கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிப்பது எப்படி?

திங்கள் பெப்ரவரி 03, 2020

கொரோனாவைரஸ் என்றால் என்ன? இந்த வைரஸ் எப்படி பரவுகிறது? இந்த வைரஸ் நோய் தாக்கினால் ஏற்படும் பாதிப்புகள் என்ன அல்லது இந்த நோயின் அறிகுறிகள் என்ன? உள்ளிட்ட பல்வேறு தகவல்களை ஒரு அறிவியல் பார்வையில் இனி பார்க்கலாம்.

மத்திய சீனாவில் உள்ள ஊஹான் நகரில் கடந்த 2019 டிசம்பர் மாதம் இறுதியில் ஒரு வினோத நோய் வேகமாகப் பரவத் தொடங்கியது. ஒரு புது வகையான கொரோனா வைரஸ் தான் இந்த புதிய தொற்று நோய்க்கு காரணம் என்று ஆய்வுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த 17 வருடங்களில் நூற்றுக்கணக்கான உலக மக்களை கொன்றுகுவித்த சார்ஸ் (severe acute respiratory syndrome coronavirus/SARS-CoV) மற்றும் மெர்ஸ் (Middle East respiratory syndrome coronavirus (MERS-CoV) வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த மற்றுமொரு வைரஸ் தான் இந்த புதிய கொரோனா வைரஸ். இந்த புதிய கொரோனா வைரஸ்க்கு 2019-nCoV என்று பெயரிட்டுள்ளது உலக சுகாதார மையம்.

தொடக்கத்தில் அதிகம் ஆபத்துகளை ஏற்படுத்தாத வைரசாக இருக்கும் என்று கருதப்பட்ட கொரோனா வைரஸ் சுமார் ஒரு மாத காலத்துக்குள் சீனாவில் மட்டும் பல்லாயிரக்கணக்கான பேருக்கு தொற்றியுள்ளது, நூற்றுக்கும் அதிகமானவர்களை பலிவாங்கியுள்ளது..

சரி, கொரோனாவைரஸ் என்றால் என்ன? இந்த வைரஸ் எப்படி பரவுகிறது? இது எவ்வளவு ஆபத்தானது? இந்த வைரஸ் நோய் தாக்கினால் ஏற்படும் பாதிப்புகள் என்ன அல்லது இந்த நோயின் அறிகுறிகள் என்ன? இதிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள என்னென்ன செய்ய வேண்டும்? மற்றும் இந்த நோய் குறித்து வெளியாகி வரும் செய்திகளில் எது உண்மை எது பொய்? உள்ளிட்ட பல்வேறு தகவல்களை ஒரு அறிவியல் பார்வையில் இனி பார்க்கலாம்.

கொரோனாவைரஸ் என்றால் என்ன?

ஒரு எலக்ட்ரான் மைக்ராஸ்கோப் மூலமாக பார்க்கும்போது ஒரு கிரீடம் போல அல்லது சூரியனுடைய கொரோனா பகுதிபோல தோன்றுவதால் இந்த வகை வைரஸ்களுக்கு கொரோனா வைரஸ் எனும் பெயர் சூட்டப்பட்டது.

அடிப்படையில், காற்று மூலமாக பரவும் தன்மைகொண்ட கொரோனா வைரஸ்கள், பாலூட்டிகள் மற்றும் பறவைகளை தாக்கும்போது அவற்றின் மூச்சுக்குழாயின் மேல் பகுதி மற்றும் குடல் பகுதிகளில் சென்றுவிடும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

கொரோனா வைரஸ்கள் பெரும்பாலும் சாதாரண சளி போன்ற உபாதைகளை மட்டுமே ஏற்படுத்தும் என்றாலும், துரதிர்ஷ்டவசமாக, சார்ஸ் மற்றும் மெர்ஸ் வகை கொரோனா வைரஸ்கள் மனிதர்களின் உடலில் மிகவும் மோசமான மூச்சுத்திணறல் மற்றும் இதர பல ஆபத்துகளை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

இந்த கொரோனா வைரஸ்களை தடுக்கும், தடுப்பூசி அல்லது கொரோனா வைரஸ் தொற்றுநோயை குணப்படுத்தும் சிகிச்சை எதுவும் தற்போது வரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் இந்த கொரோனா வைரஸ் எங்கிருந்து தோன்றுகிறது, எப்படி பரவுகிறது மற்றும் எப்படி பல்கிப் பெருகுகிறது உள்ளிட்ட தகவல்களைக் கண்டறிந்தால் இதனை தடுக்கவும், இந்த நோயை குணப்படுத்தவும் முடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

கொரோனா வைரஸ் தொற்றுநோயானது, விலங்குகள் மூலமாக மனிதர்களுக்கு பரவும் சூனாடிக் வைரஸ் நோய் (zoonotic viral diseases) வகையைச் சேர்ந்தது. மேலும் மனிதர்களைத் தாக்கி அவர்களின் உடலில் பல்கிப் பெருக அவசியமான பல மரபணு மாற்றங்களை இந்த வைரஸ் விலங்குகளின் உடலில் இருக்கும்போதே பெற்றுவிடுகிறது என்றும் விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் எப்படி பரவியது?

மனிதர்களுக்கு மத்தியில் வெகுவேகமாக பரவிவரும் இந்த வைரஸ், முதன்முதலில் வவ்வால்களில்தான் தோன்றியது என்றும், அதனைத் தொடர்ந்து ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் மற்றும் வாழக்கூடிய பாலூட்டிகள் மற்றும் ஒட்டகங்கள் ஆகியவற்றை தொற்றி இறுதியாக மனிதர்களுக்கு தொற்றியது என்றும் ஆய்வுகள் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இந்த கொரோனா வைரஸ் நோயைப் பொறுத்தவரை, முதலில் பாதிக்கப்பட்டவர்கள் சீனாவின் ஊஹான் நகரிலுள்ள மீன் மார்கெட்டில் வேலை செய்பவர்கள் மற்றும் அங்கு மீன் வாங்கிய வாடிக்கையாளர்கள் என்றே செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த மீன் மார்க்கெட்டில் கறிகள் மற்றும் இறைச்சிக்காக விற்கப்படும் உயிருள்ள கோழி, கழுதை, செம்மறி ஆடு, பன்றி, ஒட்டகம், நரி, மூங்கில் எலி மற்றும் பாம்பு உள்ளிட்ட ஊர்வன என பல விலங்குகள் விற்பனையாகும் என்று கூறப்படுகிறது.

மேலும், மருத்துவ ஆய்விதழ் ஒன்றில் (Journal of Medical Virology) வெளியான ஒரு ஆய்வறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ள மரபியல் ஆய்வுகளின் அடிப்படையில், சார்ஸ் மற்றும் மெர்ஸ் வைரஸ்கள் போல, இந்த கொரோனா வைரஸ்களும் அடிப்படையில் ஒரு வவ்வாலில் தோன்றியிருக்கும் என்றே விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

கொரோனா வைரசின் மரபணு மீதான மேலதிக ஆய்வுகளில் இது பாம்புகளில் இருந்து வந்திருக்கும் என்று சுட்டிக்காட்டும் உறுதியான சில முடிவுகள் கண்டறியப்பட்டுள்ளன. வவ்வால்களை பாம்புகள் வேட்டையாடுவதால், வவ்வால்களில் இருந்த கொரோனா வைரஸ் முதலில் பாம்புக்கு தாவி பின்னர் பாம்புகளை சாப்பிட்ட மனிதர்களுக்கு பரவிவிட்டது என்பதே தற்போதைய உறுதியான தகவல்.

ஆனால், குளிர்ச்சியான ரத்தம் கொண்ட வவ்வால் மற்றும் பாம்புகளில் வாழும் கொரோனா வைரஸ் எப்படி கதகதப்பான ரத்தம் கொண்ட மனிதர்களுக்கு பரவியது என்பது இன்னும் புரியாத புதிராகத்தான் உள்ளது.

கொரோனா வைரசிடமிருந்து எப்படி நம்மை பாதுகாத்துக்கொள்வது?

கொரோனா வைரஸ் என்னைத் தாக்குமா? என்று கேட்டால் நீங்கள் சீனாவின் ஊஹான் நகருக்குச் செல்லாமல், அங்குள்ள யாருடனாவது தொடர்பில் இல்லாமல் இருந்தால் நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில், இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் கொரோனா வைரஸ் தடுப்புக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தீவிரமாக செய்து வருகின்றன.

ஆனால், சளி, தொண்டை வலி, தலைவலி, ஜுரம், இருமல் உபாதைகளை ஏற்படுத்தும் கொரோனாவைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்ட ஒருவரின் தும்மல், இருமல் மற்றும் பயன்படுத்திய பொருட்கள் போன்றவற்றால் வைரஸ் பரவும் என்பதால், பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இல்லாமல் இருப்பதும், கை கால்களை எப்போதும் சோப்பு போட்டு கழுவுவதும், கை கழுவாமல் கண், மூக்கு மற்றும் வாய் போன்ற பகுதிகளை தொடாமல் இருப்பதும் கொரோனா வைரஸ் நமக்கு தொற்றாமல் இருக்க நாம் மேற்கொள்ள வேண்டிய செயல்கள் ஆகும்.

தொகுப்பு: ஹரிநாராயணன்