ராஜபக்சக்களின் மீள் எழுச்சியும் ஜெனீவா மனித உரிமைச் சபையின் தடுமாற்றமும்

செவ்வாய் செப்டம்பர் 15, 2020

 ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் இயங்கும் ஜெனீவா மனித உரிமைச் சபையின் அமர்வுகள் 14ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில். தமிழ்க் கட்சிகள் எந்தவொரு கருத்து வெளிப்பாடுகளுமின்றி அமைதியாக இருக்கின்றன. கோட்டாபய ராஜபக்ச. மகிந்த ராஜபக்ச ஆகியோரை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன அரசாங்கம் ஜெனீவாவின் இலங்கை தொடர்பான தீர்மானத்தில் இருந்து வெளியேறிய நிலையில், செப்பெரம்பர் மாத அமர்வு திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ளது. எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 4ஆம் திகதி வரை நடைபெறவுள்ள அமர்வில் இலங்கைத் தீர்மானம் பற்றி மீளாய்வு செய்யப்படுமா இல்லையா என்பது குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.

மியன்மார், யேர்மன், கம்போடியா, கொங்கோ வெனிசுலா சிரியா தென்சூடான் ஆகிய நாடுகளின் விவகாரங்களும் மற்றும் மரண தன்டனைச் சட்டங்கள் பற்றிய விவகாரங்களோடு நாடுகளின் மனித உரிமைகள் பற்றிய விடயங்களுமே நிகழ்ச்சி நிரலில் இணைக்கப்பட்டுள்ளன.

ஆனாலும் நேற்றுத் திங்கட்கிழமை இடம்பெற்ற அமர்வின் முதல் நாள் ஆரம்ப உரையில் இலங்கை விவகாரம் குறித்து மனித உரிமைச் சபையின் ஆணையாளர் மிச்செல் பச்செல்ற் (Michelle Bachelet) சில மென் கருத்துக்களை மாத்திரம் வெளியிட்டுள்ளர். அதாவது மனித உரிமைகள் மற்றும் 20ஆவது திருத்தச் சட்டம் ஜனநாயகத்துக்கு மாறாக அமைந்துவிடக் கூடாதென்பதே அது.

2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்ற அமர்வின்போது இலங்கையில் மைத்திரி- ரணில் அரசாங்கம் பதவியில் இருந்தது. அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகள் உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் ஆதரவுடன் மைத்திரி- ரணில் அரசாங்கம் பதவிக்கு வந்ததால், இலங்கைக்குச் சாதகமான முறையில் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுத் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டிருந்தது.

பராக் ஒபாமா தலைமையிலான அமெரிக்க அரசாங்கமே இந்தியாவின் ஒத்துழைப்போடு இலங்கைக்குச் சார்பான அந்தப் பிரேரணையைச் சமர்ப்பித்துத் தீர்மானமாக நிறைவேற்றிருந்தது. அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களை நிறைவேற்ற இலங்கை அரசாங்கத்துக்கு ஆரம்பத்தில் இரண்டு வருட கால அவகாசமும் பின்னர் மேலும் இரண்டு வருட அவகாசமும் அதன் பின்னரான சூழலில் மேலும் ஒன்றரை வருடகால அவகாசமும் வழங்கப்பட்டிருந்து.

இறுதியாகக் கொடுக்கப்பட்டிருந்த ஒன்றரை வருடகால அவகாசம், 2021ஆம் ஆண்டு மார்ச் மாதமே நிறைவுபெறுகின்றது. இந்த நிலையிலேயே சென்ற ஆண்டு நவம்பர் மாதம் 19ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்றிருந்தார்.

அத்தோடு சென்ற ஓகஸ்ட் மாதம் ராஜபக்சக்களை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் அரசாங்கத்தை அமைத்துமுள்ளது. வெளியுறவு அமைச்சராகப் பதவியேற்றிருந்த அமைச்சர் தினேஸ் குணவர்த்தன. ஜெனீவாத் தீர்மானத்துக்கு இணை அணுசரனை வழங்குவதில் இருந்து வெளியேறுவதாக கூறியிருந்தார்.

அவ்வாறே சென்ற மார்ச் மாதம் இடம்பெற்ற அமர்வில் பங்குபற்றியிருந்த அமைச்சர் தினேஸ் குணவர்த்தன, தீர்மானத்தில் இருந்து விலகுவதாகப் பகிரங்கமாகவே அறிவித்திருந்தார். மனித உரிமைச் சபை ஆணையாளரின் அறிக்கையில்கூட இலங்கை வெளியேறியமை தொடர்பாக பாரியளவிலான கண்டனங்கள் எதுவுமே அப்போது தெரிவிக்கப்பட்டிருக்கவுமில்லை.

ஆகவே இவ்வாறானதொரு நிலையிலேதான் இலங்கை விவகாரம் இம்முறை அமர்வில் தவிர்க்கப்பட்டதா அல்லது நாடுகளின் மனித உரிமைகள் பற்றிய விவகாரங்கள் பேசப்படும்போது இலங்கைத் தீர்மானம் பற்றிய மீளாய்வு வாய்மூலப் பேச்சளவில் மாத்திரம் எடுக்கப்படுமா என்பது குறித்து எதுவுமே அறிய முடியவில்லை.

ஓவ்வொரு ஆண்டும் செப்ரெம்பர் மாதம் இடம்பெறுகின்ற அமர்வு மீளாய்வு பற்றியதாகவே இருப்பது வழமை. சென்ற ஆண்டு செப்ரெம்பர் மாதம் இடம்பெற்ற அமர்வில் இலங்கை குறித்த மீளாய்வின்போது, இலங்கை அரசாங்கத்தின் அசமந்தப் போக்குகள் பற்றி அமர்வில் பங்குபற்றியிருந்த பல நாடுகள் கண்டனம் வெளியிட்டிருந்தன.

ஆனால் ராஜபக்ச அரசாங்கம் பதவியேற்றுள்ளதொரு சூழலில் இன்று ஆரம்பமாகியுள்ள மீளாய்வுகள் தொடர்பான அமர்வில் இலங்கை விவகாரம் திட்டமிடப்பட்டுத் தவிர்க்கப்பட்டதா அல்லது அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள அமர்வில் பேசப்படவுள்ளதா என்பது குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.

டொனால்ட் ட்ரம் தலைமையிலான அமெரிக்க அரசாங்கம் ஜெனீவா மனித உரிமைச் சபையில் இருந்து வெளியேறியுள்ள நிலையிலும் பிரித்தானிய, சீன அரசுகளின் உறுப்புரிமைக் காலம் நிறைவடைந்துள்ள நிலையிலும் இன்று ஆரம்பமாகியுள்ள அமர்வு இலங்கை குறித்த விவகாரத்தில் எத்தகையைதொரு தாக்கத்தைச் செலுத்தும் என்ற கேள்விகளும் எழாமலில்லை.

அத்தோடு தீர்மானத்திற்கு ஆதரவு வழங்கியிருந்த மைத்திரி ரணில் அரசாங்கமும் தற்போது பதவியிழந்துள்ளது. ஆகவே நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி படுதோல்வியடைந்துள்ள நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு 16ஆசனங்கள் மாத்திரமே கிடைத்துள்ள நிலையில், ராஜபக்சக்களின் அரசாங்கம், இந்தத் தீர்மானத்தில் உள்ள விடயங்களை புறம்தள்ளுவதற்கு வாய்ப்பாகவே அமையக் கூடிய அரசியல் சூழலே காணப்படுகின்றன.

இலங்கையில் சிங்கள ஆட்சியாளர்கள், சிங்கள மக்களின் மன நிலைகள் பற்றிய வரலாற்று ரீதியான பட்டறிவுகள் இருந்தும் 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்துக்குத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கியமை தொடர்பாக அப்போது எழுந்த கண்டனங்கள் நியாயமானவை என்பதை தற்போது உணரும் நிலை ஏற்பட்டுள்ளது.

முதல் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் கொடுக்கப்பட்டபோதே, பிரச்சினைகளைத் தீர்க்காமல் இழுத்தடிப்புக்கான கால நீடிப்பு என விமர்சிக்கப்பட்டுமிருந்தது. மேலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் கொடுக்கப்பட்டபோதும் தமிழரசுக் கட்சியைத் தவிர ஏனைய தமிழக் கட்சிகள் அனைத்தும் பலத்த எதிர்ப்பை வெளியிட்டிருந்தன.

2015ஆம் ஆண்டு மாற்றம் என்ற பெயரில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்காமல், தமிழரசுக் கட்சியை மையப்படுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஏனைய தமிழ்க் கட்சிகளோடு சேர்ந்து தமிழ் மக்கள் ஒரு தேசம் என்பதை வெளிப்படுத்தி வெளியே நின்றிருந்தால், இன்று பூகோள அரசியல் நிலைமைகள் கூட ஈழத் தமிழருக்குச் சாதகமாக மாறியிருக்கும்.

2010ஆம் ஆண்டுத் தேர்தலிலும் சரத் பொன்சேகாவை ஆதரிக்காமல் தவிர்த்திருந்தால் 2009ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலிலும் தமிழர்கள் ஒரு தேசம் என்பதை வெளிப்படுத்தியிருக்க முடியும். சிங்கள மக்கள் தமது பௌத்த தேசிய உணர்வுகளை கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்துக்கு வாக்களித்தன் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர். அது சரி பிழை என்பதற்கு அப்பால், தற்போதைய பூகோள அரசியல் சூழல்கூட அந்தத் பௌத்த தேசியவாத எழுச்சியை அல்லது சிங்கள இனவாதத்துடன் பதவிக்கு வந்த கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தை சர்வதேசம் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நிலைமை மாறியுள்ளது.

இந்தவொரு நிலையில். ஜெனீவா மனித உரிமைச் சபை மாத்திரமல்ல, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச அமைப்புகள், நாடுகள் அனைத்துமே தமது அரசியல் பொரளாதார நோக்கம் கருதி இலங்கை அரசாங்கத்தை அனைத்துச் செல்லும் அரசியல் நகர்வுகளையே மேற்கொள்வர் என்பது கண்கூடு.

எழுபது ஆண்டுகள் அரசியல் போராட்டம் நடத்திய தமிழ்ச் சமூகத்தின் பிரதிநிதிகள் செய்ய வேண்டிய தமிழ்த்தேச அங்கீகாரத்துக்கான அரசியலை, இலங்கை அரசு என்ற கட்டமைப்பில் இருந்து கொண்டு சிங்கள ஆட்சியாளர்கள், இலங்கை சிங்கள தேசம்தான் என்பதை மேலும் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் சாதராண தேர்தல் அரசியலில் ஈடுபட்டுத் தமிழக் கட்சிகளும் தமிழ் மக்களின் ஒருமித்த பலமும் வெவ்வேறு கருத்துக்களினால் சிதைக்கப்பட்டுள்ளன.

2015ஆம் ஆண்டுத் தீர்மானத்தில் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமென்ற வாக்கியம் ஒன்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. தமிழரசுக் கட்சி ஒத்துழைப்பு வழங்கியதும் அதன் காரணமாகவே என்ற சந்தேகம் கூட அப்போது எழுந்தது. ஒத்துழைப்பு வழங்கி விட்டு அந்தத் தீர்மானமத்தில் என்ன இருக்கின்றது என்பது பற்றிக் கூட தமிழ் மக்களுக்குத் தமிழரசுக் கட்சி எதுவுமே கூறவில்லை.

13ஆவது திருத்தச் சட்டத்தின் கீழான மாகாண சபை முறை இனப்பிரச்சினைக்குத் தீர்வல்ல. அதனை தும்ர்த் தடியாலும் கூடத் தொட்டுப் பார்க்க முடியதென சம்மந்தன் 2006ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.

இந்த நிலையில் எவ்வாறு 2015ஆம் ஆண்டுத் தீர்மானத்தில் இனப்பிரச்சினைக்கு ஆரம்பத் தீர்வாக 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமென்ற கருத்தை உள்ளடக்க தமிழரசுக் கட்சி சம்மதித்தது என்ற கேள்விகள் எழாமலில்லை.

ஆனாலும் தற்போதைய அரசியல் சூழலில், அந்த 13ஆவது திருத்தச் சட்டம் பற்றி ஜெனீவாத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதைக் கூட மனச் சாட்சியோடு நடைமுறைப்படுத்துங்கள் என்று பகிரங்கமாகவும் அழுத்தம் திருத்தமாகவும் கேட்பதற்கான திராணியற்ற நிலையில் தமிழரசுக் கட்சியின் நிலையுள்ளது.

தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஜெனீவா அமர்வில் மாத்திரமல்ல, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள அமர்விலும் தாராளமாக வழங்கப்பட்ட கால அவகாசங்களுக்கு என்ன நடந்தது என்ற காரசாரமான குற்றச் சாட்டுக்களைக்கூட ஒப்பாசாரத்துக்கேனும் மனித உரிமைச் சபை இலங்கை ஒற்றையாட்சி அரசு மீது முன்வைக்குமா என்பது சந்தேகமே.

ஏனெனில் அதற்கான பின்னூட்டங்களைச் செய்ய வேண்டியது தமிழ் பிரதிநிதிகளின் பொறுப்பு. ஆனால் அந்தப் பொறுப்பில் இருந்து தமிழரசுக் கட்சி மாத்திரமல்ல அனைத்துத் தமிழக் கட்சிகளுமே விலகிவிட்டன. தற்போது எஞ்சியிருப்பது தேர்தல் அரசியல் மாத்திரமே. இது இலங்கை ஒற்றையாட்சி அரச கட்டமைப்புக்கு வாய்ப்பாகிவிட்டது.

அ.நிக்ஸன்