கப்பலில் தீவிபத்து - குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!

சனி ஓகஸ்ட் 17, 2019

இந்தோனேசியாவில் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் இரு குழந்தைகள் உள்பட 7 பேர் பலியாகினர். மேலும் 4 நபர்களை காணவில்லை.

இந்தோனேசியாவின் சுலாவ்சி மாகாணத்தின் கெண்டாரி துறைமுகத்தில் இருந்து மரொவலி மாவட்டத்தில் உள்ள கலேராங் துறைமுகத்திற்கு கப்பல் ஒன்று புறப்பட்டது. கொனாவே மாவட்ட பகுதியில் உள்ள போகோரி தீவு அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக கப்பலில் தீ பிடித்தது.

தகவலறிந்து மீட்புப்படையினர் விரைந்து சென்று மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர்.  விபத்து குறித்து அதிகாரிகள் கூறுகையில், கப்பலின் எஞ்சின் அறையில் தீப்பற்றியது. தீ வேகமாகப் பரவியதால் ஊழியர்களால் கட்டுப்படுத்த இயலவில்லை. இந்த விபத்தில், இரு குழந்தைகள் உள்பட மொத்தம் 7 பேர் பலியாகினர் மற்றும் 4 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கப்பலில் இருந்த 61 பேரை அருகில் வந்த கப்பலில் உள்ளவர்கள் மீட்டனர் என தெரிவித்தனர்.

கப்பலில் எவ்வாறு தீப்பிடித்தது என்பதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.