பசியாற்றல்!

வியாழன் செப்டம்பர் 26, 2019

ஞாபகங்களின் வானத்தில்
மீளவும் மீளவும் பறக்கின்றன
“பாடும் பறவைகள்”

காலத்தின் காற் தடங்களில்
அணையாமல் உறைந்து கிடக்கிறது
பசி தின்ற கனவு.

கைவிட்ட தர்மத்தின் கதவிடுக்கில்
காய்ந்து கிடக்கிறது
பார்த்தீப முகம்.

கட்டாக்காலிகளின்
அசை போடலில் அழிகின்றன
நீ நேற்று நடந்த அறுகம் புற்கள்.

காலத்தை மறக்கும்
சனங்களின் மர மண்டைகளில்
வருடத்துக்கொரு முறை
உயிர்த்தெழுகிறது உன் முகம்.

உன்னை மேலங்கியாக்கி
அணிந்து செல்பவர்களின்
ஊர்வலத்தில்
புரட்சியை விளங்க வைக்கத் தவிக்கிறது
உன் விழிகள்.

யானை பாராத குருடர்கள்
இப்போதும் எழுதிக் கொண்டிருக்கும்
கட்டுக் கதைகளை
கிழித்துப் போட்டுக் கொண்டே ஒடுகிறது
உண்மை நதி. 

தீயின் விதைகளை
அடைகாத்து வைத்திருக்கிறது
உனக்குப் பிடிமண் தந்த 
மண் அடி.

காத்திரு.
உன் பசியாறும் 
ஒளி நாள் வரும்.

- தீபிகா -
08.20 Pm.
25.09.2019