தமிழ் பிறவி மட்டும் எடுத்து விடாதே - சேரமான்

சனி செப்டம்பர் 26, 2020

பாரதத்தின் முகத்திரை கிழிக்கப் 
பட்டினிப் போர் நீ தொடுத்தாய்.

ஒரு துளி நீர் கூட அருந்தாது
துடிதுடித்து நீ மடிந்த பொழுது
கிழிந்து தொங்கியது 
காந்தி தேசத்தின்
முகத்திரை மட்டுமல்ல.

ஒரு துளி வியர்வை சிந்தாது,
ஒரு சொட்டு உதிரமும் சொரியாது,
மூன்று தசாப்தங்கள் கழித்து
முகநூலிலும்,
சூமிலும்,
யூடியூபிலும்,
வட்ஸ் அப்பிலும்,
வைபர் குறூப்பிலும்
களமாடிக் கனவுலகில்
தமிழீழம் அமைக்கும்
ஆளுமை படைத்த
வாய்ப் பேச்சு
வீரத்தமிழர்களின் 
முகத்திரையும் தான்
நீ வீழ்ந்த பொழுது
கிழிந்து தொங்கியது.

மக்கள் புரட்சி வெடிக்கட்டும்,
சுதந்திர தமிழீழம் மலரட்டும்
என்று முழங்கி நீ வீழ்ந்தாய்.

நல்லூர் இராசதானியில் 
உனக்காக 
ஒரு மெழுகுதிரியேனும்
ஏற்றுவதற்கு
வெடிக்காத மக்கள் புரட்சி 
இனியா வெடிக்கப் போகின்றது?

மக்கள் என்ன மக்கள்?
எல்லாம்... 

உனக்கினியொரு பிறவி இருந்தால்
தமிழ் பிறவி மட்டும் எடுத்து விடாதே.

உன் வழியில் வீழ்ந்த
மாவீரர்களிடமும்
இதை மறக்காமல் சொல்லி விடு.

- சேரமான்