கபளீகரம் செய்யப்படும் தேசிய ஆவணங்களும், மறைக்கப்படும் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாறும்!

சனி நவம்பர் 09, 2019

தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஆவணங்கள், நிழற்படங்கள், ஒளிப்படங்கள் போன்றவை எந்தவொரு தனிநபருக்கும் சொந்தமானவை அல்ல.

அவை ஒட்டுமொத்தத் தமிழீழ தேசத்திற்குச் சொந்தமானவை.

வன்னிப் போரின் இறுதி நாட்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வசமிருந்த பல ஆவணங்கள், நிழற்படங்கள், ஒளிப்படங்கள் போன்றவை வெளிநாடுகளில் இருந்த குறிப்பிடத்தக்க சில போராளிகள் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

அவ் ஆவணங்கள், நிழற்படங்கள், ஒளிப்படங்கள் போன்றவற்றை வெளிநாடுகளில் இருந்த குறித்த போராளிகள் மற்றும் செயற்பாட்டாளர்களுக்குத் தமிழீழ விடுதலைப் புலிகள் அனுப்பி வைத்ததன் நோக்கம் ஒருவேளை தமது அமைப்பு அழிக்கப்பட்டால் போராட்ட வரலாறாவது அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லப்படும் என்ற நம்பிக்கையில் தான்.

துர்ப்பாக்கியவசமாக இக் கடமையில் இருந்து குறித்த போராளிகள் - செயற்பாட்டாளர்களில் பலர் தவறியிருப்பதோடு, இவ் ஆவணங்களைத் தமது தனிப்பட்ட உடமைகளாகவும் கையகப்படுத்தி உள்ளனர்.

இன்னும் சிலர் அதிலிருந்து ஒரு படி கீழே சென்று, குறித்த ஆவணங்கள், நிழற்படங்கள், ஒளிப்படங்களுக்கு மேல் தமது பெயர்களை அல்லது தமது இணையத்தளங்களினது அல்லது முகநூல் பக்கங்களினது பெயர்களைப் பொறித்து அவற்றைப் பொதுமக்களோ, ஏனைய ஊடகங்களோ, ஊடகவியலாளர்களோ, செயற்பாட்டாளர்களோ பயன்படுத்த முடியாதவாறு முடக்கியுள்ளனர்.

இதே நிலை தொடர்ந்தால் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாறு ஓரிரு தனிநபர்களோடும், அவர்களின் இணையத்தளங்கள், முகநூல் பக்கங்களோடும் முடங்கி போய் விடும்.

இதில் வேதனைக்குரிய விடயம் தேசிய இணையத்தளங்கள் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் பதிவு.கொம், தாரகம்.கொம் போன்ற இணையத்தளங்களும் இவ்வாறான கைங்கரியத்தில் ஈடுபடுவது தான்.

இதை விட வேதனைக்குரிய விடயம், தமிழீழ விடுதலைப் புலிகளிடம் கைநீட்டி சம்பளம் வாங்கி நிழற்படங்களையும், ஒளிப்படங்களையும் எடுத்த ஒரு சிலர் நபர்கள், இப்பொழுது குறித்த நிழற்படங்களும், ஒளிப்படங்களும் தமக்கே உரியவை என்று காப்புரிமை கொண்ட முற்படுவது தான்.

தமிழீழ தேசிய ஆவணங்களைக் கபளீகரம் செய்து, தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றை மறைக்கும் இவ்வாறான நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுபடுவது ஒரு வகையில் தமிழீழ தேசத்திற்கு இழைக்கப்படும் பெரும் துரோகச் செயல் என்று கூறினால் அது மிகையில்லை.