கடவுளுக்காக வாதாடும் இரு தமிழர்கள்!

ஞாயிறு ஓகஸ்ட் 18, 2019

ராமர் பிறந்த அயோத்தியில், சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என்பது குறித்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில், தினசரி நடைபெற்று வருகிறது.

பரபரப்பான இந்த வழக்கின் தீர்ப்பு, நவம்பர், 17க்கு முன் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

காரணம், இந்த வழக்கை விசாரிக்கும், அரசியல் சாசன அமர்வில் உள்ள தலைமை நீதிபதி,ரஞ்சன் கோகோய்,நவம்பர்,17ல் தான் ஓய்வு பெறுகிறார்.எனவே,அதற்கு முன்பாக,அவர் தீர்ப்பளிக்க வேண்டும்.

இந்த வழக்கில், ராமரும் ஒரு மனுதாரார். கடவுளுக்கும், அதாவது சிலைக்கும், தன்னை பாதுகாத்து கொள்வதற்கான உரிமை உள்ளது என, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்து உள்ளதால், ராமர் தரப்பில், இரண்டு வழக்கறிஞர்கள் வாதாடி வருகின்றனர்.

அவர்கள் இருவரும் தமிழர்கள். அவர்களில் ஒருவர், கே. பராசரன். மறைந்த, இந்திரா மற்றும் ராஜீவ் பிரதமராக பதவி வகித்த போது, அட்டர்னி ஜெனரலாக பணியாற்றிய பராசரனுக்கு, இப்போது, 91 வயதாகிறது. இந்து மதம் தொடர்பான அனைத்து விஷயங்களையும் கற்றுத் தெரிந்தவர். 'நீங்கள் உட்கார்ந்தே வாதாடலாம்' என, தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் கூறியதையும் மறுத்து, இரண்டு நாட்களுக்கு மேலாக, நின்று கொண்டே வாதாடியவர்.

வயதானதால் எந்த வழக்கையும் எடுத்துக் கொள்ளாமல், அயோத்தி வழக்கில் மட்டும் ஆஜராகி, 'இதுதான் என்னுடைய கடைசி வழக்கு; இதற்குப் பிறகு, சுப்ரீம் கோர்ட் பக்கம் வர மாட்டேன்' என, சொல்லிவிட்டார் பராசரன்.

ராமருக்காக வாதாடும் இன்னொரு தமிழர், சி.எஸ். வைத்தியநாதன். மூத்த வழக்கறிஞரான இவர், தமிழக அரசு சார்பாக, காவிரி உட்பட பல வழக்குகளில் வாதிட்டவர். 70 வயதை நெருங்கும் இவர், ஆறு மாதமாக, இரவு, பகலாக பல ஆவணங்களை புரட்டி, அயோத்தி வழக்கிற்காக தன்னை தயார் செய்தார். அயோத்தியில் கோவில் இருந்ததா என்பது குறித்த தொல்பொருள் துறையின் ஆய்வு அறிக்கை,

இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டு யாத்ரீகர் யுவான் சுவாங் உட்பட பலரின் புத்தகங்களைப் படித்து, அவர்கள் அயோத்தி பற்றி என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதையெல்லாம் குறிப்பெடுத்து, வாதாடிக்கொண்டிருக்கிறார் வைத்தியநாதன்.

இந்த வழக்கின் தீர்ப்பு, இந்திய அரசியலில் பெரும் பரபரப்பையும், மாற்றத்தையும் ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.