பிரான்சில் கொரோனா தொற்றிற்கு யாழ்.அரியாலை மூதாளர் பலி!

செவ்வாய் மார்ச் 31, 2020

பிரான்சில் கொரோனா நோய்த் தொற்றுக்கு இலக்காகி யாழ். அரியாலையைச் சேர்ந்தவரும் பொபினியில் வசித்து வந்தவருமான திருமதி இரத்தினசிங்கம் சற்குணவதி (வயது 72) அவர்கள் நேற்று முன்தினம் 29.03.2020 ஞாயிற்றுக்கிழமை இரவு பொபினி வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

இவர் கொரோனா அறிகுறி எதுவுமின்றி வேறு உடல் உபாதைக்காகவே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை பெற்று வீடு திரும்ப இருந்த வேளையில், திடீரென கொரோனா தொற்று அறிகுறி தென்பட்டுள்ளது. உடனடியாக செவ்ரோன் மருத்துவமனையில் இருந்து பொபினி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

இன்றைய சூழ்நிலையில் கொரோனோ தொற்று நேரடியாக தொற்றுவதைவிட வெளியில் சென்று வருபவர்கள் மூலம் பரவுவதே அதிகமாக இருக்கின்றது.

70 வயதிற்கு மேற்பட்டவர்களை தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ள போதிலும் அவர்களை சந்திப்பவர்கள் வெளியில் சென்று வருபவர்கள் சந்திப்பதை தவிர்ப்பது முக்கியமாகக் கடைப்பிடிக்க வேண்டும். நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்கள் எப்படி அவர்களுக்கு நோய் வந்தது என்பது தெரியாமல் இருக்கிறது.

வெளியே சென்று வருபவர்கள் சுகதேகியாக இருப்பதால் அவர்கள் நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகாமல் இருக்கின்றனர். இதில் ஒவ்வொருவரும் விழிப்பாய் இருப்பதன் மூலம் நம்மையும், மற்றவர்களையும் காப்பாற்றிக் கொள்ள முடியும் – என மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

- எரிமலை