கோட்டாவின் அவலம்!

வெள்ளி ஓகஸ்ட் 16, 2019

சிறுபான்மையினரின் ஆதரவு இன்றி, சிங்களவர்களின் ஆதரவுடன் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற முடியும் என்று, சில ஆண்டுகளாகக் கூறிவந்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ, பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராகத் தெரிவு செய்யப்பட்டதும், பதற்றமடைந்து போயிருக்கிறார்.  

அண்மையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், புளொட் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தனை, அழைத்துப் பேசியிருந்தார் கோட்டாபய ராஜபக்‌ஷ.  
இந்தச் சந்திப்புத் தொடர்பாக, அரசல்புரசலாகத் தகவல்கள் வெளியானதும் சித்தார்த்தன், ஊடகங்களிடம் உண்மையைக் கக்கினார்.  அதில், “தமிழ் மக்களின் வாக்குகள் இல்லாமலேயே, தம்மால் வெற்றிபெற முடியும். ஆனாலும், அனைத்து இலங்கையர்களாலும் தெரிவு செய்யப்படுவதையே, நான் விரும்புகிறேன்” எனவும் கோட்டாபய ராஜபக்‌ஷ கூறியதாகக் குறிப்பிட்டிருந்தார்.  

தமிழ் ஊடகங்களில், இந்தச் செய்தி, தமிழ் மக்களின் வாக்குகள் இல்லாமலேயே தம்மால் வெற்றிபெற முடியும் என்று, கோட்டா கூறியதாகக் சற்று திரிபு அடைந்திருந்தது.  உடனடியாகப் பதற்றமடைந்த கோட்டாபய ராஜபக்‌ஷ, தனது ஊடகப் பிரிவின் மூலம், அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.   

‘சில அரசியல்வாதிகளுடன் சேர்ந்து, போலியான செய்திகளைப் பரப்பும் ஊடகங்களின் செய்திகளை நம்பி, ஏமாற வேண்டாம். அனைத்துத் தமிழ் மக்களின் ஆதரவும் நமக்குத் தேவை’ எனத் தலைப்பிடப்பட்டிருந்தது அந்த அறிக்கை.  

அதில், சித்தார்த்தனுடனான சந்திப்புத் தொடர்பாகப் போலியான தகவல்கள் வந்து கொண்டிருப்பதாகவும், தமிழ் மக்களின் ஆதரவு தேவையில்லை என, கோட்டாபய ராஜபக்‌ஷ கூறியதாகப் பரவி வருகின்ற செய்திகளுக்குக் கண்டனம் தெரிவிப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.  

அத்துடன், ஊடகங்கள் போலியான செய்திகளை வெளியிட்டு, மக்களை குழப்புவதாகவும் தன்னிடம் இருந்து, திசை திருப்ப முனைவதாகவும், கண்டனமும் வெளியிடப்பட்டிருந்தது.  

சித்தார்த்தன் கூறியதாக வெளியாகிய செய்திகளில், கோட்டாபய ராஜபக்‌ஷ அவ்வாறான கருத்தைக் கூறியதாகவே குறிப்பிடப்பட்டிருந்தது.  

ஆனால், தமிழ் மக்களின் ஆதரவு தேவையில்லை; சிங்கள மக்களாலேயே வெற்றியைப் பெற்று விட முடியும் என்ற, இறுமாப்புத்தனமான கருத்து, ஜனாதிபதி தேர்தலில் எவ்வாறு பிரதிபலிக்கும் என்பதை உணர்ந்து கொண்டதை அடுத்தே, அந்தக் கருத்தை மறுக்கத் துணிந்திருந்தது கோட்டா தரப்பு.  

சிறுபான்மையினர் குறித்து, குறிப்பாகத் தமிழர்கள் குறித்து, கோட்டாபய ராஜபக்‌ஷ கொண்டிருக்கின்ற கரிசனை, கருத்து என்ன என்பது, இங்கு முக்கியமாகப் பார்க்கப்பட வேண்டியது.  

ஏனென்றால், அவர் ஜனாதிபதி வேட்பாளராகப் பெயரிடப்பட்ட பின்னர், நிகழ்த்திய உரையில், வடக்கில் உள்ள மக்களின் எதிர்பார்ப்புகள் குறித்த புரிதல் தனக்கு இருப்பதாகவும், அவர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதில் கவனம் செலுத்துவேன் என்றும் குறிப்பிட்டிருந்தார்.  

தமிழர்கள் நோக்கிய, அவரது புரிதல் பற்றி, நிறையவே கேள்விகள் இருக்கின்றன.  
தமிழர்களின் பிரச்சினை, காணி அதிகாரமோ, பொலிஸ் அதிகாரமோ இல்லை; அவர்களுக்கு தேவை, அடிப்படை வசதிகளும் பொருளாதார அபிவிருத்தியும் தான் என்று, கோட்டாபய ராஜபக்‌ஷ உள்ளிட்ட ராஜபக்‌ஷவினர், 2009இற்குப் பின்னர் பலமுறை கூறியிருந்தனர்.  

இந்தளவுக்கு அப்பாற்பட்ட புரிதல், கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு இருக்கிறதா என்பது சந்தேகம் தான்.  அதைவிட, கோட்டாபய ராஜபக்‌ஷ ஒருபோதும், தமிழர்களைப் புரிந்து கொள்ள முயற்சிக்கவோ, தமிழர்களைப் பொருட்டாக எடுத்துக் கொள்ளவோ இல்லை என்பது தான் உண்மை.  

அவர், ஜனாதிபதி வேட்பாளரான பின்னர், தமிழர்களின் வாக்குகள் திசைமாறிப் போய்விடக் கூடும் என்ற அச்சம் வந்திருக்கலாம். அரசியல்வாதியாக மாறுகின்ற ஒவ்வொருவருக்கும், அந்த அச்சம் இருக்கும். ஆனால் அவர், அரசியல்வாதி ஆக முன்பிருந்தே, தமிழர்கள் தொடர்பாக, சிறுபான்மையினர் தொடர்பாக வெளிப்படுத்திய கருத்துகள், அபத்தமானவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.  

2016ஆம் ஆண்டில் இருந்தே, கோட்டாபய ராஜபக்‌ஷ தன்னை, அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்காகத் தயார்படுத்தி வந்தவர். அவருக்கு, இந்த விடயத்தில் உத்வேகத்தைக் கொடுத்தது, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப், பெற்ற வெற்றி தான்.  

2018 நொவம்பர் ஒன்பதாம் திகதி, கொழும்பில், நளின் டி சில்வாவின் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய கோட்டாபய ராஜபக்‌ஷ, அமெரிக்காவில் பெரும்பான்மையின மக்கள், டொனால்ட் ட்ரம்பின் வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளதை, இலங்கையில் பெரும்பான்மை சிங்களவர்கள் ஒரு பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார்.  

“அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில், வெற்றி இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருந்த டொனால்ட் ட்ரம்புக்கு, எதிரணி வேட்பாளருடன் தொக்கி நின்ற சிறுபான்மையினரே, தடையாக இருந்தனர். அதனால், அவர் வெற்றி பெறுவாரா என்பது கேள்விக்குறியாக இருந்தது. கறுப்பினத்தவர்களின் ஆதரவு இவருக்கு கிடைக்காது என்ற கருத்துகள் மிகவும் வலுப்பெற்றிருந்தன. ஆனால், வெள்ளையினப் பெரும்பான்மையினர் ஒன்று திரண்டு, ட்ரம்பிற்கு வாக்களித்தன் காரணமாக அவர் சுலபமாக வெற்றிபெற்றார். இதனை, இந்த நாட்டின் பெரும்பான்மை இனத்தவர்களும், ஒரு பாடமாகக் கொள்ள வேண்டும்” என்று அவர் கூறியிருந்தார்.  

இது, இலங்கையிலும் சிங்களவர்கள் தனித்தே ஜனாதிபதியைத் தீர்மானிக்க முடியும் என்பதை, கோட்டாபய ராஜபக்‌ஷ அடித்துக் கூறிய முதல் சந்தர்ப்பம் எனலாம்.  

அதற்குப் பின்னர், கடந்த மார்ச் மாதம் முதல்வாரம், New  s in Asia வுக்கு அளித்திருந்த செவ்வியில், அவர், சிறுபான்மையினரின், குறிப்பாகத் தமிழர்களின் ஆதரவு இன்றி, சிங்களப் பெரும்பான்மையினரின் ஆதரவுடன், தம்மால் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற முடியும் என்று, கூறியிருந்தார்.  

“ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு, சிறுபான்மையினரின் ஆதரவைப் பெற வேண்டும் என்பது அவசியமில்லை. 2010இல் மஹிந்த ராஜபக்‌ஷ, தமிழர்களின் ஆதரவு இல்லாமல், 1.8 மில்லியன் வாக்குகளால் வெற்றி பெற்றார்.  

2015இல் அவர் தோல்வியடைந்தமைக்கு, தமிழ், முஸ்லிம்களின் ஆதரவு கிடைக்காதமை அல்ல; கொழும்பு, கம்பஹா போன்ற மாவட்டங்களில் உள்ள, நகரப் பகுதிகளில் வாழும் நடுத்தர மக்கள், அவருக்கு வாக்களிக்கவில்லை. 449,000 வாக்குகளால் மாத்திரமே, அவர் தோல்வியடைந்தார்” என்று அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.  

சித்தார்த்தனுடனான சந்திப்பின் போதும் கூட, கடந்த முறை சுமார் நான்கு இலட்சம் வாக்குகளால் தான், மஹிந்த ராஜபக்‌ஷ தோல்வியடைந்தார் என்றும், அந்த வாக்குகளைத் தன்னால் தென்பகுதியிலேயே பெற்று விட முடியும் என்றும் குறிப்பிட்டதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.  அதாவது, வெற்றி பெறுவதற்குச் சிறுபான்மையினரின், குறிப்பாகத் தமிழர்களின் வாக்குகள் தேவையில்லை என்ற கருத்தை, ஒன்றுக்குப் பலமுறை வெளிப்படுத்தியவர் கோட்டாபய ராஜபக்‌ஷ.  

முன்னரெல்லாம் அந்தச் செய்திகள், தமிழ், ஆங்கில ஊடகங்களில் வெளியாகிய போது, அவர் அதை மறுக்கவில்லை. பொய்யான செய்திகளை, வெளியிடுவதாக ஊடகங்கள் மீது பாயவில்லை.  

இப்போது, அரசியல்வாதியாகக் களத்தில் இறங்கியுள்ள நிலையில், தான் அப்படிச் சொல்லவேயில்லை என்று மறுக்கவும், ஊடகங்களைப் பொய், போலி என்றும் விமர்சிக்கத் தொடங்கி விட்டார்.  

கோட்டாபய ராஜபக்‌ஷவுக்குத் தமிழ் மக்கள், வாக்களிக்கமாட்டார்கள் என்பதே பொதுவான கருத்தாக உள்ளது. காரணம், அவர் என்ன தான் நியாயம் கூறினாலும், போரின் போது நடந்து கொண்ட முறையை, நிகழ்ந்த அநீதிகளைத் தமிழ் மக்கள் மறக்கத் தயாராக இல்லை என்ற கணிப்பு, பரவலாக இருக்கிறது.  

கோட்டாபய ராஜபக்‌ஷ, எப்போதுமே பெரும்பான்மையினவாதக் கருத்துகளையே கொண்டிருந்தவர்; அதனையே வெளிப்படுத்தியும் வந்தவர். ட்ரம்ப்பின் வெற்றி ‘போர்முலா’வைப் பயன்படுத்தி, தாமும் வெற்றியைப் பெற்று விடலாம் என்றே அவர் நம்பினார்.  அதனால் தான், தனது சகோதரர்கள், குடும்பத்தினரில் பலர், பாரம்பரிய அரசியல்வாதிகளாக இருந்த போதும், பாரம்பரிய அரசியல்வாதிகள் மீது, மக்கள் நம்பிக்கையிழந்து விட்டார்கள் என்பதைத் துணிந்து கூறினார்.  

ட்ரம்ப்பைப் போன்ற, தன்னைப் போன்ற பாரம்பரிய அரசியல்வாதி அல்லாதவர்களின் மீது, மக்கள் நம்பிக்கை வைப்பார்கள் என்று, பிரசாரம் செய்யத் தொடங்கினார்.  

சிங்கள மக்களின் ஆதரவைத் திரட்டுவதற்காக, ‘எலிய’, ‘வியத்மக’ போன்ற அமைப்புகளை உருவாக்கி, தன்னையும் தனது கொள்கைகளையும் பிரபலப்படுத்தி இருந்தார்.  இந்த அமைப்புகளும் அவற்றின் பிரசாரங்களும் தனியே, சிங்கள மக்களை மாத்திரம் இலக்கு வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.  

இந்த அமைப்புகளின் எந்தவொரு கூட்டமும், வடக்கு, கிழக்கில் குறிப்பாகத் தமிழ்ப் பகுதிகளில் நடந்திருக்கவில்லை. ஏனென்றால், தமிழர்களைக் கோட்டாபய ராஜபக்‌ஷ ஒரு பொருட்டாகவே கருதவில்லை. அவர்களின் ஆதரவு, தனக்கு அவசியம் என்றும் எதிர்பார்க்கவில்லை.சிங்கள மக்களின் வாக்குகளால் வெற்றியைப் பெறமுடியும் என்று, அவர் முழுமையாக நம்பினார்.  இப்போது, அவர் அரசியல்வாதியாக மாறியுள்ள நிலையில், பதற்றம் தொற்றிக் கொண்டு விட்டது.  

மஹிந்தவை தோற்கடித்தது போன்று, தமிழர்கள் ஒன்றிணைந்து, தன்னையும் தோற்கடித்து விடுவார்களோ என்ற பயம், அவருக்குள் ஏற்பட்டு விட்டது. அதனால் தான், சொன்னதைச் சொல்லவில்லை என்று மறுக்கிறார்.  

கோட்டாபய ராஜபக்‌ஷ, சிங்கள மக்களின் வாக்குகளை மய்யப்படுத்தியே, அவற்றை நம்பியே, இந்தத் தேர்தலில் களமிறங்கி இருந்தாலும், அதைப் பகிரங்கமாகக் கூறமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது தான், அவரது அவலம்.  

கே. சஞ்சயன் /