கூட்டமைப்பின் புதிய வியூகம்

ஞாயிறு மே 10, 2020

அலரி மாளிகையில் கடந்த திங்கட்கிழமை பிரதமர் மகிந்த ராஜபக்ச ஏற்பாடு செய்திருந்த, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கூட்டத்தில், பங்கேற்றதன் மூலம், தற்போதைய  அரசாங்கத்துடனான புதியதொரு உறவுக்கு களம் அமைத்துக் கொண்டிருக்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

 கடந்த 4ஆம் திகதி பிரதமர் மகிந்த ராஜபக்ச, கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் 225 உறுப்பினர்களையும்,  அலரி மாளிகையில் ஒரு கூட்டத்துக்கு அழைத்திருந்தார்.

கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்ற பிடிவாதத்தில் இருந்த ஏனைய எதிர்க்கட்சிகள், மகிந்த ராஜபக்சவின் இந்த அழைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை.

 இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதன் மூலம், நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்ற தமது கோரிக்கை பலவீனமடைந்து விடும் என்று கருதியதே, ஏனைய எதிர்க்கட்சிகள் மகிந்த ராஜபக்சவின் அழைப்பை நிராகரித்ததற்குப் பிரதான காரணம்.

 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐ.தே.க.வின் ஒரு வால் போலச் செயற்படுகிறது என்றொரு குற்றச்சாட்டு, தற்போதைய அரசாங்கத் தரப்பினரால் மாத்திரமன்றி, தமிழர் தரப்பினால் கூட முன்வைக்கப்பட்டு வந்திருக்கிறது.

 இப்போது நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்ற விடயத்துக்குப் பின்னாலும் கூட, கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனே இருக்கிறார் என்பது தான், ஆளும்கட்சியின் நிலைப்பாடு.

 ஆனாலும், ஐதேக எடுக்கின்ற நிலைப்பாட்டையே கூட்டமைப்பும் எடுக்கும் என்ற பொதுவான கருத்தை, உடைக்கும் வகையில், அலரி மாளிகைக் கூட்டத்தில் பங்கேற்றிருக்கிறது கூட்டமைப்பு.

 இதன்மூலம், எல்லா சந்தர்ப்பங்களிலும், ஐதேகவின் வால் போலச் செயற்படவில்லை- அவ்வாறு செயற்படப் போவதில்லை என்ற செய்தியைக் கூறியிருக்கிறது கூட்டமைப்பு.

 கூட்டமைப்பு தொடர்பாக, தெற்கிலும் வடக்கிலும் உள்ள சில கருத்துகளை மாற்றுவதற்காகவும் கூட, இவ்வாறான நிலைப்பாடு எடுக்கப்பட்டிருக்கலாம்.

 ஆனால், அதற்கும் அப்பால், பிரதமர் மகிந்தவின் கூட்டத்தில் பங்கேற்க வேண்டிய அவசியம் கூட்டமைப்புக்கு இருந்து.  ஏனென்றால், கொரோனா தொற்றினால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் பல குறித்து, பேச வேண்டிய நிலையில், கூட்டமைப்பு இருந்தது.

 கொரோனாவை வைத்து அரசாங்கத் தரப்பு தாராளமாகவே அரசியல் செய்து கொண்டிருக்கும் நிலையில், நாடாளுமன்றமும் இல்லை, மாகாண சபைகளும் இல்லை என்ற நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடங்கிக் கிடக்க வேண்டிய நிலையே காணப்பட்டது.

 அரசியல் கட்சிகளும், தலைவர்களும் தலைகாட்டாமல் முடங்கிக் கிடப்பது, என்பது, மக்களிடம் இருந்து அவர்களை அந்நியப்படுத்தும். கொரோனாவுக்குப் பின்னர், அவ்வாறானதொரு நிலையிலேயே கூட்டமைப்பு இருந்து வந்தது. அந்த நிலையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமானால், வழக்கமான பாணியில் இருந்து விலக வேண்டிய தேவை கூட்டமைப்பு தலைமைக்கு இருந்தது.

 அதேவேளை கொரோனாவுக்குப் பின்னர் வடக்கில் புதிய பிரச்சினைகள் முளைத்திருக்கின்றன. பொதுமக்கள் எதிர்கொள்ளுகின்ற இந்தச் சிக்கல்களுக்கு யாரிடம் தீர்வு கேட்டுச் செல்வது என்று தெரியாமல் பொதுமக்கள் திணறிக் கொண்டிருக்கிறார்கள்.

 இந்த நிலையில், கூட்டமைப்பும் கண்ணை மூடிக் கொண்டிருந்தால், எல்லாக் காரியங்களும் கெட்டுப் போய் விடும். ஜூன் 20 ஆம் திகதி இல்லாவிட்டாலும், கூடிய விரைவில் பொதுத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், கூட்டமைப்புக்கு சவாலான தரப்புகள்  களமிறங்கியிருப்பதாலும், இந்த நிலைமையை தொடரவிட முடியாத நிலை இருந்தது.

 அதைவிட தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்து ஆறு மாதங்களாகியும், வடக்கு, கிழக்கு மக்களின் பிரதிநிதிகளாக கருதப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால், ஜனாதிபதியுடனோ, பிரதமருடனோ அதிகாரபூர்வ பேச்சுக்களை நடத்த முடியாத நிலையே காணப்பட்டது.

 தற்போதைய அரசாங்கத்துக்கும் கூட்டமைப்புக்கும் இருந்து வந்த இடைவெளி தான் அதற்கு முக்கிய காரணம்.  ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரித்திருந்தது கூட்டமைப்பு. அந்த தேர்தலில், கோத்தாபய ராஜபக்ச வடக்கு, கிழக்கில் படுமோசமான தோல்வியைச் சந்திக்க நேரிட்டது.

 இதனால், கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், கூட்டமைப்பினால் புதிய அரசாங்கத்துடன் உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள முடியாமல் இருந்தது.

 கூட்டமைப்பு சார்பில் பலமுறை கோரிக்கைகள் விடுக்கப்பட்டும், அரசாங்கத் தரப்பு அதனைக் கண்டுகொள்வதாக இருக்கவில்லை. இவ்வாறான நிலையில், அரசாங்கத்திடம் இருந்து இன்னும் கூடுதல் தூரத்துக்கு விலகிச் சென்றால், தமிழ் மக்களின் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுகின்ற, எடுத்துக் கூறுகின்ற வாய்ப்புக் கிடைக்காமலேயே போய்விடும் நிலையும் காணப்பட்டது.

 இவ்வாறான பல்வேறு சிக்கலான- பின்புலச் சூழலின் மத்தியிலும் தான், அலரி மாளிகைச் சந்திப்புக்கான அழைப்பை ஏற்றுக் கொண்டது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. கூட்டமைப்பின் இந்த முடிவே, அரசாங்கத்துக்கு உச்சியைக் குளிர வைத்து விட்டது, பெயருக்கு ஒரு எதிர்க்கட்சியாவது, தமது கூட்டத்துக்கு வந்ததே என்ற சந்தோசம் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு.

 இல்லாவிட்டால் எதிர்க்கட்சிகள் அனைத்தும் புறக்கணித்து விட்டன என்ற செய்தியே கொண்டு செல்லப்பட்டிருக்கும். அதைவிட, நாடாளுமன்றம் இல்லாத நிலையில், எதிர்க்கட்சிகளுடன் கலந்துரையாடாமல் அரசாங்கம் செயற்படுகிறது பிரசாரமும் வலுப்பெறும்.
 
 ஏற்கனவே அரசியல் கட்சிகளின் தலைவர்களுடனான ஒரு சந்திப்பை ஜனாதிபதி நடத்தியிருந்தார். அதில் எல்லாக் கட்சிகளும் பங்கேற்றிருந்தன. ஆனால் அலரி மாளிகைச் சந்திப்பில் கூட்டமைப்பு தவிர வேறேந்த எதிர்க்கட்சியும் பங்கேற்கவில்லை.

 இவ்வாறான நிலையில், தமது அழைப்பை கூட்டமைப்பு ஏற்றிருந்ததால், உச்சி குளிர்ந்து போயிருந்த பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம், ஒரு தனிப்பட்ட சந்திப்புக்கான கோரிக்கையை விடுத்தது கூட்டமைப்பு.

 அந்தக் கோரிக்கைக்கு உடனடியாகவே பலனும் கிடைத்தது. அன்று மாலை பிரதமர் மகிந்தவின் இல்லத்துக்குச் சென்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேச்சுக்களை நடத்தியிருந்தனர்.

 இந்தப் பேச்சுக்களில், முக்கியமான 9 விடயங்கள் குறித்து பேசப்பட்டதாக கூறியிருக்கிறார், மாவை சேனாதிராசா. அவற்றில் கொரோனா சார்ந்த நெருக்கடிகள் தான் புதியது. ஏனைய கோரிக்கைகளில் அரசியல் கைதிகள் விடுதலை தொடக்கம், அரசியல் தீர்வு வரை வழக்கமான பிரச்சினைகள் தான்.

 இந்தப் பிரச்சினைகளுக்கு மகிந்த ராஜக்சவிடம் இருந்து தீர்வு கிடைத்து விடும் என்ற நம்பிக்கை கூட்டமைப்புக்கு இல்லை. ஆனாலும், இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, புதிய அரசாங்கத்துடனான உறவுகளுக்கு கதவைத் திறந்து விட்டிருக்கிறது,

 மகிந்த  கோத்தா அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், கடும்போக்குவாதத்தை கடைப்பிடித்தாலும், சர்வதேச சமூகத்துக்குப் பொறுப்புச் சொல்ல வேண்டிய கடப்பாட்டில் இருந்து முற்றாகவே தப்பித்துக் கொள்ள முடியாது.

 அவ்வாறான நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை புறக்கணித்துச் செயற்படுவது என்பது அரசாங்கத்துக்கு சிக்கலானது. எனவே, கூட்டமைப்பு காண்பித்த நல்லெண்ண சமிக்ஞையை பிரதமர் மகிந்த நன்றாகவே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.

 இந்தச் சந்திப்பு தொடர்பாக கூட்டமைப்பை எதிர்த்துர அரசியல் நடத்தும்- அதன் முன்னாள் பங்காளிகள் எதிர்மறையான கருத்துக்களை வெளியிட்டுக் கொண்டிருந்தாலும், இது ஒரு ஆக்கபூர்வமான முயற்சியாகவே நோக்கப்படக் கூடியது.

 தமிழ் மக்களோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ எதிர்பார்க்கின்ற விடயங்களை- கோரிக்கைகளை தற்போதைய அரசாங்கம் நிறைவேற்றும் என்பது மிகையான எதிர்பார்ப்பு.

 ஆனாலும், கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை விட்டு வைத்துக் கொள்ளாமல் செயற்பட வேண்டும் என்பதை வெளிக்காட்டியிருக்கிறது கூட்டமைப்பு. கூட்டமைப்பு மகிந்தவைச் சந்தித்தது -அதனால் என்ன பயன் என்ற கேள்விகள் ஒருபுறத்தில் இருந்தாலும், இந்த சந்திப்பின் மூலம்

 அரசாங்கத்துக்கு கூட்டமைப்பு கொடுத்திருக்கின்ற செய்தி முக்கியமானது, ஆனால், அரசாங்கம் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமா என்பது தான் சந்தேகம். கூட்டமைப்புக்கு பிரதமர் மகிந்த தனிப்பட்ட எந்த வாக்குறுதியையும் கொடுத்ததாக தெரியவில்லை

 வெசாக் பண்டிகையை முன்னிட்டு அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளிக்க வேண்டும் என்ற பரவலான கோரிக்கையைக் கூட அரசாங்கம் கருத்தில் கொண்டிருக்கவில்லை.

 இது கூட்டமைப்புக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்திருந்தாலும், இந்த விடயத்தில் அரசாங்கம் சாதகமாகச் செயற்படும் என்று கூட்டமைப்பே எதிர்பார்க்கவில்லை என்பது தான் உண்மை.

 கூட்டமைப்புடன் அரசாங்கம் உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு சாதகமான சமிக்ஞைகளை வெளிப்படுத்தியிருந்தாலும், இந்த உறவு நல்ல உறவாக தொடரப் போகிறதா அல்லது அனந்தி சசிதரன் குறிப்பிட்டது.   போல கள்ள உறவாக அமையப் போகிறதா என்பது, அரசாங்கத்தின் அடுத்தடுத்த கட்ட நடவடிக்கைகளில் தான் இருக்கிறது.

கபில்