ரோஹிங்கியா அகதிகளுக்கு கடவுச்சீட்டு வழங்குங்கள்!

சனி அக்டோபர் 10, 2020

 கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு, சவுதி அரேபியாவில் தஞ்சமடைந்த சுமார் 54,000 ரோஹிங்கியா அகதிகளுக்கு வங்கதேசம் பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. 

சவுதி அரேபியாவில் நாடற்ற மக்களை வைத்துக்கொள்ளப்பட மாட்டார்கள் என்பதால் அவர்களுக்கு வங்கதேச பாஸ்போர்ட் வழங்கினால் உதவியாக இருக்கும் என சவுதி அரசு தெரிவித்துள்ளதாக வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல் மொமன் தெரிவித்துள்ளார். 

சவுதி அரேபியாவிலேயே பிறந்து அரபு மொழியை நன்குப் பேசத் தெரிந்த ரோஹிங்கியா குழந்தைகளுக்கு கூட சவுதி குடியுரிமை இதுவரை வழங்கப்படவில்லை. பெருமளவிலான வங்கதேச தொழிலாளர்கள் சவுதியில் பணியாற்றி வரும் நிலையில், ரோஹிங்கியாக்களுக்கு பாஸ்போர்ட் வழங்கச்சொல்வது மறைமுக மிரட்டலாகவும் இருக்கக்கூடும் எனப்படுகின்றது. 

இதில் பல அகதிகள் வங்கதேசத்திற்கு வந்தது கூட கிடையாது என்கிறார் வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் மொமன். 

தற்போதைய நிலையில், சுமார் 20 லட்சம் வங்கதேச தொழிலாளர்கள் சவுதியில் பணியாற்றுவதன் மூலம் அந்நாட்டிற்குள் சவுதியிலிருந்து 3.5 பில்லியன் டாலர்கள் வந்து சேர்கின்றது. 

இந்த சூழலில், வங்கதேசம் சவுதியில் உள்ள ரோஹிங்கியா அகதிகளுக்கு பாஸ்போர்ட் தர மறுத்தால்உள்ள, வங்கதேச தொழிலாளர்களை சவுதிக்குள் அனுமதிக்கும் எண்ணிக்கை குறைக்கப்படும் எனக் கூறப்படுகின்றது. 

ஏற்கனவே வங்கதேசத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்கியா அகதிகள் உள்ள சூழலில் சவுதியின் எண்ணம் வங்கதேசத்துக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகின்றது.