பதற்றத்தை போக்கும் உணவுகள்!

திங்கள் ஜூலை 29, 2019

மனிதர்கள் இப்போது பெரும்பாலும் பதற்றம் கொண்டவர்களாகத்தான் இருக்கிறார்கள். சிலவகை உணவுகளை சாப்பிட்டால், பதற்றம் குறையும்.

மனிதர்கள் இப்போது பெரும்பாலும் பதற்றம் கொண்டவர்களாகத்தான் இருக்கிறார்கள். அவர்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பதற்றம் தென்படுகிறது. சிலவகை உணவுகளை சாப்பிட்டால், பதற்றம் குறையும்.

முட்டை: பதற்றம் மற்றும் மன அழுத்தத்தை கட்டுப்படுத்த முட்டை உதவும். மேலும் இதில் இருக்கும் டிரைப்டோபன், செரோடானின் போன்றவை தூக்கம், மனநிலை, நடத்தை ஆகியவைகளை சீராக்கும்.

பூசணி விதை: இதில் பொட்டாசியம் அதிக அளவில் இருக்கிறது. ரத்த அழுத்தத்தை நிர்வகிப்பதிலும் முக்கிய பங்காற்றுகிறது. அத்துடன் மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைக்கவும் உதவுகிறது.

சாக்லேட்: டார்க் சாக்லேட்டில் இருக்கும் கோகோ மனநிலையை மேம்படுத்த உதவுகிறது. மேலும் மன அழுத்தத்தையும், பதற்றத்தையும் குறைக்கவும் செய்யும். இதில் பாலிபினால்கள், பிளாவோனோய்டுகள் அதிகமிருக்கிறது. அவை நரம்பு அழற்சியை கட்டுப்படுத்துவதற்கும், மூளையில் செல்கள் இறப்பு குறைவதற்கும் உதவுகின்றன. அத்துடன் சாக்லேட்டில் இருக்கும் டிரைப்டோபன் மன நிலையை மேம்படுத்தவும், நரம்பியல் கடத்திகளின் செயல்பாடுகளை அதிகரிக்கவும் உதவுகிறது. டார்க் சாக்லேட் வாங்கும்போது அதில் 70 சதவீதத்துக்கும் அதிகமாக கோகோ கலந்திருக்க வேண்டும்.

தயிர்: பதற்றமான மனநிலை கொண்டவர்கள் உணவில் தயிரை அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது. மனநிலையை மேம்படுத்தவும் உதவும். மூளையின் இயக்கம் சீராக நடக்கவும் தயிர் துணைபுரியும். நான்கு வாரங்கள் தொடர்ந்து தினமும் இரண்டு முறை தயிர் சாப்பிட்டு வந்தால் மூளையின் செயல்பாடு சிறப்பாக இருக்கும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. வாழைப் பழங்கள், ஓட்ஸ், சியா விதைகள், சிட்ரஸ் பழங்கள், குடை மிளகாய் மற்றும் பாதாம் போன்றவற்றை சாப்பிடுவதும் மூளையின் ஆரோக்கியத்திற்கு நல்லது.