கொரோனா தாக்கத்தால் உயிரிழந்த முதலாவது பிரெஞ்சு நபர்!

புதன் பெப்ரவரி 26, 2020

பிரெஞ்சு நபர் ஒருவர் கொரோனா தாக்கத்தால் உயிரிழந்துள்ளார். கொரோனா தாக்கத்தால் உயிரிழந்த முதலாவது பிரெஞ்சு நபர் இவராவார்.
 
இத்தகவலை சுகாதார இயக்குனரான  ஜெனரல் Jérôme Salomon சற்று முன் அறிவித்துள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை இரவு மிக மோசமான உடல்நலக்குறைவினால் , பரிசில் உள்ள La Pitié-Salpêtrière மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 60 வயதுடைய குறித்த நபர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
 
முன்னதாக பிரான்சில் கொரோனா தாக்கத்தினால் சிகிச்சை பெற்றுவந்த 13 பேரில், 85 வயதுடைய சீன நபர் உயிரிழந்திருந்தார். பிரான்சில் இடம்பெற்ற முதலாவது உயிரிழப்பு அதுவாகும். மீதமானவர்கள் சிகிச்சை முடித்துக்கொண்டு பூரணம் குணமடைந்து வீடு திரும்பியிருந்தனர்.

அதன் பின்னர் நேற்று மாலை மீண்டும்  செவ்வாய்க்கிழமை மூன்று புதிய கொரோனா தாக்கம் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். 55 வயதுடைய நபர் ஒருவர் Amiens  நகரிலும், 36 வயதுடைய நபர் ஒருவர் Strasbourg நகரிலும் அனுமதிக்கப்பட்டதோடு,பரிஸ் 13 ஆம் வட்டாரத்தில் குறித்த 60 வயதுடைய நபர் அடையாளம் காணப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையிலேயே அவர் சிகிச்சை பலனின்றி La Pitié-Salpêtrière மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.