நோர்வே போய் சுவிஸ் வந்தது டும் டும் டும் !!!

புதன் அக்டோபர் 30, 2019

கடந்த வாரம் ஈழத் தமிழினம் தொடர்பான இரண்டு முக்கிய ஒன்றுகூடல்கள் ஐரோப்பிய நாடுகள் இரண்டில் நடைபெற்றுள்ளன. ஒன்று சுவிச்சர்லாந்திலும் மற்றொன்று பிரித்தானியாவிலும் நடைபெற்றது.

புலம்பெயர்ந்த நாடுகளின் அமைப்புக்களை அழைத்து சுவிச்சர்லாந்தின் அரசு ஒரு ஒன்றுகூடலை கடந்த 18, 19, 20 ஆகிய மூன்று நாட்கள் நடத்தியிருந்தது. குறிப்பாக தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளின் மிகநெருங்கிய ஆதரவு அமைப்புக்களை விடுத்து, பொதுவான புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உலகின் சில நாடுகளில் இருந்து அழைக்கப்பட்டிருந்தனர்.

சுமார் 18 வரையான அமைப்புக்களின் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டதாகத் தெரியவருகின்றது.

இந்த மாநாட்டின் முக்கிய கருப்பொருளாக ‘தமிழர் மனங்களில் இருந்து தமிழீழம் குறித்த சிந்தனையையும், இனவழிப்பிற்கான நீதி தேடலையும்’ இல்லாமல் செய்வதாகவே இருந்ததாக மாநாட்டில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் பலரும் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, இலங்கைத் தீவு சிங்கள, தமிழ், முஸ்லீம்கள் ஆகிய மூவருக்கும் சொந்தமானது என்பது இங்கு வலியுறுத்தப்பட்டதுடன், எந்தவொரு வழியிலும் சிறீலங்காவை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டுவர முடியாது என்பதால் தமிழ் மக்கள் தொடர்ந்து கூறி
வரும் ‘இனப்படுகொலை’ என்ற வாதத்தை கைவிட்டு, மாற்று வழிகளில் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த வலியுறுத்தல்களை, ஏற்கனவே சிறீலங்கா அரசுடன் கைகோர்த்துப் பயணிக்கும் இரண்டு புலம்பெயர் தமிழ் அமைப்பின்களின் பிரதிநிதிகளைத் தவிர, ஏனைய அனைத்துப் பிரதிநிதிகளும் ஏற்றுக்கொள்ள மறுத்து, அவற்றை அடியோடு நிராகரித்துள்ளனர்.

போர் செய்வதைவிட சமாதானம் செய்வதே மிகப்பெரும் ஆபத்தைக் கொண்டுள்ளது. 2002ம் ஆண்டு நோர்வேயின் நடுநிலைமையுடன் சமாதான உடன்படிக்கையில் கையயாப்பம் இட்டபோது, ‘விடுதலைப் போராட்டம் பெரும் அழிவைச் சந்திக்கப்போகின்றது’ எனக்கூறி, அன்றையதினம் உணவு உண்பதைக்கூட தமிழீழத் தேசியத் தலைவர் தவிர்த்திருந்தாக செய்திகள் பல வெளியாகின. தலைவரின் தீர்க்கதரிசனம் போலவே தமிழீழ விடுதலைப் போராட்டம் சமாதான உடன்படிக்கையில் கையயாப்பம் இட்டதன் பின்னரேயே பேரழிவைச் சந்தித்தது.

நடுநிலை வகிக்க வந்த நோர்வே சிங்களப் பேரினவாதம் போரை ஆரம்பித்து அதனைத் தீவிரப் படுத்தியபோது அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு வழிகளைத் தேடியிருக்க வேண்டும். ஆனால் தனது வேலை முடிந்துவிட்டதுபோல் நோர்வே ஒதுங்கிக்கொண்டது. நோர்வேயின் நடுநிலை வேடமும் கலைந்துபோனது.

அதனால், தமிழர் விடயத்தில் நோர்வேயின் தலையீடும் சாத்தியமற்றுப்போனது. இப்போது இன்னொரு வடிவமாக சுவிஸ் அரசு களமிறங்கியிருக்கின்றது.

தமிழர்களின் ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டம் அழிவதற்கு நோர்வே துணைநின்றது. தமிழர் மனங்களில் இருந்து தமிழீழக் கனவை அழிப்பதற்கும் இனப்படுகொலை என்ற சொற்பாவனையைத் தடுப்பதற்கும் சுவிச்சர்லாந்து களமிறங்கியிருக்கின்றதோ என்று சந்தேகந்தை இந்த ஒன்றுகூடல் வலுப்படுத்தியிருக்கின்றது.

உலகின் அமைதியான நாடு என்ற பெயருடன் நுழைந்து தமிழர்களின் போராட்டம் அழிந்து போவதற்கு காரணமாக நின்றது நோர்வே. இப்போது இன்னொரு அமைதியான நாடு என வர்ணிக்கப்படும் சுவிச்சர்லாந்தும் தமிழர் விடயத்தில் இவ்வாறான நிலையைக் கொண்டிருக்கின்றது என்பது வருத்தத்திற்குரியது.

மறுபுறம், சிறீலங்காவின் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கின்றது. மேற்குலக சார்பு அரசு அமையுமா? சீன சார்புக் கொள்கையுடைய அரசு அமையுமா? என்ற கடும் போட்டி நிலவி வருகின்றது. இதில் தங்கள் சார்பு அரசை ஆட்சிக்கு கொண்டுவருவதில் மேற்குலகமும் சீனாவும் கடுமையாகவே முயன்று வருகின்றன.

இந்த நிலையில்தான் இந்த ஒன்றுகூடலும் நடத்தப்பட்டிருக்கின்றது.

2005ம் ஆண்டு இப்படியயாரு போட்டி நிலை தோன்றியபோது ரணிலைக் கொண்டுவருவதில் மேற்குலகம் கடுமையாக முயன்றது. ஆனால், விடுதலைப் புலிகள் எடுத்த தேர்தலைப் புறக்கணிக்கும் முடிவால் மகிந்த வெற்றிபெற்றார்.

இது விடுதலைப் புலிகள் மீது மேற்குலகத்திற்கு கடும் சினத்தையும் ஏற்படுத்தியிருந்தது. அதனைத் தொடர்ந்து, 2015ம் ஆண்டு தங்கள் சார்பு அரசைக் கொண்டுவருவதற்கு முயன்ற மேற்குலம், சிங்கப்பூரில் தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகளின் ஒன்றுகூடல் ஒன்றை நடத்தியது. ராஜபக்சக்களின் வீழ்ச்சிக்கு இந்தக் கூட்டம் ஒரு முன்னோடியாக அமைந்ததென்றால் அது மிகையில்லை.

இப்போது சுவிற்சர்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சு நடாத்தியிருக்கும் இந்த ஒன்றுகூடல் தமிழீழம், இனப்படு
கொலை போன்ற சொற்பாவனைகளைத் தடுப்பது மட்டுமல்ல, நவம்பர் 16 சிறீ லங்கா அதிபர் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் அதற்கு முன்னோடியாகவும் நடத்தப்பட்ட ஒன்றாகவே கருதப்படுகின்றது.

ஆனால் இந்த ஒன்றுகூடலின் மூலம் சுவிச்சர்லாந்தின் தமிழர் நிலை தொடர்பான உண்மை முகம் வெளிச்சத் திற்கு வந்துவிட்டது.

2010 ஜனவரி 15ல் டப்ளின் நகரில் நடந்த மக்கள் தீர்ப்பாயத்தில், மக்கள் தீர்ப்பாயத்தின் 10 பேர் கொண்ட நீதிபதிகளின் தலைமை நீதிபதி பிரான்சுவா ஹூதா அவர்களினால் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளபட்டது இனப்படுகொலை என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், இனப்படுகொலை குற்றச்சாட்டின் மீது மேலும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

அத்துடன், விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்கா அரசிற்கு இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை முறிந்ததற்கு சர்வதேச சமூகம் பொறுப்பு என்று கூறியிருந்தார். ஆனால் இன்று இவற்றை மறைக்கும் மறக்கடிக்கும் வேலைகள் கனகச்சிதமாக நடக்கின்றன.

‘வாலு போச்சு கத்தி வந்தது டும் டும் டும்’ என்று நரி கொட்டம் அடித்த கதைபோல், தமிழர்களும் ‘நோர்வே போய் சுவிஸ் வந்தது டும் டும் டும்’ என்று கொட்டம் அடிப்பதைத் தவிர இப்போது வேறுவழியில்லை.

111

ஆனால் இந்த ஒன்றுகூடலுக்குப் பின்னர் பிரித்தானியாவில் ஒரு முக்கிய ஒன்றுகூடல் நடத்தப்பட்டுள்ளது தமிழ்மக்களுக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. பிரித்தானியாவின் நாடாளுமன்றில் கடந்த 24ம் நாள் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக சிறீலங்கா அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட போர், ஓர் இன அழிப்பு தான் என்னும் கோரிக்கையை வலியுறுத்தி பிரித்தானிய தமிழருக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு ஒன்றுகூடல் ஒன்றை ஒழுங்கு செய்து நடத்தியிருந்தது.

இதில் பிரித்தானியாவின் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் நிழல் அமைச்சர்கள் கலந்துகொண்டு இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை வலியுறுத்தியுள்ளனர்.

இங்கு உரையாற்றிய பிரித்தானியாவின் எதிர்க்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின், சிறீலங்கா அரசாங்கம் ஐக்கிய நாடுகளின் மனிதவுரிமைகள் ஆணைக்குழுவுடன் இணைந்து செயற்பட வேண்டும் என வலியுறுத்தியதுடன், தாம் ஆட்சி அமைத்தால் சிறீலங்காவுடனான இராணுவ பொருளாதார உடன்படிக்கைகள் இரத்தாகும் என்றும் எச்சரித்தார்.

அத்துடன், ஒருவருக்கு என்ன ஆனது என்று தெரியாத வலி ஒருபோதும் நீங்காத ஒரு வலியாகவே இருக்கும் என்று குறிப்பிட்ட அவர், தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்துள்ள சிறீலங்கா படையினர் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அதேவேளை, இங்கு உரையாற்றிய தொழிற்கட்சியின் நிழல் பன்னாட்டு வணிகத்துறை அமைச்சர் பரிகார்டினர், தமது கட்சி ஆட்சிக்கு வந்தால் சிறீலங்கா அரசுக்கான வணிக சலுகைகள் முடக்கப்படும் என்று எச்சரித்தார்.

தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட குற்றங்களை விசாரிப்பதற்கு சிறீலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் மறுத்தால், தொழிற்கட்சியின் ஆட்சியில் அதன் மீது பொருண்மியத் தடைகள் விதிக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

தொழிற்கட்சியின் இந்த ஆதரவு தமிழ் மக்களுக்கு ஆறுதல் அளிக்கின்றபோதும், இவர்கள் ஆட்சிக்கு வந்து இவை எல்லாம் நடக்குமா என்பதை தமிழர்கள் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

ஆசிரிய தலையங்கம்
நன்றி: ஈழமுரசு