டெல்லி வன்முறை : புதிய சிறப்பு காவல் ஆணையர் நியமனம்!

புதன் பெப்ரவரி 26, 2020

டெல்லியில் வன்முறை நடைபெற்ற நிலையில் சட்டம் ஒழுங்கு துறையின் சிறப்பு காவல் ஆணையராக எஸ்.என். ஸ்ரீவஸ்தவா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் தலைநகர் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்தது. 

வடகிழக்கு டெல்லியின் மாஜ்பூர், ஜாபராபாத், சீலம்பூர், சந்த்பாக் என பல்வேறு பகுதிகளிலும் இரு தரப்பினருக்கும் இடையே நேற்றுவரை நடந்த மோதல்களில் கடைகள், கார்கள் என தங்கள் கண்ணில் பட்டவற்றையெல்லாம் வன்முறையாளர்கள் தீவைத்து கொளுத்தி அராஜகத்தில் ஈடுபட்டனர்.

இந்த வன்முறை சம்பவங்களில் இதுவரை தலைமை காவலர் ரத்தன் லால் உள்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். 130-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

 

சிறப்பு காவல் ஆணையராக எஸ்.என். ஸ்ரீவஸ்தவா

 

இந்நிலையில், டெல்லி சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் கொண்டுவருவது தொடர்பாக ஐபிஎஸ் அதிகாரி எஸ்.என். ஸ்ரீவஸ்தவா சிறப்பு போலீஸ் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் பணியாற்றி வந்த இவர் நேற்று டெல்லி சிறப்பு போலீஸ் ஆணையராக நியமிக்கப்பட்டார். 

 

டெல்லியில் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் அரங்கேறிவரும் நிலையில் எஸ்.என். ஸ்ரீவஸ்தவாவின் நியமனம் உடனடியாக செயல்பாட்டிற்கு வருவதாக உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.