மல்யுத்த களத்தில் இறங்கும் ‘தி ராக்’-ன் மகள்!

செவ்வாய் பெப்ரவரி 11, 2020

பிரபல மல்யுத்த வீரரும், ஹாலிவுட் நடிகருமான டுவெய்ன் ஜான்சனின் மகளான சிமோன் ஜான்சன் தந்தையைப் போல மல்யுத்தக் போட்டிகளில் பங்குபெற உள்ளதாக அறிவித்துள்ளார்.

அமெரிக்காவின் புகழ்பெற்ற மல்யுத்த வீரர் டுவெய்ன் ஜான்சன். அங்குள்ள டபிள்யூ.டபிள்யூ.ஈ என்னும் (உலக மல்யுத்த பொழுதுபோக்கு) அமைப்பின் போட்டிகளில் சாம்பியன் ஆக விளங்கியவர். தனது தனித்துவமான ஆட்டத்தால் ரசிகர்களால் "ராக்" எனும் பட்டப்பெயரால் புகழ்பெற்றவர். 

மல்யுத்த போட்டிகளில் இருந்து விலகிய பின்னர் அவர் தொடர்ந்து ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இவரது முதல் மனைவியான டேனி கார்சியாவுக்கும் இவருக்கும் பிறந்தவர் சிமோன் ஜான்சன். இவருக்கு தற்போது 18 வயதாகிறது. 

இந்நிலையில் டுவெய்ன் ஜான்சனின் மகளான சிமோன் ஜான்சன் தந்தையின் வழித்தடத்தில் மல்யுத்த போட்டிகளில் விளையாட உள்ளதாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பான ஒப்பந்தம் குறித்த விபரத்தை டபிள்யூ.டபிள்யூ.ஈ அமைப்பு நேற்று வெளியிட்டது. அதில் சிமோன் மல்யுத்த போட்டிகளுக்கான பயிற்சியை தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. 

 

மகளுடன் டுவெய்ன் ஜான்சன்

 

அதேபோல் சிமோன் அந்த அமைப்பிற்காக வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எனது குடும்பத்திற்கு மல்யுத்தத்துடன் இருக்கும் தொடர்பு தொடர்ந்து  வருகிறது என்பதை உணர்வது எனக்கு அத்தனை முக்கியமான விஷயம். தற்போது அதனைத் தொடர எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. மல்யுத்தம் செய்வதற்கு மட்டுமல்ல, ஒரு பெரிய பாரம்பரியத்தை தொடர்வதற்கும்தான்’ என்று தெரிவித்துள்ளார். சிமோனின் இந்த முடிவிற்கு அவரது பெற்றோர்கள் இருவரும் அவரைப் பாராட்டி தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். 

சிமோனின் தந்தை ட்வெய்ன் ஜான்சன், அவரது தந்தை ராக்கி ஜான்சன் மற்றும் ராக்கி ஜான்சனின் தந்தை பீட்டர் மைவியா ஆகிய மூவருமே புகழ்பெற்ற மல்யுத்த வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.