மே 18 தமிழின அழிப்பு நாள்!

வெள்ளி மே 08, 2020

மே 08 (2 ஆம் உலக யுத்தத்த நிறுத்த உடன்படிக்கை நாள்), நவம்பர் 1 ஆம் நாள் இறந்த ஆத்மாக்களின் நாள், இவ்வாறு பல நாட்கள் ஒவ்வொன்றுக்குமான நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

துருக்கியர்களால் இனப்படுகொலைக்கு உள்ளான ஆர்மேனியர்கள் 100 வருடங்களைத்தாண்டியும் அந்த நாளை நினைவுகூருகின்றார்கள்.

இது போன்றதொரு நாளாகவே மே 18 தமிழின அழிப்பு நாளாக கொள்ளப்பட வேண்டும். தமிழீழ ஆட்சி நிர்வாகத்தில் (கறுப்பு யூலை நாள், (யூலை 23) பெப்ரவரி 04 தமிழர் கரிநாள் ) இவ்வாறான நாட்கள் நினைவு கூரப்பட்டன.

ஆனால் தமிழின அழிப்பு நினைவு நாள் என்று கொண்டு வரப்படவில்லை. அந்தக் கனதியும் இல்லாதிருந்திருக்கலாம் அதற்கு காரணம் உலகத்தின் பார்வையில் இனஅழிப்பு என்று சொன்னால் பல்லாயிரம் இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட வேண்டும் என்பதாகக் கூட இருக்கலாம். கடந்து சென்ற சிங்கள பௌத்த அரசோ இதில் மிகக்கவனமெடுத்து நடந்து கொண்ட யூலைக்கலவரம் போன்றதொரு நிகழ்வு இலங்கைத்தீவில் ஏற்படக்கூடாது என்பதில் மிகுந்த கவனமெடுத்தன. ஆனால் சர்வதேசம் இலங்கையை கையகப்படுத்தி தனது நலனுக்காக தமிழர் போராட்டத்தை பயங்கரவாதம் என்ற முலாம் பூசி சிங்கள தேசத்தை தமிழினப்படுகொலையை செய்யவைத்ததும், சிங்களத்திற்கு பயங்கரவாதத்தை அழித்த நாடு என்ற பெயரை பெற்றுகொடுத்தமை 2009 நடந்தேறியதோர் விடயமாகிப் போய்விட்டது.

இதனை ஈழத்தமிழர் தமிழினப்படுகொலைக்கு நீதிகேட்கும் நாளாக மே 18 வரித்துக்கொண்டு கடந்த 11 வருடங்களாக தாயகத்திலும், புலத்திலும், தமிழ்நாட்டிலும் தமது சனநாயகப் போராட்டத்தை மக்கள் துணையோடு நகர்த்திச் செல்கின்றனர். இது இன்று அனைத்து தமிழ்மக்கள் மத்தியில் மட்டுமல்ல உலக மக்களின் மனதிலும் அடுத்த தமிழ் தலைமுறையின் மனதிலும் பதிவாகி வருகின்றவேளையில் 2020 பேரிடர் சூழ்நிலையில் தமிழீழ செந்நெருப்புநாள் என்றதொரு நாளைக் கொண்டு வருவதும், மே 18 ல் அந்தநாளை புதிதாக நடைமுறைப்படுத்துவதானது சிங்களம் தமிழர் தாய்நிலங்களில் நடந்த தமிழின அழிப்பின் தடையங்களை அழிப்பதில் காட்டுகின்ற விடயங்களுக்கு ஒப்பானதாகவே பார்க்க வேண்டும்.

இந்த அதிகாரத்தை யார் யாருக்கு கொடுத்தார்கள் என்றும் பார்க்க  வேண்டும். அப்படி அதிகாரமிக்க ஆளுமை மிக்கவர்கள் இருப்பார்களானால் அவர்கள் வெளித்தன்மையுடன் வந்து மக்கள் முன் இந்த விடயத்தை முன்வைத்து அதற்கான அங்கீகாரத்தை பெற்றிருக்கவும் வேண்டும்.

மாறாக ஓர் கலைநிகழ்வை நடாத்துவதற்கு நிகழ்வுக்கு தலைப்பு போடுவதுபோன்று போடும் விடயமல்ல இது. களத்து தமிழ்மக்களும், புலத்துத் தமிழ் மக்களும் தற்போது உலப்பேரிடர் சூழ்நிலையால் செந்நெருப்பாகத்தான் இருந்து கொண்டிருக்கின்றனர். வரும் காலங்களில் எவ்வாறு இந்த விடுதலைத்தீயை அடுத்த தலைமுறையிடம் கையளிக்கலாம் என்ற சிந்தனையையும், செயற்பாட்டையுமே அனைவரிடம் எதிர்பார்க்க வேண்டும். மாறாக மூட்டிவிட்ட விடுதலைத் தீயை சுருக்கி செந்நெருப்பாக மாற்றி பின்னர் அணைந்து விட்டது என்ற அவப்பெயரை இந்தத் தலைமுறை தேடவும் வேண்டாம் அதற்கு விடவும் மாட்டோம்.