பெளத்த பயங்கரவாதம்

வெள்ளி அக்டோபர் 04, 2019

மே 18 2009 அன்று முள்ளிவாய்க்காலில் தமிழினம் பேரழிவின் உச்சத்தைத் தொட்டிருந்த வேளையில், இலங்கையில் பயங்கரவாதம் அழிக்கப்பட்டு, தமிழ் மக்கள் மீட்கப்பட்டு, உள்நாட்டுப் போர் முடிவடைந்து விட்டதாக உலகின் சில ஊடகங்களும் தொலைக்காட்சிகளும் பொய்களை முழங்கிக்கொண்டிருந்தன. ஆனால், அன்றைய தினம் (18.05.2009) பிரான்சின் ஒரு தொலைக்காட்சி வெறும் 40 விநாடிக் காட்சிகளில் சிறீலங்காவின் கொடூர முகத்தை அப்பட்டமாக அம்பலப்படுத்தியிருந்தது.

சிறீலங்காவின் பெளத்த பேரினவாதத் சித்தாந்தத்தை அந்தக் காட்சி அப்பட்டமாக தோலுரித்துக் காட்டு வதாக  அமைந்திருந்தது. பிரான்சின் சனல் புளுஸ் (Canal +) என்ற தொலைக்காட்சியில் உருவப் பொம்மைகளைக் கொண்டு நிகழ்த்தப்படும் guignols என்ற நிகழ்வு மிகவும் பிரபல்யமானது. அந்தத் தொலைக்காட்சிக்கு பெரும் புகழைத் தேடித்தந்த நிகழ்ச்சி மட்டுமல்ல, பல இலட்சக்கணக்கான நேயர்களையும் பெற்றுக்கொடுத்த நிகழ்ச்சி அது. அதனால்தானோ என்னவோ, கட்டணத் தொலைக்காட்சி சேவையான சனல் புளுஸ், இந்த guignols நிகழ்வை எப்போதும் இலவசமாகவே மக்களுக்கு வழங்கிவருகின்றது.

குறிப்பிட்ட நிகழ்ச்சி நடைபெறும்போது அனைவரும் அதனைப் பார்க்கும் வகையில் தொலைக்காட்சி அலைவரிசையை இலவசமாகத் திறந்துவிடுகின்றது. மே 18 ஒளிபரப்பான அந்தக் காட்சியில், சுமார் 40 விநாடிகள் இலங்கை குறித்து அதில் பேசப்படுகின்றது. ‘‘சிறீலங்காவின் எறிகணையால் விடுதலைப் புலிகள் நசுக்கப்பட்டார்கள். ஆனால், அமெரிக்காவின் கூடைப் பந்தாட்ட விளையாட்டுப் போன்று சிறீலங்கா குறித்தும் பிரான்சில் யாருக்கும் அக்கறையில்லை’’ என்று செய்தி வாசிப்பாளரின் அறிமுகத்துடன் தொடங்கும் நிகழ்வில், ‘‘விடுதலைக்காகப் போராடும் சிறுபான்மைத் தமிழ் மக்கள் பெளத்த படையினரை எதிர்கொண்டிருக்கின்றார்கள் என செய்தி வாசிப்பாளர் கூறும்போது, இரண்டு சிங்களப் பெளத்த பிக்குகள் நடந்து வருகின்றார்கள். அவர்கள் நடந்து வரும் பாதையில் சில எறும்புகள். அதனை ஒரு பிக்கு சுட்டிக்காட்டி ‘இதனை நாம் மிதித்துவிடக் கூடாது. இது உன்னோட அப்பவாகக் கூட இருக்கலாம்’ என்று கூறுகின்றார். அதற்கு மற்றைய பிக்கு ‘எங்களை மன்னித்துக்கொள் எறும்பு’ என்று கூறிவிட்டு இருவரும் எறும்புகளை மிதித்து விடாமல் கடந்து செல்கின்றனர். பின்னர் சிலந்தி அவர்களின் பாதையில் வருகின்றது. ‘சிலந்தி...’ என பெளத்த பிக்கு எச்சரிக்கின்றார். அவையும் தங்கள் மூதாதையர்களாக இருக்கலாம் எனக்கூறி அதனையும் மிதித்துக் கொன்றுவிடாமல் இருவரும் அதனிடம் மன்னிப்புக் கேட்டபடி கடந்து செல்கின்றனர்.

அப்போது திடீரென ஒரு பிக்கு ‘அதோ தமிழர்கள்..!’ என எச்சரிக்கின்றார். உடனே இரண்டு பிக்குகளும் தங்கள் துப்பாக்கிகளை எடுத்து தமிழர்களை நோக்கிச் சுட்டுத்தள்ளுகின்றனர். பின்னர் மீண்டும் நடக்கத் தொடங்க அங்கே கறையான்கள் தென்பட அவையும் தங்கள் மூதாதையர்களாக இருக்கலாம் எனக் கருதி அவற்றையும் மிதித்துவிடாமல் கடந்து செல்வதுடன் அந்தக் காட்சி முடிகின்றது.

பெளத்த பேரினவாதத்தின் தமிழ் மக்களுக்கு எதிரான கொடூர முகத்தை புரிந்துகொள்வதற்கு இந்த 40 விநாடிக் காட்சிகளில் சொல்லப்பட்டதைவிட மிகவும் இலகுவாக யாராலும் சொல்லிவிட முடியாது.

இலங்கைத் தீவில் சிங்களப் பேரினவாதிகள் ஆட்சியில் அமர்ந்திருந்தாலும் அந்த நாட்டை ஆளுவது பெளத்த பேரினவாதம்தான். பெளத்த பேரினவாதிகளின் சிந்தனைக்கும், விருப்பத்திற்கும் மாறாக எந்தவொரு சிங்கள ஆட்சியாளரும் காய்களை நகர்த்திவிட முடியாது. புத்தரை வணங்குவதாகக் கூறிக்கொள்ளும் இந்தப் பெளத்த பிக்குகள் காலத்திற்கு காலம் கட்டவிழ்த்துவிட்ட வன்முறைகள்தான் இலங்கைத் தீவில் பெரும் இரத்த ஆறு ஓடியதற்கு முழுக் காரணம். ‘கால் நீட்டிப்படுக்க முடியவில்லை’ என்று துட்டகைமுனுவின் இனவாதச் சிந்தனையின் வெறித்தன வெளிப்பாட்டில் இருந்து, பண்டா - செல்வா ஒப்பந்தத்தை பெளத்த பிக்குகள் கிழித்தெறிய வைத்தது வரைக்கும் இலங்கைத் தீவில் வன்முறைக்கான வாசலைத் திறந்து வைத்தவர்கள் இந்தப் பெளத்த பேரினவாதப் பிக்குகள்தான். இதனை ‘சனல் புளுஸ்’ தொலைக்காட்சிச் சேவை நன்கு புரிந்துகொண்டிருந்ததனால்தான், சிங்களவர்களாலோ அல்லது சிங்களப் படைகளாலோ தமிழர்கள் அழிக்கப்படுகின்றார்கள் என்று காண்பிக்காமல், பெளத்த பேரினவாதத்தால்தான் தமிழர்கள் அழிக்கப்படுகின்றார்கள் என்று காண்பிக்கமுடிந்தது.

இந்த உண்மையத்தான் ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பகாலத்திலேயே தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் ‘ஜே.ஆர்.ஜெயவர்த்தன உண்மையான பெளத்தனாக இருந்திருந்தால் நான் ஆயுதம் ஏந்தியிருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கமாட்டாது’ என குறிப்பிட்டிருந்தார்.

தமிழீழத் தேசியத் தலைவர் கூறியது எத்தனை பெரிய உண்மை என்பதை இந்த உலகம் இன்னொரு தடவை தெட்டத்தெளிவாக உணர்ந்துகொள்வதற்கான வாய்ப்பை கடந்த வாரம் முல்லைத்தீவில் நடந்த சம்பவம் இந்த உலகிற்கு வழங்கியிருக்கின்றது.

தமிழர்கள் ஏன் ஆயுதம் ஏந்தவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது? அதற்கு யார் காரணம் என்பதை நிரூபிப்பதற்கான புதிய ஆதாரமாக நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் பெளத்த பேரினவாதமும் அவர்களின் காவல்துறையும் தமது நாட்டின் நீதித்துறை வழங்கிய தீர்ப்பையும் தூக்கி மிதித்துவிட்டு நடந்துகொண்ட முறை அமைந்திருக்கின்றது.

நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் அத்துமீறி புத்தர் சிலையை அமைத்து அது சிங்கள பெளத்த பிரதேசம் என உரிமைகொண்டாடிய பெளத்த பிக்கு மேதாலங்கார தேரர், புற்றுநோயால் கொழும்பில் உயிரிழந்த நிலையில், அவரது உடலை முல்லைத்தீவிற்கு எடுத்துவந்து, தமிழர்களின் பண்பாட்டைச் சிதைக்கும் வகையில் ஆலயத்தின் தீர்த்தக்குளத்தின் அருகில் தகனம் செய்ததது மட்டுமல்ல,  சிறீலங்கா நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் கிழித்தெறிந்து அவரது உடலை அந்த இடத்தில் எரித்திருக்கின்றனர்.

நீதிமன்றத் தீர்ப்பிற்கு அமைய, அவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்றுவிடாமல் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டிய சிறீலங்காவின் காவல்துறையினர், மாறாக தடுக்கச்சென்ற தமிழ் மக்களைத் தடுத்து நிறுத்திப் பெளத்த பிக்குகளை பாதுகாப்பதில் ஈடுபட்டதுடன், தீர்ப்பையும் மீறி உடலைத் தகனம் செய்வதற்கும் பாதுகாப்பு வலையத்தை ஏற்படுத்திக் கொடுத்திருந்தனர்.

நீதிமன்றத் தீர்ப்பையும் மீறி இதனை முன்னின்று செய்துமுடித்தவர் பொதுபல சேனாவின் பொதுச்செயலர் ஞானசார தேரர். குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவரை, சிறீலங்காவின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் விடுவித்திருந்தார். நன்னடத்தை என்ற பெயரில் வெளியில் வந்த அவர், சட்டத்தை மீறும் ஒரு நடவடிக்கையை மேற்கொண்டதன் பின்னரும் இதுவரை அவரைக் கைது செய்யவில்லை.

இப்படிப்பட்ட சிறீலங்காவின் நீதித்துறையை நம்பித்தான் நடந்த இனப்படுகொலைக்கு நீங்களே விசாரணையை நடத்தி நீதியை வழங்குங்கள் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையும், சர்வதேச நாடுகளும் சொல்லுகின்றன என்றால் அது எவ்வளவு பெரிய விசித்திரம்.

சிங்களம் கூறுவதுபோன்று இலங்கைத் தீவில் இருந்தது புலிப் பயங்கரவாதம் அல்ல. அது பெளத்த பயங்கரவாதம். புலிகள் இல்லாத வெற்றிடத்தில்தான் அந்தப் பெளத்த பயங்கரவாதத்தின் கோர முகம் இந்த உலகிற்கு தெரிய ஆரம்பித்திருக்கின்றது. இந்தப் பெளத்த பயங்கரவாதம் இல்லாமல் போகும்வரை இலங்கைத் தீவு அமைதியாக இருக்கப்போவதில்லை என்பதைத்தான் முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாக அத்துமீறல் இந்த உலகிற்கு சொல்லிநிற்கின்து.

நன்றி: ஈழமுரசு - ஆசிரிய தலையங்கம்