குரங்குக்கு குடியுரிமை கொடுங்க!நகராட்சி அலுவலகம் முற்றுகை!!

புதன் அக்டோபர் 14, 2020

‘லங்கூர்’இன குரங்குக்கு குடியுரிமை வழங்கக் கூறி, ராஜஸ்தானில் நகராட்சி அலுவகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர். ராஜஸ்தான் மாநிலம் தியோகர் நகராட்சி பகுதியில், குரங்கு கூட்டங்களின் தொந்தரவால் அப்பகுதிமக்கள் கடும்பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.

இங்கு லங்கூர் (கருப்பு முகம்) மற்றும் சாதாரண குரங்கு (சிவப்பு முகம்) வகை குரங்குகள் ஏராளமாக இருக்கின்றன.

இதில், கருப்பு முக குரங்குகள் மக்களை அவ்வளவாக துன்புறுத்துவதில்லை.ஆனால், சிவப்பு முகம் கொண்ட சாதாரண குரங்குகள் பெரும் அட்டகாசம் செய்து வருகின்றன.

இவை வீடுகளிலில் புகுந்தும், நடைபாதையில் செல்வோரிடம் பொருட்களை பறித்தும்,

குழந்தைகளை தொந்தரவு செய்தும்,சில நேரங்களில் கடித்தும் பயங்கர சேட்டைகளை செய்து வருகின்றன. பெரும் இன்னல்களை சந்தித்து வரும் இப்பகுதிமக்கள், ஒரு விசித்திரமான முடிவை எடுத்துள்ளனர்.

இதற்காக, ஊர்வலமாக சென்று நகராட்சி அலுவகத்தில் அதிகாரிகளை சந்தித்து மனு ஒன்றை கொடுத்தனர். அதில், ‘குரங்குகளின் தொந்தரவில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும்.

குறிப்பாக சிவப்பு முகம் கொண்ட குரங்குகளை முதலில் அப்புறப்படுத்த வேண்டும்’ என்று கூறினர்.

ஆனால், அதிகாரிகள் கருப்பு முகம் கொண்ட குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்தினர்.சிவப்பு முகம் கொண்ட குரங்குகள் சிக்காததால், அவற்றை பிடிக்காமல் சென்றுவிட்டனர்.

இதையடுத்து மீண்டும் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் மனு கொடுத்தனர். அதில்,லங்கூர் இன குரங்குகளுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்.

அவை இப்பகுதியிலேயே வசிக்கட்டும். அவற்றுக்கு குரங்கு பிடிக்கும் நபர்கள் உணவளிக்க வேண்டும். சிவப்பு முக குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும். இல்லையென்றால் போராட்டங்களை நடத்துவோம்’ என்று தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பது பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். குரங்குக்கு குடியுரிமை கேட்டு மக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம், ராஜஸ்தானில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.