தீவுகளிலிருந்து மருத்துவ சிகிச்சைக்காக ஆஸ்திரேலியா செல்ல மறுக்கும் அகதிகள்

திங்கள் செப்டம்பர் 14, 2020

ஆஸ்திரேலியாவில் மருத்துவ சிகிச்சையின்றி தடுப்பில் வைக்கப்படுவோம் என அஞ்சி நவுருத்தீவிலிருந்து அகதிகள் வெளியேற மறுத்து வருவதாக நல வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். 

கடந்த வாரம் நவுருத்தீவிலிருந்து ஆஸ்திரேலியாவின் டார்வின் நகருக்கு மாற்றப்பட்ட அகதிகள் ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுதப்பட்டுள்ள நிலையில், பிற அகதிகள் மருத்துவ சிகிச்சைக்கு செல்ல மறுப்பதாக அகதிகள் நல வழக்கறிஞர் ஐன் ரிண்டோல் தெரிவித்திருக்கிறார்.

“நவுருத்தீவில் இருந்த சூழ்நிலைகளைக் காட்டிலும் மோசமாக ஆஸ்திரேலியாவில் இந்த அகதிகள் தடுப்பில் வைக்கப்பட உள்ளது,” எனக் கூறியுள்ளார் ஐன் ரிண்டோல்.


ஆஸ்திரேலியாவின் அருகாமையில் உள்ள தீவு நாடுகளாக அறியப்படும் பப்பு நியூ கினியா மற்றும் நவுருத்தீவில்  ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து சுமார் 200 அகதிகள் மருத்துவ வெளியேற்றச் சட்டத்தின் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு மருத்துவ சிகிச்சைக்காக ஆஸ்திரேலியா கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அங்கு அவர்கள் குடியேற்றத் தடுப்பு முகாம்களிலும் தடுப்பிற்கான மாற்று இடங்களாக அறியப்படும் ஹோட்டல்களிலும் சிறைவைக்கப்பட்டுள்ளனர். 

இந்த சூழலில், இப்படி வைக்கப்பட்டுள்ள பாதி பேருக்கு முறையான மருத்துவ சிகிச்சை வழங்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார் ரிண்டோல். அத்துடன், ஆஸ்திரேலிய குடியேற்றத் தடுப்பில் உள்ளவர்களிடம் அலைப்பேசிகளை பறிமுதல் செய்வது தொடர்பான சட்டத்திருத்தம் அகதிகள் பலரிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக ரிண்டோல் தெரிவித்துள்ளார்.