியாவாழ் தமிழீழ மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

Fox-Rajapaksa

 

பழமைவாதக் கட்சியின் தலைவரும், தற்போதைய பிரித்தானிய பிரதமருமான பொறிஸ் ஜோன்சன் அவர்கள் ரணில் விக்கிரமசிங்கவின் நண்பர் என்பதோடு, அவரது கட்சியில் அமைச்சுப் பதவி வகிக்கும் லியம் பொக்ஸ் என்பவர் மகிந்த ராஜபக்சவோடு நெருங்கிய இரகசிய உறவைப் பேணி வந்தமைக்காக பிரதமர் டேவிட் கமரூனின் ஆட்சிக்காலத்தில் பதவி விலகும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Fox-Rajapaksa