புளிச்சக்கீரையில் இவ்ளோ விஷயம் இருக்கா?

திங்கள் அக்டோபர் 28, 2019

அதிகம் பயன்படுத்தப்படும் கீரைகளில் புளிச்சக்கீரையும் ஒன்று. குறிப்பாக ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டு மக்கள் புளிச்சக்கீரையை அதிகம் தங்கள் உணவில் விரும்பி சேர்க்கிறார்கள்.

கோங்குரா என்றும் சொல்லப்படுகிற புளிச்சக் கீரை பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டது.

புளிப்புச் சுவை அதிகமாக இருப்பதால் புளிச்சக் கீரை என்று அழைக்கப்படும் இக்கீரையின் புளிப்புத்தன்மை நம் உடலிலுள்ள ஆற்றல் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. நம் உடலிலுள்ள கழிவுகளை வெளியேற்றவும், உடல் வளர்ச்சிக்கும் இந்த புளிப்புச் சுவை மிகவும் அவசியம்.

‘‘யார் ஒருவர் அதிக பசியில் இருக்கிறாரோ அவருக்கு இந்த புளிப்புச் சுவை ஆற்றலை அதிகரித்துக் கொடுக்கும். பொதுவாக தென்னிந்திய மக்களின் உணவு பழக்கத்தில் அரிசி சார்ந்த கார்போஹைட்ரேட் உள்ள புளிப்புச் சுவையுடைய உணவுகள் 50 சதவிகிதம், காரம், துவர்ப்பு, உவர்ப்பு, இனிப்பு மற்றும் கசப்பு போன்ற சுவையுடைய உணவுகள் தலா 10 சதவிகிதம் என்று அறுசுவையும் கலந்து  சமச்சீர் உணவாக இருக்கும்.

புளிச்சக்கீரையில் நமது உடலுக்குத் தேவையான வைட்டமின்களும், தாதுச் சத்துக்களும் உள்ளன. குறிப்பாக வைட்டமின் C, சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் போன்றவை உள்ளன.

அது மட்டுமல்லாமல் ஆன்டி ஆக்ஸிடென்ட் என்று சொல்லக்கூடிய Flavonoids, Anthocyanin மற்றும் Poly Phenolic acid போன்றவை இருப்பதால் பல நோய்களைத்  தடுக்கவும், குணப்படுத்தவும் உதவுகிறது. குறிப்பாக தினந்தோறும் நமது சுற்றுச்சூழலில் எதிர்படும் தூசிகள், கழிவுகள் போன்ற மாசுபாடுகளால், நம் உடல் செல் அணுக்களில் மாற்றம் ஏற்பட்டு புற்றுநோய் மற்றும் இதயநோய் ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்தக் கீரையை உட்கொள்வதால் இந்த நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது.

இந்தக் கீரையில் நார்ச்சத்து அதிகளவில் உள்ளது. இச்சத்து ஜீரண சக்தியை அதிகரித்து மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, வயிறு உபாதைகள் வராமல் தடுக்க உதவுகின்றன.

அது மட்டுமின்றி குடலின் ஆரோக்கியத்தையும் அதில் சுரக்கப்படும் சுரப்பியின் அளவையும் அதிகரிப்பதால் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இந்தக் கீரையில் அதிகளவு உள்ள இரும்புச்சத்து நம் ரத்தத்திலுள்ள சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரித்து ரத்த சோகையால் ஏற்படும் அசதி, படபடப்பு, உடல்சோர்வு, மூச்சு வாங்குதல் போன்ற பிரச்னைகளிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.

இந்தக் கீரையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் கெட்ட கொழுப்பின் அளவை குறைக்கவும், நல்ல கொழுப்பை அதிகரிக்கவும் உதவுகிறது. மேலும் இது உடலில் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாடோடு வைத்திருக்க உதவியாக இருக்கிறது.

இந்தக் கீரையில் அதிகளவு உள்ள பொட்டாசியம் ரத்தக் குழாய்களுக்குத் தேவையான ஓய்வினைக் கொடுத்து, உயர் ரத்த அழுத்தத்தையும், மன அழுத்தத்தையும் குறைப்பதனால் இதய நோய் வராமல் தடுக்க உதவுகிறது.

இந்தக் கீரையில் கொழுப்புச் சத்தும் கலோரியும் குறைவாக  உள்ளதாலும், நார்சத்து அதிகமாக உள்ளதாலும், அதிக நேரம் பசியில்லாமல் இருப்பதோடு, உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது.

இந்தக் கீரையில் அதிகளவு உள்ள வைட்டமின் A கண்பார்வை அதிகரிக்கவும், கண்ணில் வரக்கூடிய கண்புரை பிரச்னையையும் வராமல் தடுக்கிறது. இந்தக் கீரையிலுள்ள புளிப்புச் சுவை, வைட்டமின் C மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் தோலில் சுருக்கம் ஏற்படாமல்  இருக்கவும், அரிப்பு, சிரங்கு போன்ற தோல் வியாதிகளுக்கும் நல்ல தீர்வாக உள்ளது.

அது மட்டுமின்றி இதிலுள்ள வைட்டமின் மற்றும் தாது உப்புக்களால் கூந்தலின் பொலிவை அதிகரித்து முடி உதிர்வைத் தடுக்க உதவுகிறது. இதிலுள்ள வைட்டமின் C பல் ஈறுகளின் ரத்தக் கசிவை  தடுப்பதோடு, எலும்பை வலுவாக்கவும் உதவுகிறது.

இதிலுள்ள வைட்டமின் C உடலில் வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்கிறது. இந்த வெள்ளை அணுக்கள் நோய் வராமல் தடுத்து உடல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது’’