தகுதி நீக்கமும் தகிடுதத்தமும்!

புதன் பெப்ரவரி 26, 2020

‘நானும், இந்த ஆணையத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு பொது வழக்கினை மேற்கொள்கின்றோம். உண்மையில் எங்களது வீட்டினை நாங்களே சுத்தம் செய்வதற்காக, உலகத்தின் கண்கள் முன் களையயடுக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

இது எங்கள் ஜனநாயகத்தின் அதீத பலம். இந்த நடவடிக்கை எமது அரசியலை மீண்டும் சீர்படுத்தும். இந்த வோட்டர்கேட் விவகாரம் ஜனாதிபதியையே விசாரிக்கும் ஆவணமாக அமைந்துள்ளது’ என 17 மே 1973 இல் செனட்டர் ஹேவார்ட் பேக்கர், ஜனாதிபதி நிக்சனிற்கு எதிரான வழக்கில் கூறியிருந்தார்.

இதன் தொடர்ச்சியாக ஐரோப்பா சென்றிருந்த அமெரிக்க ஜனாதிபதி நிக்சன், செனட் சபையால் உடனடியாக அழைக்கப்பட்டுத் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, ஜனாதிபதிப் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார்.

111

இது ஒரு ஊடகவியலாளரின் புலனாய்விற்குக் கிடைத்த ஜனநாக வெற்றியாகக் கொண்டாடப்பட்டது.

அதே அமெரிக்காவில், இன்று குற்றவாளி என்று கூறப்பட்ட டொனால்ட் ட்ரம்ப், தனக்கு எதிராகச் சாட்சியம் கூறியவர்களை வேட்டையாடும் சர்வாதிகார நடவடிக்கையில் களம் இறங்கி உள்ளார்.

46 வருடங்களிற்கு முன்னர் செனட் சபையாலும் ஒட்டுமொத்த அமெரிக்காவினதும் ஜனநாயகப் பலம், ட்ரம்பின் காலடியில் சிக்கி மூச்சுத் திணற ஆரம்பித்துள்ளது.

டொனால்ட் ட்ரம்பின் உக்ரைன் அரசுடனான சட்டவிரோதத் தொடர்பாடல்கள் இன்று ட்ரம்பிற்கு எதிரான பெரும் குற்ற ஊழலாகவும், அவரைத் தகுதிநீக்கம் செய்யவேண்டும் என்ற வழக்கும் விசாரணைகளும் மிகவும் பலம்பெறத் தொடங்கிய நிலையில், இவற்றையயல்லாம் தனது எல்லை மீறிய அதிகாரப் போக்கினால் தகர்த்தெறியும் நடவடிக்கையில் ட்ரம்ப் இறங்கி உள்ளார்.

ஜனநாயகத்தைக் காக்கப் போராடிய செனட் சபையின் ஒரு பகுதி, இன்று நாட்டிற்கெதிரான சதிக் குற்றம் சாட்டப்பட்ட ட்ரம்பைக் காப்பாற்றும் கூடாரமாக மாறி உள்ளது.

உக்ரைன் அரசுடனான ட்ரம்பின் சதியாலோகளைச் செவிமடுத்த தேசியப் பாதுகாப்பு சபையின், லெப்டினன் கேணல் அலெக்சாண்டர் விண்ட்மன் மீது டொனால்ட் ட்ரம்பின் அதிகாரம் பாய்ந்துள்ளது.

இவரின் நேரடிச் சாட்சியமே ட்ரம்பிற்கு எதிரான கண்டனத் தகுதிநீக்க வழக்கின் ஆரம்பப் புள்ளியாக அமைந்துள்ளது.

உக்ரைனில் பிறந்த இந்த இராணுவப் புலனாய்வு அதிகாரி அலெக்சாண்டர் விண்ட்மன், சிறு வயதிலேயே அமெரிக்காவிற்கு வந்துள்ளார். இவர் ஈராக் போரில் காட்டிய அதியுச்சத்திறமைக்காகவும், அந்தப் போரில் காயமடைந்ததற்காகவும், இராணுவத்தின் கெளரவம் மிக்க விருதான ஊதா இதயம் (Purple Heart) என்று அழைக்கப்படும் பதக்கத்தைப் பெற்றும் இருந்தார்.

111

கடந்த யூலை மாதம் 25ம் திகதி, உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் யஸலன்ஸ்கியுடன் டொனாலட் ட்ரம்ப் மேற்கொண்ட தொலைபேசி உரையாடல், அமெரிக்க இராஜாங்க விதிகளிற்கு மீறியதாகவும், தேசவிரோதமாக இருந்ததாகத் தான் உணர்ந்ததாகவும் தெரிவித்த விண்ட்மன், உடனடியாக அதனைத் தனது மேலதிகாரியான ஐசன்பேர்க்கிடம் தெரிவித்துள்ளார்.

விண்ட்மன், தேசியப் பாதுகாப்புச் சபையின் வெள்ளைமாளிகைப் பிரிவில், உக்ரைன் விவகாரங்களிற்கான தலைமை அதிகாரியாகப் பணியாற்றி வந்துள்ளார்.

அந்தச் சமயத்தில் உக்ரைன் ஜனாதிபதியை அழைத்து, அமெரிக்காவின் 47வது உப ஜனாதிபதியாகவிருந்த (2009-2017) ஜோ பைடன் மற்றும் அவரது மகன்கள் தொடர்பாகப் புலனாய்வு செய்து வழங்குமாறு டொனால்ட் ட்ரம்ப் கோரியுள்ளார்.

ஒரு அமெரிக்கப் பிரசையை, வேறு ஒரு நாட்டின் அரசைக் கொண்டு புலனாய்வு செய்யக் கோருவது, தேசத்துரோகக் குற்றம் என்று கருதிய விண்ட்மன், உடனடியாக அந்தத் தகவலைத் தனது மேலதிகாரிக்குத் தெரிவித்துள்ளார்.

தான் கேட்டவர்கைளப் பற்றிப் புலனாய்வு செய்து தந்தால் உக்ரைனிற்கான அணுவாயுத அபிவிருத்திக்கு உதவுவதாகவும், தொடர்ச்சியான வியாபார ஒப்பந்தங்களைப் போடுவதாகவும், உக்ரைன் ஜனாதிபதிக்கு டொனால்ட் ட்ரம்ப் வாக்குறுதி அளித்ததாகவும், விண்ட்மன் தனது சாட்சியத்தில் தெரிவித்துள்ளார்.

ஒரு அரசியல் எதிர்க்கட்சியாளனைப் புலனாய்வு செய்வதற்கு உக்ரைனை ட்ரம்ப் நாடியது, 2006 ஆம் ஆண்டுத் தேர்தலிலும், பைடனிற்கு எதிராகவும், புரிஸ்மாவிற்கு எதிராகவும் கூட, உக்ரைன் களமிறங்கி ட்ரம்பின் வெற்றியை உறுதி செய்திருக்கக்கூடும் என்றும் இது ஒரு தேசவிரோதக் குற்றம் என்றும், ஒரு முன்னாள் உபஜனாதிபதியினதும் அவரது குடும்பத்தினரினதும் தகவல்களை ட்ரம்ப் வெளிநாட்டிற்கு வழங்கியிருப்பது, அரசாங்கத் தகவல்களை விற்றமைக்குச் சமமானது என்றும், இவர் மீதான தகுதி நீக்கக் குற்றச்சாட்டில் ஆதாரங்களுடன் தெளிவுபடுத்தப்பட்டிருந்தது.

இந்தத் தகவல்களைத் தனது மேலதிகாரிக்கு வழங்கிய தேசியப் பாதுகாப்புச் சபையின் அதிகாரி லெப்.கேணல் அலெக்சாண்டர் விண்ட்மன்,  ட்ரம்ப்பினால் உடனடியாக வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

அதேநேரம் அலெக்சாண்டர் விண்ட்மனின் இரட்டைச் சகோதரனான யயவ்கெனி விண்ட்மன், தேசியப் பாதுகாப்புச் சபையின் நெறிமுறை வழக்கறிஞராகப் பணியாற்றி வந்துள்ளார். அலெக்சாண்டரை வெளியேற்றிய அதே நேரம், ட்ரம்ப் நிர்வாகம், யயவ்கெனியையும் பதவியில் இருந்து வெளியேற்றி உள்ளது.

தேசியப் பாதுகாப்புச் சபையின் ஆலோசகரான விண்ட்மனை வெளியேற்றிய ட்ரம்ப், அமெரிக்காவின் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதரும் இராஜதந்திரியான கோர்டன் சொண்ட்லாண்ட் இனையும் பதவி நீக்கம் செய்துள்ளார்.

ஆனால் இவர் இந்தப் பதவியைப் பெறுவதற்காக, அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்ற அன்று ஒரு மில்லியன் டொலர் நன்கொடை வழங்கி இருந்ததாகவும் கூடத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவராக இருந்தாலும் இவரிடம், இவரது எல்லைதாண்டிய உக்ரைன் விவகாரங்களும் ட்ரம்பினால் ஒப்படைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன் மூலமே உக்ரைன் தொடர்பான குற்றச்சாட்டில் இவர் பங்கும் உள்ளதாக, ட்ரம்ப் இவரையும் பழிவாங்கி உள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுகளிற்கான சாட்சியங்களை அச்சுறுத்தும் பாணி
யில் ட்ரம்பின் நடவடிக்கைககள் அமைந்துள்ளன.

அரெக்சாண்டர் விண்ட்மன்னைப் பதவிநீக்கம் செய்தது மட்டுமல்லாது, அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்றுமாறும், தண்டனை வழங்குமாறும், இராணுவத்திடமும், தேசியப் பாதுகாப்புச் சபையிடமும் ட்ரம்ப் ஆணையிட்டிருந்தார்.

ஆனால் இந்த இரண்டு பிரிவுகளும், தாங்கள் கற்பித்ததை, அலெக்சாண்டர் விண்ட்மன் மிகவும் சரியாகவே செய்துள்ளார் என்றும், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்றும் மறுப்புத் தெரிவித்துள்ளன.

இது ட்ரம்பின் முகத்தில் அறைந்தது போலான அதிர்ச்சியை அவரிற்கு வழங்கி உள்ளது. அத்துடன் அலெக்சாண்டர் விண்ட்மன்னை உடனடியாகத் தாங்கள் பெண்டகன் பிரிவில் இணைத்துக் கொள்ள உள்ளதாகவும், தேசியப் பாதுகாப்புச் சபை தெரிவித்துள்ளது.

‘அலெக்சாண்டர் விண்ட்மன் ஜனாதிபதியின் நடவடிக்கைகளிற்கு எதிராகச் சாட்சியம் வழங்கியமை, அவரது தேசப்பற்றிற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

விண்ட்மனின் தேசப்பற்றும், துணிச்சலும் வெள்ளை மாளிகையால் புரிந்து கொள்ளப்படவிலலை’ என சர்வதேச உறவுகளிற்கான செனட் சபையின் உயர்மட்ட செனட்டரான ரொபேர்ட் மெண்டெஸ் தெரிவித்துள்ளார்.

விண்டமன்னின் ட்ரம்ப் மீதான குற்றச் சாட்சியத்தில், உப ஜனாதிபதி மைக்பென்ஸ் இன் காரியதரிசியான ஜெனிபர் வில்லியம்ஸ், மற்றும் உக்ரைனிற்கான அமெரிகத் தாதரகத்தின் பதில் தூதராக இருந்த பில் டெய்லர் ஆகியோரும் இணைந்துள்ளனர்.

ட்ரம்பின் உக்ரைன் ஜனாதிபதியுடனான தொடர்பானது, பொறுத்தமற்றதும், அரசிற்கு எதிரனது என்றும் ஆபத்தானது என்றும் இவர்களும் சாட்சியமளித்துள்ளனர்.

தன் மீதான இந்தக் குற்றச்சாட்டுக்களையும், சாட்சிகளையும் மறக்கடிக்கவும் முறியடிக்கவும் ட்ரம்ப் பெரும் தகிடு தத்தத்தில் இறங்கினார். அதுதான் ஈரான் இராணுவத் தளபதியின் மீதான இராணுவத் தாக்குதல் மற்றும் ஈரானிற்கு எதிரான போர் முனைப்பு. ஒரு குற்றக்கோட்டை மறைக்க அதன் அருகில் பெரும் கோடு ஒன்றைப் போட ட்ரம்ப் முனைந்துள்ளார்.

இதற்கான பெரும் இராணுவ நடவடிக்கையை, ட்ரம்ப் நினைத்தது போல் ஈரான் எடுக்காமல் போகவே, இன்று இஸ்ரேலை வைத்து, பலஸ்தீனத்தின் நிலங்களைப் பறிப்பதிலும், இஸ்ரேலை வைத்து சிரியா மீது கொடூரத் தாக்குதலை மேற்கொள்ள வைத்துப் பெரும் படுகொலைகளைச் செய்தும், தன் மீதான குற்றச்சாட்டுக்களை மடைமாற்றும் வித்தையில் இறங்கியுள்ளார்.

இதற்காக ஒடுக்கப்பட்ட சிரியா, பலஸ்தீன மக்களின் உயிர்களைப் பழிவாங்கவும் ட்ரம்ப் தயங்கவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது.

இதனைத் தொடர்ந்து, இன்று இந்திய சிறுபான்மை மக்களின் குரல்களை ஒடுக்கி,அவர்களை ஹிட்லர் பாணியிலான தடைமுகாம்களில் அடைக்கும் நடவடிக்கைளை மெற்கொண்டும் வரும் நரேந்திர மோடி, எதிர்வரும் 24ம் திகதி டொனாலட் அரம்பினை இந்தியாவிற்கு அழைத்து, பெரும் மாநாடுகளை இலட்சக்கணக்கான மக்களைத் திரளவைப்பேன் என்ற உறுதிமொழி வழங்கி ஏற்பாடுகளை ஆரம்பித்து உள்ளார்.

அடக்குமுறையாளர்களும், மக்கள் மீதான கொடூரத் தாக்குதல்களைத் தங்களது அரசியல் இலாபங்களிற்காகச் செய்யும் வன்முறையாளர்கள், என்றும் ஒன்றாகக் கைகோர்த்தே இருப்
பதை வரலாறு தனது பல தடங்களில் பதிவு செய்துள்ளது.

-சோழகரிகாலன்-

நன்றி: ஈழமுரசு