கொரோனா தடைக்காலம் முடியும் வரை நாள் ஒன்றுக்கு ரூபாய் ஐநூறு வழங்க வேண்டும்: வ.கௌதமன்

செவ்வாய் மார்ச் 24, 2020

சென்னை, மார்ச் 23 - தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச்செயலாளரும் திரைப்பட இயக்குநருமான வ.கௌதமன் சென்னை தலைமை செயலகத்திற்கு சென்று கொரோனா பாதிப்பினால் வாழ்வாதாரம் இழந்து நிற்கும்  குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் ஊரடங்குத்தடைக்காலம் முடியும் வரை நாளொன்றுக்கு ரூபாய் ஐநூறு உதவித் தொகையாக வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

மத்திய அரசு கொரோனா வைரஸ் பரவலை தேசிய பேரிடராக அறிவித்த பிறகு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவது மரியாதைக்குரியது, பாராட்டுக்குரியது.  ஆனாலும் ஊரடங்கு உள்ளிட்ட தொடர்ந்த வாழ்வியல் முடக்கம் மக்களை வெகுவாக பாதித்திருக்கிறது.  குறிப்பாக தினக்கூலி தொழிலாளர்கள், விவசாயிகள்,  மீனவர்கள் மற்றும் நடுத்தர அடித்தட்டு மக்கள்  அனைவரும் தொழிலற்று தொடர்ந்து வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடப்பதால் அவர்களுடைய வாழ்வியல் பொருளாதாரம் முற்றிலும் இழந்த நிலையில் கடந்த  22 -03- 2020 லிருந்து  31- 03- 2020  வரை  நாள் ஒன்றுக்கு ரூபாய்  ஐநூறு வீதம் குடும்ப அட்டை   வைத்திருக்கும் அனைவருக்கும் நிவாரண நிதியாக வழங்க வேண்டுமென்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

கொரோனா தாண்டவமாடும்  இச்சூழலில் வறுமையும் சூழ்ந்து உணவில்லாமல் ஏற்படும் நோய்களும் அதிகரித்தால் இன்னும் இன்னும் மோசமான  சூழ்நிலைகள் உருவாகக்கூடும்.

பக்கத்து மாநிலமான கேரளா ஒரு வாரத்திற்கு முன்பே இக்கொடிய வைரஸிலிருந்து தப்பிக்கவும் தங்கள் மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் ரூபாய் இருபதாயிரம் கோடிகளை ஒதுக்கி தேவைப்படும் மக்களுக்கு நிவாரணத்தோடு கடனுதவியும் வழங்கிக் கொண்டிருக்கிறது. நம்மைவிட ஒரு சிறிய மாநிலமே இருபதாயிரம் கோடிகள் ஒதுக்கும் போது நாம் மத்திய அரசிடம் உரிமையோடு பேசி அதிகப்படியான நிதியினை பெற்று பதட்டமில்லாத ஒரு வாழ்வியல் சூழலை தமிழக மக்களுக்கு உருவாக்குவது அவசியமானதாக படுகிறது. மக்களுக்கு வழங்கக் கூடிய நிதியினை ஏற்கனவே வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு அந்த கணக்கின் வழியாக வழங்கலாம். கணக்கு இல்லாதவர்களுக்கு நியாயவிலைக் கடை மூலமாக வழங்கலாம்.  தற்போது தமிழக அரசு ஒதுக்கி இருக்கும்  ஐநூறு கோடிகள் ஒருபோதும் போதுமானதாக இருக்காது.  ஆந்திர அரசு கூட வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்திற்கு ரூபாய்  ஆயிரம் அறிவித்துள்ளது. தெலுங்கானா  முதல்வர்  அங்குள்ள குடும்பம் ஒன்றிற்கு  ரூபாய் ஆயிரத்தி ஐநூறும்  அத்துடன் கூடுதலாக பனிரெண்டு கிலோ அரிசியும் கொடுப்பதாக அறிவித்துள்ளார். இவைகள் அனைத்தையும் மனதில் கொண்டு தமிழக அரசு தமிழக மக்களுக்கு விரைவில் நல்லதொரு நிவாரணத்தொகையினையும் தேவையான உணவுப் பொருட்களையும் விரைவில்  அறிவிக்கும்படி  கேட்டுக்கொள்கிறேன்.

இதுவரை கொரோனாவுக்கென  மருந்து கண்டுபிடிக்காத நிலையில் உலகிற்கே சித்த மருத்துவத்தை அறிமுகப்படுத்தி  தீர்க்க  முடியாத நோய்களையெல்லாம்  தீர்த்து வைத்த  நம் முன்னோர்களின் வழிமுறைகளை பின்பற்றி தற்போது சித்த மருத்துவம் படித்த மருத்துவ ஆளுமைகளையும் நமது பாரம்பரிய சித்த வைத்தியர்களையும் உடனடியாக அழைத்து போர்க்கால நடவடிக்கையில் குழு அமைத்து கொடூர கொரோனாவிற்கான  அரிய மருந்தினை கண்டுபிடித்து உலகிற்கே புது விடியலை தருவற்கான நடவடிக்கையில் இறங்குமாறு உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்.

வ.கௌதமன்
பொதுச் செயலாளர்
தமிழ்ப் பேரரசு கட்சி.