மோசமடையும் பிரான்ஸின் நிலைமை

வெள்ளி அக்டோபர் 16, 2020

பிரான்ஸ் நாட்டில் அதிபர் இம்மானுவல் மக்ரோன் அவர்களின் தொலைக்காட்சிச் செவ்வியின் பின்னர் பிரதமர் ஜோன் கஸ்தெக் அவர்களும் உள்துறை அமைச்சர் ஜெறால்ட் தர்மனா அவர்களும் ஏனைய அமைச்சர்களும் இணைந்து ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றை நேற்று 15 ஆம் திகதி நடாத்தியுள்ளனர்.

சுகாதார அமைச்சர் ஒலிவியே வரோன், நிதி அமைச்சர் ப்ரூனோ லு மேர், தொழில்துறை அமைச்சர் எலிசபெத் போர்ண் ஆகியோரும் இந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

கொரோனா 2வது அலையைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பற்றி பிரதமர் இந்தச்சந்திப்பில் எடுத்து விளக்கினார்.

ஊரடங்கு அமுலில் இருக்கும் போது அவசர தேவைகள் நிமித்தம் வெளியே செல்ல வேண்டியவர்களுக்கு வசதியாக அரசாங்க இணையத்தளத்தில் அத்தாட்சி அனுமதி விண்ணப்பப்படிவம் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த அத்தாட்சிப் பத்திரத்தை நிரப்பி தம்முடன் வைத்திருக்க வேண்டும்.

சோதனையில் ஈடுபடும் துறையினர் கோரும் பட்சத்தில் குறிப்பிட்ட அத்தாட்சிப் பத்திரத்தை காண்பித்தல் வேண்டும்.

வைத்தியசாலை,மருந்தகம் என்பனவற்றிற்குச் செல்பவர்களும், பணியிடங்களில் இருந்து தாமதமாக அல்லது காலை 6 மணிக்கு முன்னதாக செல்ல வேண்டியவர்களும் இந்த அத்தாட்சிப் பத்திரத்தை வைத்திருத்தல் வேண்டும்.

விமானம், ரயில் என்பனவற்றில் ஊரடங்கு அமுலில் இருக்கும் வேளைகளில் பயணம் செய்ய வேண்டி ஏற்படின் குறிப்பிட்ட அத்தாட்சிப் பத்திரத்தை தம்முடன் எடுத்துச் செல்லவேண்டும்.

இயலாதவர்களுக்கு உதவுபவர்களும், செல்லப்பிராணிகளை வளர்த்து வருபவர்களும் இந்த நடைமுறையைக் கைக்கொள்ள முடியும்.

அரசாங்கத்தின் அனுமதி கோரும் அத்தாட்சிப் பத்திரத்தை ஸ்மார்ட் போண்களில் தரவிறக்கம் செய்து நிரப்பிக் கொள்ளலாம் அல்லது தாள் ஒன்றில் விபரங்களை எழுதியும் எடுத்துச் செல்லலாம்.

இவற்றைக் கடைபிடிக்கத்தவறினால் முதல் தடவை 135 யூரோ தண்டம் அறவிடப்படும்.

தொடர்ந்து மூன்று தடவைகள் தவறிழைப்பின் 3,750 யூரோ தண்டமும் 6 மாத சிறை தண்டனையும் விதிக்கப்படும்.

தனிப்பட்ட கொண்டாட்டங்கள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளன. திருமணம், மாணவர்களின் மாலைநேர சந்திப்புக் கொண்டாட்டங்கள், சமய வைபவங்கள், மண்டபங்களில் நடைபெறும் வைபவங்கள், பொதுமக்கள் கூடும் அனைத்து வைபவங்களும் தடைசெய்யப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கைகள் அனைத்தும் பிரான்ஸ் நாடு முழுவதும் அமுல் படுத்தப்பட்டுள்ளன.

பொது இடங்களில், தனிப்பட்ட இடங்களில் ஆறு பேருக்கு மேல் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது.

தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் சிறப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.

ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதை பத்து நிமிடத்தில் இருந்து 30 நிமிடத்திற்குள் அறிந்துகொள்ளக்கூடிய பரிசோதனை கருவிகள் தற்போது அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

5 மில்லியன் பரிசோதனைக் கருவிகள் நாட்டுக்கு வந்து சேர உள்ளன.

குடும்பவைத்தியர்கள், மருத்துவமனை வைத்தியர்கள்,தாதியர்கள் மருந்தகப்பணியாளர்கள் என்போர் இந்த கருவிகளைப் பயன்படுத்தி பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும்.

ஒக்டோபர் 17ம் திகதி சனிக்கிழமை முதல் இரவு 9 மணிக்குப் பின்னர் பொதுமக்கள் செல்லும் இடங்கள் யாவும் மூடப்படும்.

இதில் விதிவிலக்காக மருத்துவ நிலையங்கள், வறியவர்களுக்கு உதவும் அமைப்பு நிலையங்கள், விடுதிகள், இல்லங்களுக்கு விநியோகம் மேற்கொள்ளும் உணவகங்கள் என்பன ஒன்பது மணிக்குப் பின்னரும் திறந்திருக்கலாம்.

மருத்துவப் பணியாளர்களுக்கான 200 யூரோ ஊக்குவிப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் வழங்கப்படும்.

ஒக்ரோபர் மாதத்தில் வரும் விடுமுறை காலத்தில் பணியாற்றுபவர்களுக்கு 110 யூரோ முதல் 200 வரை வழங்கப்படும் எனவும் பிரதமர் ஜோன் கெஸ்தெக் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு அமுலில் உள்ள மாநிலங்களில் இணையத்தளம் வழியான பணிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று தொழில்துறை அமைச்சர் எலிசபெத் போர்ண் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் பாதிப்படையும் நிறுவனங்களுக்கு உதவிகள் வழங்கப்படும். இதற்கென ஒரு மில்லியாட் யூரோ தயாராக இருப்பதாக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கின்ற பொழுது அதனை மீறுபவர்களைப் பரிசோதனை செய்வதற்கு பிரான்ஸ் நாட்டில் 12 ஆயிரம் காவல்துறையினர் ஈடுபடுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே நாளில் 88 பேர் மரணம்

பிரான்ஸ் நாட்டில் கொரோனா தொற்று ஆரம்பித்த காலத்திலிருந்து இப்பொழுது வரை முதல் தடவையாக 30 ஆயிரத்து 621 பேருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதாக பிரான்ஸ் சுகாதாரத் திணைக்களம் ஒக்டோபர் 15ஆம் திகதி மாலை அறிவித்துள்ளது.

நேற்று 15ஆம் திகதி மட்டும் 24 மணி நேரத்தில் 88பேர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்து 207பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

9605 பேர் மொத்தமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் ஒக்ரோபர் 15ம் திகதி 24 மணிநேரத்தில் 77பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீவிர சிகிச்சை பிரிவில் மொத்தமாக ஆயிரத்து 750 பேர் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

பிரான்சில் ஆயிரத்து 586 இடங்கள் கொரோனா நிலவும் பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருப்பதுடன், அவ்விடங்களில் சோதனை நடவடிக்கைகள்,தடுப்பு நடவடிக்கைகள் என்பன முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இதில் 335 இடங்கள் முதியோர் இல்லங்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

15ஆம் திகதி 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று பரவும் பகுதிகளாக 130 இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

84 மாவட்டங்கள் கொரோனா தொற்று நிலவும் தீவிர பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

33 ஆயிரத்து 125 பேர் கடந்த மார்ச் மாதம் முதல் இன்று வரை பிரான்சில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.

பிரான்ஸில் கொரோனா நச்சுயிரித் தொற்று மிக அதிகமாக பரவி வருகின்றது.

இதுவரை இல்லாத அளவுக்கு ஒக்டோபர் 15ஆம் தேதி 24 மணி நேரத்தில் 30 ஆயிரத்து 621 பேருக்கு ஏற்பட்டுள்ள கொரோனா நச்சுயிரி தொற்று பிரான்சில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் அதிபர் இம்மானுவல் மக்ரோன் அறிவித்துள்ள இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமுலுக்கு வருவதன் மூலம் இந்த எண்ணிக்கை குறைவடையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

  • பாரிஸிலிருந்து அருண் சண்முகலிங்கம்