நோய் எதிர்ப்பு சக்திக்கு புரதம் ஏன் அவசியம்?

வியாழன் அக்டோபர் 01, 2020

 செல்கள் மற்றும் திசுக்களின் வளர்ச்சிக்கும், புதுப்பித்தலுக்கும் தேவையான அடிப்படை காரணி, புரதம். நோய் எதிர்ப்பு செல்கள், முழு திறனுடன் செயல்பட்டு, வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை, ஒட்டுண்ணி போன்ற நோய் கிருமிகளை அழிக்கத் தேவையான திறனைக் கொடுப்பது புரதம்.

தினமும் எவ்வளவு புரதம் தேவை?


அவரவர் செய்யும் வேலையைப் பொறுத்து, புரதத் தேவையின் அளவு மாறுபடலாம். சராசரியாக, ஒருவரின் உயரத்தில், 100 செ.மீ., கழித்தால், எவ்வளவு வருமோ அவ்வளவு கிராம், புரதம் சாப்பிட வேண்டும். உதாரணமாக, ஒருவரின் உயரம், 150 செ.மீ., என்று வைத்துக் கொண்டால், அதில், 100ஐ கழிக்கும் போது, 50 வரும்.


ஐம்பது கிராம் புரதம் சாப்பிட வேண்டும். சாப்பிடும் உணவு அனைத்திலும் போதுமான அளவு புரதம் இருக்கிறதா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

புரதச் சத்து மிகுந்த உணவுகள் எவை?

பால், பாலாடை, முட்டை வெள்ளைக் கரு, மீன், கோழி இறைச்சி, சோயா, பருப்பு வகைகள், பாதாம், முந்திரி, வால்நட் உட்பட நட்ஸ் வகைகள், பொட்டுக் கடலை, வேர்க்கடலை போன்றவை.

ஆரோக்கியமான உணவு எது?

இட்லி, தோசை, இடியாப்பம், ரசம் போன்ற தென்னிந்திய உணவுகள் தான் ஆரோக்கிய மானவை. காரணம், இவை எளிதில் செரிமானம் ஆகக் கூடியவை.

எந்த உடல் பிரச்னையும் இல்லாவிட்டால் கூட, புரதம், கார்போஹைட்ரேட், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் நல்ல கொழுப்பு சத்துகள் அடங்கிய, சமச்சீரான உணவை அனைவரும் பின்பற்ற வேண்டும்.

இதயக் கோளாறு உட்பட பல்வேறு நோய்களுக்கு முக்கிய காரணியாக இருப்பது, மன அழுத்தம். இதய மற்றும் நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளை சீராக்க, மன அழுத்தத்தை குறைக்க, பாதாம் உதவுகிறது.

இதயத் துடிப்பு மாறுபாட்டை சரி செய்யும் ஆற்றல், பாதாம் பருப்பிற்கு உள்ளது. பாதாமை இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து, காலையில் தோலை நீக்கி விட்டு, தினமும் சாப்பிட்டு வந்தால், உடல் எடையை சீராக வைக்கும்.

தோலுடன் பாதாமை ஏன் சாப்பிடக் கூடாது?

'டேமின்' என்ற வேதிப் பொருள், பாதாம் பருப்பின் தோலில் உள்ளது. இது, பருப்பில் உள்ள நுண்ணுாட்டச் சத்தை, முழுமையாக செரிமான மண்டலம் உறிஞ்சும் தன்மையைக் குறைக்கும். தினமும், 8 - 10 பாதாம் சாப்பிடுவ தால், இதில் உள்ள அமினோ அமிலம், மூளையின் செயல்திறனை அதிகரிக்கச் செய்யும்.

இதில் உள்ள வைட்டமின் - பி17, கேன்சர் ஏற்படும் பாதிப்பை குறைக்கும்.