ஒரு வாரத்தினுள் நாடாளுமன்று கலைக்கப்படும், ஏப்ரல் மாத இறுதியில் தேர்தல்

வியாழன் பெப்ரவரி 27, 2020

சிறிலங்காவின் நாடாளுமன்றம் அடுத்த ஒரு வாரத்தினுள் கலைக்கப்பட்டு எதிர்வரும் ஏப்ரல் மாதம் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். 

இம்முறை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் சிறிலங்காவில், தேர்தல் ஆணைக்குழுவில் புதிதாக பதிவு செய்வதற்கு விண்ணப்பித்த கட்சிகள் போட்டியிட உள்வாங்கப்படவில்லை எனவும் சுயேச்சையாகப் போட்டியிட இக்கட்சிகளுக்கு தடைகள் இல்லையென்றும் தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்தார். 

புதிய கட்சிகளை பதிவு செய்வதற்காக அறிவிக்கப்பட்ட காலப் பகுதியில் 150க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. பாராளுமன்றம் அடுத்த வாரமுற்பகுதில் கலைக்கப்படக் கூடிய வாய்ப்புக் காணப்படுவதால் வேட்பு மனுக்கள் ஏற்கும் காலத்துக்கு முன்னர் இந்த விண்ணப்பங்களை பிரசீலித்து முடிவெடுப்பதற்கு கால அவகாசம் போதாதுள்ளது.இதன் காரணமாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். 

பாராளுமன்றம் கலைக்கப்பட்ட 52 நாட்களுக்கும் 66 நாட்களுக்குமிடையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதன் பிரகாரம் ஏப்ரல் 22க்குப் பின்னர் மேமாதம் 04 ஆம் திகதிக்கிடையில் தேர்தலை நடாத்த வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

தேர்தல் தொடர்பில் கலந்துரையாட நேற்று கட்சிகளின் செயலாளர்களை சந்திப்பதற்கு முன்னர் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் போதே ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இவற்றைத் தெரிவித்தார்.

உத்தியோகபூர்வமாக இன்னமும் அறிவிக்கப்படாத போதும் அடுத்த ஒரு வாரத்துக்குள் பாராளுமன்றம் கலைக்கப்படலாமென நம்பகமாகத் தெரிய வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.   

ஏனைய தேர்தல்களை நடத்தும் திகதிகளை தீர்மானிக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இருக்கின்ற போதிலும் பாராளுமன்றத் தேர்தலை நடத்தும் திகதியை தீர்மானிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே இருக்கிறது. அவரால் குறிப்பிடப்படும் திகதியிலேயே பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படும். 

ஏப்ரல் மாதம் நீண்ட விடுமுறைகாலமாக இருப்பதால் அரச அதிகாரிகள் விடுமுறையில் செல்வார்கள். ஆனாலும் இக்காலப் பகுதியில் தேர்தல் நடத்தப்படுவதால் விடுமுறை காலத்திலும் அதிகாரிகள் கடமைக்கு வரவேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்பட்டுள்ளனர். 

இந்த நெருக்கடியான சூழ்நிலை காரணமாக தேர்தல்கள் ஆணைக்குழுவும், அரசியல் கட்சிகளும், சமயத் தலைவர்களும் ஜனாதிபதியிடம் இவ்விடயங்களைச் சுட்டிக்காட்டியுள்ளன. ஏப்ரல் மாதம் 25, 27, 28, 29, மே மாதம் 4 ஆகிய திகதிகளில் ஒருநாளைத் தேர்ந்தெடுக்குமாறு  ஜனாதிபதியிடம் ஆணைக்கழு எடுத்துரைத்துள்ளதாகவும் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.