நமது வாசிப்பின் வேர்கள்

வெள்ளி ஏப்ரல் 24, 2020

பாட்டியின் வடைச் சூடு
முருகனின் சுட்ட பழம் வேண்டுமா?
மாம்பழமாம் மாம்பழம்
குடை பிடித்துச் செருப்புமிட்டு ….
காக்கையாரின் கண்டு வந்த புதினங்கள்
வெள்ளத்தில் கல்லெறிந்து விளையாட வேண்டாம்.
பந்தடிப்போம் பந்தடிப்போம் பாலா ஓடி வா.
அதியமானினின் அருநெல்லிக் கனி
பெரியப்பாவின் வெள்ளைப் பசு
புத்திமான் பலவான்
இன்றைக்கு இறைத்தது போதும்
லக்ஸ்பிறேயின் கவரக் கொய்யாக்கள்
மாயாவின் முரட்டுக் குத்து
மாலஸ்தியின் அதிரடி
முரட்டுக் காளைக் கார்த்
லப்பாம் டப்பாம்
சற்றும் மனம் தளராத விக்கிராமதித்தன்
முச்சந்தி முரளி
வேலுப்பிள்ளையின் ஒடியற் கூழ்

நமது வாசிப்பின் வேர்கள், இப்படித் தான் எம்மையறியமால் எமக்குள் வேர் பிடித்தன். எங்களின் காலங்கள், எங்களுக்குப் புத்தகங்களைத் தீனி போட்டு வளர்த்தன. அம்புலி மாமாவையும், பாலமித்திராவையும், ராணிகாமிக்ஸ் களையும், தவறவிடாமல் படித்த பள்ளிக் காலங்கள் எங்களுடையவை. அம்புலிமாமாவின் புது மை வாசங்களில் கிறங்கின எம் சிறு மனங்கள். சற்று மனம் தளராமல் விக்கிராமாதித்தனோடு, சேர்ந்து பிணத்தை தூக்கிக் கொடுத்தோம். அவன் காலடியில் ஊர்ந்த பாம்பு, ஒவ்வொரு முறையும் நம்மை அச்சப்படுத்தியது. மாயாவியின் ஓங்கிய குத்தில், ஒரு புளகாங்கிதம் பெற்றோம். அழிறப்பர்களில் பேனா மை பூசி, மண்டையோட்டுக் குறியை குத்திப் பார்த்தோம்.

குள்ள மனிதர்களும், பறக்கும் தட்டுக்களும், எங்கள் பாலகங்களின் பசி மறந்த பேசு பொருட்களாகின. லப்பாம்,டப்பாம் நமது ஆஸ்தான நண்பர்களானார்கள். நாடு காத்த சிறுவன் கதை, எங்களுக்குள் தேசப்பற்று வளர்த்தது. பள்ளிக் கூடத் தமிழ்ப் புத்தகங்களே, எங்கள் வாசிப்பின் பெரும் பாலமாக இருந்தன. அழகழகான வண்ணப்படங்கள், நம் எண்ணங்களுக்குள், பசுமரத்தாணியாகி பதிந்தன. சற்றோவையும்,முறூவையும், கீதாவையும், சமனையும், எங்களுக்கு பெயர்களாக்கி, நடிக்க விட்டார் ஆங்கில ஆசிரியர்.

பள்ளி தொடங்கு முன்னமே, பாடப் புத்தகங்களின் கதைகளை தீராப் பசியுடன் வாசித்து முடித்தோம். நைற்றைற்ரர் என்ற ஒரேயொரு ஆங்கில திரை நாடகத்தை மட்டுமே, கறுப்பு வெள்ளை குட்டித் தொலைக்காட்சிகளில் கண்டு களித்தோம். இருக்கிற மணிக்கட்டில், இல்லாத மணிக்கூட்டில், நில்லென்றால் நிற்கிற காரோடும், வாவென்றால் வருகிற காரோடும்….பேசிப் பார்த்து கதாநாயகனானோம்.

புத்தாண்டுக்கும், தீபாவளிக்கும், நதியாவின் படம் போட்ட வாழ்த்தட்டைகள் எழுதிப் பகிர்ந்தோம். அம்மம்மாக்கள் நிலா முற்றத்தில் கதை சொன்னார்கள். தமிழாசிரியர்கள் ருசிக்க ருசிக்க மகா பாரதக் கதைகள் ஒப்பித்தார்கள். யாரிடமும் தொல்லை பேசிகள் இருக்கவில்லை. தொலைக்காட்சிகளில் அறுபத்தெட்டு நாடகங்கள் போனதில்லை.

வாசிப்பின் ருசியை சுவாசித்தோம்.
தமிழின் பாற்கிண்ணங்களை, கடைவாயொழுகப் பருகினோம். ஐந்து வசனங்கள் சொந்தமாக எழுதப் பழக்கினார்கள் ஆசிரியர்கள். சொந்தமாய் எழுதிய, ஒற்றை வரி வசனங்களில், பெரும் பரவசம் இருந்தது, நான் விரும்பும் பெரியார், நானொரு கிளியானால், அறுந்த செருப்பின் சுயசரிதை, மாலைக் காட்சி என்று தலைப்புகள் தந்து, எங்களை எழுத்தாளர்களாக்கி வளர்த்தனர் தமிழாசான்கள். சுருக்கியெழுதப் படித்தோம். குறியீடுகளுக்காய் குட்டு வாங்கினோம். முற்றுப் புள்ளி இடவில்லை என்பதற்காய், புள்ளிகளை இழந்தோம். பந்தி பிரித்து எழுதவும், பிழையற்று எழுதவும், உறுப்பாய் ஒழுங்காய் பயின்றோம். வாசிப்பு ஒரு பரீட்சைப் பாடமாக இருந்தது. நூலகப் பாடம் இருந்தது. ஆசிரியர் நல்ல நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்தினர்.

எங்களை தமிழ் வளர்த்தது. நாங்கள் தமிழால் வளர்ந்தோம். எங்கள் இன்றைய வாசிப்பின் விருட்சங்கள், இப்படித் தான் வேர் விட்டுப் படர்ந்தன.

தீபிகா
23.04.2020
03.38 Pm