தமிழ் வாக்குகளுக்காகப் பதறும் பிரித்தானியப் பிரதமர் – ஆனால் தமிழ் இனப்படுகொலை, தன்னாட்சியுரிமை பற்றிப் பேசத் தொடர்ந்து தயக்கம்!

வியாழன் டிசம்பர் 12, 2019

இன்று பிரித்தானியாவில் நடைபெறும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் தொழிற் கட்சிக்குத் தமிழர்கள் வாக்களிக்க உள்ள நிலையில் அவசர காட்சிப்பதிவு ஒன்றை பிரதமர் பொறிஸ் ஜோன்சன் வெளியிட்டுள்ளார்.

 

கடந்த முப்பத்தாறு ஆண்டுகளாகத் தமிழ் மக்களின் தன்னாட்சி உரிமைக்காகவும், தமிழ் இனப்படுகொலைக்கு அனைத்துலக நீதி வேண்டியும் குரல்கொடுப்பவர் இன்றைய தொழிற்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின். அவருக்குப் பக்கபலமாகத் தமிழர்களுக்கு துணை நிற்பவர் தொழிற் கட்சியின் நிழல் நிதித்துறை அமைச்சர் ஜோன் மக்டொனல்.

 

Vote Labour

 

ஈழத்தீவில் ஆயுதப் போர் நிகழ்ந்த பொழுது தொழிற் கட்சியின் பின் வரிசை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ஜெரமி கோர்பின் 2015ஆம் ஆண்டு தொழிற் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.

 

Corbyn

 

இதனைத் தொடர்ந்து பிரித்தானிய நாடாளுமன்றில் தொழிற் கட்சிக்கு ஆதரவான தமிழர்கள் அமைப்பு ஏற்பாடு செய்த ஒவ்வொரு முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்து கொண்ட ஜெரமி கோர்பின், ஜோன் மக்டொனல் ஆகியோர், தமிழீழ தாயகத்தை விட்டு சிங்களப் படைகள் வெளியேற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வந்ததோடு, தமது கட்சி ஆட்சிக்கு வந்தால் சிறீலங்கா மீது ஆயுதத் தடை விதிக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தனர்.

 

John

 

அத்தோடு அண்மையில் வெளிவந்த தொழிற் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூட ஈழத்தீவில் தமிழ் மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு தொழிற் கட்சியின் தலைமையிலான எதிர்கால பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் உறுதியளிக்கப்பட்டிருந்தது.

 

தவிர இது விடயமாக காட்சிப் பதிவு ஒன்றை வெளியிட்ட தொழிற் கட்சியின் நிழல் நிதித்துறை அமைச்சர் ஜோன் மக்டொனல், ஈழப்பிரச்சினைக்கான எந்தவொரு அரசியல் தீர்வும் தமிழ் மக்களின் தன்னாட்சி உரிமையை அங்கீகரிக்கும் வகையில் அமைவது அவசியம் என்று குறிப்பிட்டிருந்ததோடு, அங்கு தமிழ் இனத்தை அழிக்கும் முயற்சியில் சிறீலங்கா அரசு ஈடுபட்டதாகவும் குற்றம் சுமத்தியிருந்தார்.

 

இதனால் இன்று நடைபெறும் பிரித்தானிய நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் தொழிற் கட்சிக்கு வாக்களித்து அதன் வெற்றிக்கு வழிசமைப்பதென்று பிரித்தானியத் தமிழர்கள் தீர்மானித்துள்ளனர்.

 

இந்நிலையில் பிரித்தானியாவில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் சில தொகுதிகளில் ஆளும் பழமைவாதக் கட்சியின் வேட்பாளர்கள் தோல்வியடையக் கூடிய அபாய சூழல் எழுந்துள்ளது.

 

இதனால் பதற்றமடைந்திருக்கும் ஆளும் பழமைவாதக் கட்சியின் தலைவரும், பிரித்தானியப் பிரதமருமான பொறிஸ் ஜோன்சன், பிரித்தானியத் தமிழர்களைக் இலக்கு வைத்து அவசர அவசரமாக நேற்று நள்ளிரவு கடந்து இன்று அதிகாலை 00:00 மணிக்குத் தனது கீச்சகப் பக்கம் ஊடாகத் தமிழர்களுக்கான காட்சிப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

Boris Tweet

 

‘வணக்கம்’ என்று தமிழில் தொடங்கி ‘நன்றி’ என்று தமிழில் தனது காட்சிப் பதிவை நிறைவு செய்யும் பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்சன், பிரித்தானியாவின் தேசிய சுகாதாரச் சேவை, கல்வி, வாணிபம் ஆகிய துறைகளில் தமிழர்கள் வழங்கும் பங்களிப்பிற்கு நன்றி தெரிவிக்கின்றார்.

 

பிரித்தானியாவில் அவுஸ்திரேலியா பாணியில் இறுக்கமான குடிவரவு நடைமுறைகளை அமுல்படுத்தப் போவதாகத் தமிழ் மக்களிடம் சிறுபிள்ளைத்தனமாகக் கூறும் பொறிஸ் ஜோன்சன், தமிழ் அகதிகள் பற்றி எந்த வார்த்தைகளையும் பேசுவதையும் தவிர்த்துக் கொள்கின்றார்.

 

மேலும் ஈழத்தீவில் சமாதானமும், நல்லிணக்கமும், பொறுப்புக் கூறலும் நிகழும் என்று தான் நம்புவதாக இக்காட்சிப் பதிவில் தெரிவிக்கும் பிரித்தானியப் பிரதமர், ஈழத்தீவில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்டது ஒரு இனவழிப்பு என்பதைப் பற்றிப் பேசுவதைத் தவிர்த்துக் கொள்கின்றார்.

 

குறைந்த பட்சம் ஈழத்தீவில் நிகழ்ந்தவை போர்க்குற்றங்கள், மானிடத்திற்கு எதிரான குற்றச்செயல்கள் போன்ற சொற்பதங்களைக் கூடத் தனது காட்சிப்பதிவில் கையாளப் பின்னடிக்கும் பொறிஸ் ஜோன்சன், மாறாக ‘அங்கு நிகழ்ந்த சம்பவங்கள்’ என்று மட்டும் மொட்டையாகக் கூறுகின்றார்.

 

கடந்த 24.10.2019 அன்று பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாடு செய்திருந்த தமிழர்களுக்கு இழைக்கப்பட்டது இனவழிப்பு என்பதை அங்கீகரிக்கும் மாநாட்டைப் பொறிஸ் ஜோன்சனின் பழமைவாதக் கட்சி புறக்கணித்தமை பற்றிய அதிர்ச்சித் தகவலை நேற்று சங்கதி-24 இணையம் வெளியிட்டிருந்தது.

 

தவிர மத்திய கிழக்கில் இருநாட்டுத் தீர்வை வலியுறுத்தித் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்ட பழமைவாதக் கட்சி, ஈழப்பிரச்சினைக்குத் தீர்வாக நல்லிணக்கம், சமாதான ஆகிய உப்புச் சப்பற்ற நிலைப்பாடுகளையே அதே தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கியிருந்ததையும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சங்கதி-24 இணையம் அம்பலப்படுத்தியிருந்தது.

 

இந்நிலையில் தமிழ் மக்களின் வாக்குகளைப் பழமைவாதக் கட்சி இழக்கலாம் என்ற பதற்றத்தில் இரவோடு இரவாகத் தமிழ் மக்களைக் குறிவைத்துத் தனது கீச்சகப் பக்கம் ஊடாகக் காட்சிப் பதிவை பொறிஸ் ஜோன்சன் அவர்கள் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Vote Labour

 

Boris Johnson
Labour Party - John McDonnell