லெப். சீலன்,வீரவேங்கை ஆனந்த் நினைவு நாள்!

திங்கள் ஜூலை 15, 2019

1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி.மாலை 3 மணி.கச்சாய்க் கடலிலிருந்து வீசும் இதமான காற்று.அந்த மீசாலைக் கிராமம்
அமைதியில் தோய்ந்து போயிருக்கிறது.

அந்த அமைதியைக் குலைத்துக் கொண்டு,சிறிலங்காவின் இராணுவக் கூலிப்படைகள், அந்தச் சிறிய கிராமத்தைச் சுற்றிவளைக்கின்றன.

கச்சாய் வீதியுடன் இணையும் அல்லாரை மீசாலை வீதியை, அரச படைகளின் வாகனங்கள் ஆக்கிரமிக்கின்றன.

ஒரு மினி பஸ்,இரண்டு ஜீப்,ஒரு இராணுவ ட்ரக் வண்டடி.  சிவிலுடையணிந்த சிங்கள இராணுவ அதிராடிப் படையினர்.அந்தக் கிராமம் சிலிர்த்துக் கொள்கிறது.

கல்லும் மணலும் கலந்த குச்சு ஒழுங்கைகளுக்கூடாகா,நான்கு இளைஞர்கள் இயந்திரத் துப்பாக்கிகளுடன் சைக்கிளில் விரைந்து கொண்டிருந்தனர்.

ஒரு துரோகி காட்டிக் கொடுத்தால் சிங்கள இராணுவம் தங்களது மறைவிடத்தைச் சுற்றிவளைப்பதை உணர்ந்து,அந்த கிராமத்தை விட்டு வெளியேற விரையும் அந்த நான்கு இளைஞர்களும்,அதோ அந்த அல்லாரை மீசாலைத் தார் வீதியைக் கடந்து கொண்டிருக்கிறார்கள்.

வீதியின் ஒரு புறம் சுடலையருகேயும் மறுபுறம் நெசவு நிலையத்திற்கருகிலும் நின்று கொண்டிருந்த இராணுவ வண்டிகள் இளைஞர்கள் கடந்த ஸ்தலத்தை நோக்கிச் சடுதியாக விரைகின்றன அந்த ஸ்தலத்தில் இராணுவ வண்டிகள் குலுங்கிக்கொண்டு நிற்கின்றன.
 
இராணுவத்தின் குண்டு துளைக்கும் எல்லைக்குள் அந்த இளைஞர்கள் விரைந்து கொண்டிருக்குறார்கள்.

மினிபஸ்ஸில் இருந்த இராணுவத்தினர் இறங்கி ஓடிப் பனை வடலிக்குள் பாதுகாப்பான இடங்களில் தங்களை நிலைப்படுத்திக் கொள்கின்றனர்.

மொத்த இராணுவத்தினரில் முப்பதுக்கு மேற்ப்பட்டோர் பனை வடலிக்குள் குழுமுகின்றனர்.

தார் வீதியைக் கடந்த இளைஞர்கள் துரதிர்ஸ்டவசமாக இப்போது நின்று கொண்டிருப்பது,வெறும் பொட்டல் வெளியில்.சுற்றிலும் சூழ்ந்து கொண்டுவிட்ட அரச படைகளை உறுத்துப் பார்கிறான்,அந்த இளைஞர்களின் தலைவன்.

அவன் தான்–சீலன்

அரச படைகளின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிய வீர மறவன்.
ஆசீர்,சீலன்,இதயச்சந்திரன் ஆகிய பெயர்களில் அரச படைகள் வெறிகொண்டு தேடும், லூக்காஸ் சார்ல்ஸ் அன்ரனி தமிழீழ விடுதலைப்புலிகளின் இராணுவப் பிரிவுத் தலைவன்.

“சுடுங்கள்”கட்டளை பிறப்பித்த சீலனின் இயந்திரத் துப்பாக்கி சடசடக்கிறது மற்ற இளைஞர்களும் விரைந்து துப்பாக்கிகளை இயக்குகின்றனர்.

வெட்டவெளியில் அந்த வீரமகன் சீலன்.அவனுக்கருகில் ஆனந்த் என்னும் அருள் நாதன்.உடலும் உள்ளமும் வைரம் பாய்ந்தவன். அவனோடு இன்னுமொரு வீரன்.

ஆபத்தின் எல்லைக்கப்பால் அடுத்த வீரன் உறுதி,நிதானம்,வேகம், லாவகம் களத்திலே புலிகள்.

இளைஞர்களின் எதிர்த்தாக்குதல் சிங்களக் கூலிபடைகளைத் திணறச் செய்கிறது.ஆனாலும் பாதுகாப்பான பனை வடலிக்குள் பதுங்கிக் கொண்டு அந்தக் கூலிகளும் தொடர்ச்சியாகத் தாக்கிகின்றனர்.

வெட்டவெளியில் தொடர்ந்து முன்னேறவோ,பின்வாங்கவோ முடியாத இக்கட்டான நிலையில் அவர்கள் சிக்கிக்கொண்டு விட்டனர்.

ஆனாலும் ஆயுதங்களோடு அரச படைகளின் கையில் சரணடையும் கோழைகளல்ல இவர்கள்!பிரபாகரனின் கைகளிலே வளர்ந்தவர்கள்.

எதிரிகளின் கைகளில் பிடிபடுவதை விட மானத்தோடு சாவது மேல், என்ற வீர மரபில் பயிற்றப்பட்டவர்கள்.

இறுதி மூச்சி வரை இந்தப் புலிகள் போராடத் திடங்கொண்டனர்.
சுற்றிலும் குவிந்து நிற்கும் கூலிப்பட்டாளம்!வெளியைத் துளைக்கும் சன்னங்கள்.மண் தரையில் புழுதி கிளப்பும் குண்டுகள்.சீலனின் எந்திரத் துப்பாக்கி தொரர்ந்து சடசடக்கிறது.!

ஆனால் கூலிபடையின் துப்பாக்கிச் சன்னம் ஏற்கனவே பெற்றிருந்த சீலனின் வீரத்தழும்புகளைக் கிழித்துக்கொண்டு மார்பில் பாய்கிறது. ரத்தம் பீறிடச் சீலன் தள்ளாடுகிறான்.

இரண்டு முறை முன்னரே களத்தில் குருதி சிந்திய அந்த வீரன், தன்னுயிர் போகவில்லை என்பதை உணர்கிறான்.

உயிரோடு அகப்பட்டால் கடித்துக் குதரக் காத்திருக்கும் வேட்டை நாய்கள் சுற்றிலும் !“என்னைச் சுட்டுக் கொன்றுவிட்டு நீங்கள் பின் வாங்குங்கள்”என்று, சீலன் கட்டளையிடுகிறான்.

படைத்தலைவனின் கட்டளை.பணிக்கப்பட்ட இளம் வீரனோ திகைத்துப்போய் நிற்கிறான்.

பனை வடலிக்குள் வசதியாகப் பதுங்கி நிற்கும் இராணுவ வேட்டை நாய்களின் தொடர் வேட்டு மழை.

சீலனின் கட்டளையை நிறைவேற்றுவதா?

ஒரு பாசம் மிக்க தோழனின்,ஒரு வீரம் மிக்க போராளியின் மரணம் தன்னால் நிகழ்வதா?அல்லது அவனை உயிருடன் எதிரியின் கையில் பிடிபட விட்டுவிட்டுத் தான் பின்வாங்குவதா?வினாடி நேரத்தில் விடை காணவேண்டிய நிர்ப்பந்தம் அந்த வீரனுக்கு.

“என்னைச் சுட்டா சுடு” –சீலனின் கண்டிப்புடன் கூடிய கட்டளை மீண்டும் பிறக்கிறது.

நெஞ்சில் வழியும் ரத்தம்;முகத்தில் துளிர்க்கும் வியர்வை.
சீலன் தல்லாயவாறு கண்டிப்புடன் மீண்டும் கட்டளையிடுகிறான்.

லட்சியத் தணலிலே புடம் போட்ட அந்த வீரனின் நெஞ்சில்,உறுதி பிறக்கிறது.

காண நேரத்திற்குள் சீலனின் தலையில் துப்பாக்கிச் சன்னங்கள் பாய்கிறன.புரட்சி வீரன் சீலனின் உடலை மீசாலை மண் அணைத்துப் பெருமை தேடிக்கொள்கிறது.

அதற்குள்,குறி பார்த்துச் சுடுவதற்கு வாகன–வாட்ட சாட்டமான தோற்றம் கொண்ட ஆனந்த் குண்டு பட்டுச் சாய்கிறான்.ஆனந்த் உயர்ந்தவன்–உயரத்தில்,தன்மானத்தில்,வீரத்தில்.
“என்னையும் சுட்டு விடு”–ஆனந்தின் வேண்டுகோள்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தூய்மைக்கு முத்திரை பாதிக்கும் ரத்தச் சாட்சிகள்.

பிரபாகரனின் பயிற்சிக் களத்திலே வளர்ந்த வேங்கைகள்.
ஆனந்தின் தன்மானம் காக்கிறான் அந்த இளம் வீரன்.மீசாலை மண்ணின் இரண்டு மாணிக்கங்கள் தரையில் சரிந்தது!

தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை,மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்.