ரஜினிக்கு வலை விரிக்கும் கமல்!

வியாழன் ஓகஸ்ட் 08, 2019

தேர்தலில்,திராவிட கட்சிகளை ஓரம் கட்டுவதற்காக, ரஜினியுடன் கைகோர்க்க, மக்கள் நீதி மையத் தலைவர்,கமல் தயாராகி வருகிறார்.

மக்கள் நீதி மையம் கட்சியை துவக்கிய, நடிகர் கமல், லோக்சபா தேர்தலில், துக்கடா கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, தேர்தலை சந்தித்தார்.சென்னையில் மட்டும்,ஓரளவு கணிசமான ஓட்டுகளை பெற்றார்;மற்ற தொகுதியில்,'டிபாசிட்' பெறவே, கடுமையாக போராட வேண்டி இருந்தது. இந்நிலையில்,வேலுார் லோக்சபா தேர்தலில்,மக்கள் நீதி மையம் போட்டியிடவில்லை.

அடுத்து வரும், சட்டசபை தேர்தலுக்காக, கட்சியை பலப்படுத்தும் பணிகளில்,கமல் கவனம் செலுத்தி வருகிறார்.சமீபத்தில்,'பிக்பாஸ்' என்ற,'டிவி'தொடரில் பேசிய கமல்,'மக்களின் நலனுக்காக, ரஜினியுடனும் கூட்டணி சேரத் தயார்' என்றார்.

லோக்சபா தேர்தல் தோல்வியில், பாடம் கற்ற கமல், திராவிட கட்சிகளை, சட்டசபை தேர்தலில் எதிர்க்க, வலுவான கூட்டணி தேவை என, உணர்ந்துள்ளார். தமிழகத்தில் மற்ற கட்சிகள் அனைத்தும்,திராவிட கட்சிகளுடனேயே கூட்டணி அமைத்துள்ளன.

ரஜினி கட்சியை ஆரம்பித்தால்,சட்டசபை தேர்தலில்,கமல்,அவருடன் நிச்சயம் கூட்டணி அமைப்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது.ரஜினி மக்கள் மன்றத்தை துவக்கி, உறுப்பினர் சேர்க்கை மற்றும் நிர்வாகிகளின் பலத்தை அதிகப்படுத்தி வரும் ரஜினியை, தங்கள் பக்கம் இழுக்க, பா.ஜ.,வும் தீவிரமாக முயன்று வருகிறது.