கொரோனா: அன்றாட செயல்பாடுகளில் விழிப்புடன் செயல்படுவது எப்படி?

சனி மே 02, 2020

கொரோனாவில் இருந்து பாதுகாத்துக்கொள்ள அன்றாட செயல்பாடுகளில் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். கடைகளுக்கு பொருட்கள் வாங்க செல்லும்போது பலவழிகளில் கிருமி தொற்று பரவ வாய்ப்பு இருக்கிறது.

கொரோனாவில் இருந்து பாதுகாத்துக்கொள்ள அன்றாட செயல்பாடுகளில் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். கடைகளுக்கு பொருட்கள் வாங்க செல்லும்போது பலவழிகளில் கிருமி தொற்று பரவ வாய்ப்பு இருக்கிறது. அப்படி கொரோனா வைரஸ் கிருமிகள் இல்லாவிட்டாலும், மற்ற கிருமிகள் படர்ந்திருக்கக்கூடும். அந்த பகுதிகள் முறையான கிருமிநாசினிகள் கொண்டு சுத்தப்படுத்தப்படுகிறதா? கடையில் சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். கூடுமானவரை கையுறை அணிந்து பொருட்களை எடுப்பது நல்லது.

பொருட்கள் வாங்குவதற்கு நகரும் வண்டியையோ, கூடையையோ உபயோகிப்பதற்கு முன்பும் விழிப்புடன் இருக்க வேண்டும். ஏற்கனவே வண்டி, கூடையை நிறைய பேர் உபயோகப்படுத்தி இருப்பார்கள். அதில் எந்த வகையான கிருமிகள் படந்திருக்கும் என்பது தெரியாது. அதனால் கைப்பிடி பகுதிகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தபிறகு உபயோகிப்பது நல்லது.

கடைகளில் சமூக இடைவெளியை கடைப் பிடித்து பொருட்களை எடுத்தாலும் மற்றவர்கள் பொருட்களை எடுப்பதற்கு அருகே வந்தால் விலகி சென்றுவிடுவது நல்லது. தெரிந்தோ, தெரியாமலோ அவர்களின் உடல் பாகங்கள் உராய்ந்துவிட்டால் கிருமிகள் கடத்தப்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆதலால் எப்போதும் ஆறு அடி தூரம் விலகி நிற்பதுதான் பாதுகாப்பானது. காய்கறிகள், பழங்கள் வாங்கி வந்தால் உடனே தண்ணீரில் அலசி சுத்தம் செய்துவிடுங்கள்.

அதுபோல் கண்ணாடி பாட்டில்கள், பிளாஸ்டிக் டப்பாக்கள், கவர்களில் அடைக்கப்பட்டிருக்கும் பொருட்களையும் துடைத்து சுத்தம் செய்ய வேண்டும். அவற்றில் கிருமிகள் படர்ந்திருக்கக்கூடும். அந்த பொருட்களை நிறைய பேர் எடுத்து பார்த்திருப்பார்கள். வீட்டுக்கு வந்ததும் அவற்றை நன்றாகக் கழுவி, துடைத்து வைக்க வேண்டும். காகிதங்களில் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் பொருட்களை வாங்கி வந்தாலும் அவற்றை பிரித்தெடுத்து சுத்தம் செய்துவிடுங்கள். கடைக்கு பொருட்கள் வாங்க செல்வதற்கு உபயோகிக்கும் பையை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.

அவற்றிலும் கிருமிகள் பரவி இருக்கக்கூடும். கடையில் கூட்டத்தை தவிர்ப்பதற்கு காலைவேளையில் செல்வதுதான் நல்லது. பொருட்கள் வாங்குவதற்கு பணப்பரிவர்த்தனையிலும் கவனமாக இருக்க வேண்டும். ரூபாய் நோட்டுகளிலும் கிருமிகள் படர்ந்திருக்கலாம் என்பதால் டெபிட் கார்டு, கிரிடிட் கார்டுகளை பயன்படுத்துவது பாதுகாப்பானது. தினமும் கடைக்கு சென்று பொருட்கள் வாங்குவதையும் தவிர்க்க வேண்டும். மூன்று, நான்கு நாட்களுக்கோ அல்லது ஒரு வாரத்திற்கோ தேவையான பொருட்களை மொத்தமாக வாங்கிவிடுவது நல்லது. அடிக்கடி வெளியே செல்வதை தவிர்த்து பாதுகாப்பை உறுதி செய்துவிடலாம்.