கொரோனா பயத்தால் மன ஆரோக்கியம் கெடுகிறது

திங்கள் ஓகஸ்ட் 24, 2020

கொரோனா பயத்தால் நம்மில் 100 சதவீதத்தினர் மன ஆரோக்கியத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள், சுகாதார நிபுணர்கள்.

கொரோனா - இந்த வார்த்தையை இன்றைய தினத்தில் கேட்டாலே மனித குலம் ஒட்டுமொத்தமாக அஞ்சி நடுங்குகிற நிலையைப் பார்க்க முடிகிறது.

காரணம், பெரிய பெரிய பிரபலங்கள் எல்லாம் ஓசைப்படாமல் கொரோனா தொற்றுக்கு ஆளாவதும், சிகிச்சைகள் நீள்வதும், சிலர் மரணம் அடைவதும் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.

 கொரோனா பரிசோதனையை இதுவரை செய்து கொள்ளாதவர்கள் கூட நிம்மதியாக இல்லை. அவர்களும்கூட ஒவ்வொரு நாளையும் பயத்துடன்தான் கடத்துகிறார்கள்.

நம்மை சுற்றிலும் பலர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி, அவதியுற்று வருவதை பார்க்கிறபோது, நல்ல வேளை, நாம் இன்னும் தப்பி வருகிறோம் என்று சுய திருப்தி அடைய வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

ஆனால் நம்மில் ஒரு சிறிய சதவீதத்தினருக்கு மட்டுமே இந்த கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருந்தாலும், நம்மில் 100 சதவீதத்தினரும் மன ஆரோக்கியம் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள், சுகாதார நிபுணர்கள்.

கொரோனாவை பொறுத்தமட்டில் தீவிரமான பாதிப்புகளில் ஆரம்பகால சிகிச்சையை மேற்கொள்வதில்கூட பல சிக்கல்கள் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

நிம்ஹான்ஸ் என்று அழைக்கப்படக்கூடிய தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம், ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மிகுந்த கவலைக்குள்ளாகி இருப்பதாக சொல்கிறது. இவர்கள் ஆரோக்கியமானவர்கள். ஆனாலும், கொரோனா வந்து விடுமோ என்ற பயம், இவர்களை பாதிப்புக்கு ஆளாக்கி விடுகிறதாம். தவறான தகவல்களை, வதந்திகளை பரப்புகிற சில சமூக ஊடகங்களே இந்த பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்கிறார்கள் சுகாதார நிபுணர்கள்.

இப்படிப்பட்டவர்களுக்கு கொரோனா பற்றிய உத்தரவாதம், ஆதரவு, கல்வி அறிவு போன்றவை அத்தியாவசிய பராமரிப்பு கருவிகளாக அமைகின்றன என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

இவை மட்டுமல்ல, சரியான மன நல மருத்துவ நிபுணர்களின் பராமரிப்பும் இவர்களுக்கு தேவைப்படுகிறது என்கிறார்கள்.

இதுவரை இல்லாத அளவுக்கு இந்தியாவில், இப்போது மன நலம் முக்கியமான விவாதமாக மாறி இருக்கிறது என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

உதாரணத்துக்கு சமீபத்தில் சர்ச்சைக்கிடமான வகையில் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கை சொல்கிறார்கள். அவரது தற்கொலை மரணத்தை தொடர்ந்து, அவரது சகாக்களும், நண்பர்களும் முந்தைய நாளில் அவருடன் பேசி இருக்க வேண்டும் என்று விரும்பினர்.

இத்தகைய சூழலில் மனம் விட்டு பேச வைப்பதும், மனித தொடர்பை நிறுவுவதும், சரியான நேரத்தில் உதவுவதும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிற நபருக்கு சரியான புரிந்துகொள்ளுதலை ஏற்படுத்தும். இதுவே கொரோனாவுக்கும் பொருந்தும்.

பயத்தில் இருக்கிற நபர்கள் அதில் இருந்து வெளியே வரவும், இயல்பு வாழ்க்கையை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளவும் உடன் இருப்பவர்கள் வழிநடத்த வேண்டும். அவர்களது மன ஆரோக்கியம் கெடாமல் இது காக்கும். ஏன், உயிரையே கூட காக்கும்.

நமது சமூகத்தில் உளவியல் பிரச்சினைகள், அவமானகரமான ஒன்றாக பார்க்கப்படுவதால், பயத்துக்கு ஆளாகிற நபர்கள், உலகை விட்டே வெளியேறுவதும் நடக்கிறது என்பதற்கு இதெல்லாம் உதாரணமாகி நிற்பதாக சுகாதார நிபுணர்கள் கருதுகிறார்கள். இது தவிர்க்கக்கூடியதுதான்.

சி.பி.ஐ. விசாரணை, சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கில் தவறுகளை திருத்தும், அதே நேரத்தில் இந்த தொற்று நோய் மன ஆரோக்கியத்தை பற்றிய நேர்மையின் கலாசாரத்தை வழங்கட்டும் என்பது சுகாதார நிபுணர்களின் விருப்பமாக இருக்கிறது.