ரூ.32 லட்சத்துக்கு ஏலம் போன நண்டு!

வெள்ளி நவம்பர் 08, 2019

கடல்வாழ் உயிரினங்களில் மிகவும் பழமையானது நண்டு. உலகில் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட நண்டு வகைகள் உள்ளன. இதில் புரதச் சத்து, மாவுச் சத்து, கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, அயோடின், வைட்டமின் பி, சி போன்றவை நிறைந்து காணப்படுகின்றன.

மீன்கள், இறால்களுக்கு அடுத்து வணிக சந்தையில் நண்டுகளுக்கு அதிக கிராக்கி உள்ளது. ஜப்பானில் இப்போது பனிக்காலம். இந்த பனிக்காலத்தில் பிடிபடும் நண்டுகளை ஜப்பானியர்கள் மிகவும் விரும்பி சாப்பிடுகின்றனர். அந்த நாட்டின் ஹோன்சூ தீவில், டோட்டோரி மீன் பிடி துறைமுகத்தில் நேற்று பனிக்கால நண்டுகள் ஏலம் விடப்பட்டன.

இதில் ஒரு நண்டு ரூ.32 லட்சத்து 61,000-க்கு ஏலம் எடுக்கப்பட்டது. அந்த நண்டு 14.6 செ.மீ. நீளமும் 1,240 கிராம் எடையும் கொண்டதாகும். “நாங்கள் எதிர்பார்க்காத விலையில் நண்டு ஏலம் எடுக்கப்பட்டிருக்கிறது. இது கின்னஸ் சாதனையிலும் இடம்பிடித்துள்ளது” என ஏல நிறுவனம் தெரிவித்தது.