கொரோனா அச்சம் தணியும் வரை தனித்திருப்போம்

செவ்வாய் மார்ச் 31, 2020

கொரோனா அச்சம் தணியும் வரை தனித்திருப்போம் என்று பொதுமக்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உலகத்தில் ஒற்றை மனிதர்கூட மனநிம்மதியாக இருக்க முடியாதபடி, மிகப் பெரும் அச்சத்தையும், பதற்றத்தையும் உருவாக்கியிருக்கிறது கண்ணுக்குத் தெரியாத நுண்கிருமியான கொரோனா வைரஸ்.

இந்த கொடுந்தொற்றின் பெருந்தாக்கத்தில் இருந்து இந்தியாவை காப்பாற்ற வேண்டும் என 21 நாள் ஊரடங்கினை அறிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி. இன்றுடன், 5 நாட்கள் ஆகிவிட்டன. நாடு மிகப் பெருமளவு முடங்கியிருக்கிறது. நம்முடைய தமிழ்நாடும் முடங்கியிருக்கிறது. கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கு முதற்கட்ட நடவடிக்கை மற்றவர்களிடம் இருந்து தனித்திருத்தல்தான் என்பதை உலக சுகாதார நிறுவனம் தொடங்கி பலரும் வலியுறுத்திய காரணத்தால்தான், நான் இதனைத் தொடக்கம் முதலே வலியுறுத்தி வருகிறேன்.

பிரதமர் மோடி மார்ச் 22-ந் தேதி அன்று அறிவித்த ‘மக்கள் ஊரடங்கு’, அதன்பிறகு தமிழக அரசு அறிவித்த ஏப்ரல் 1-ந்தேதி வரையிலான 144 தடை உத்தரவு ஆகிய அறிவிப்புகளின்போதே, அதன் அவசியத்தை மனமார வரவேற்றோம். அதேநேரத்தில், அதனால் ஏழை எளிய சராசரி மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதையும் நினைவூட்டினோம். அமைப்பு சாரா தொழிலாளர்களின் அன்றாட வாழ்க்கையை மனதில் கொண்டு தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களின் ஒரு மாத ஊதியத்தை வழங்குவார்கள் என்ற முடிவெடுத்து அறிவித்தோம்.

தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினர்களும், மக்களவை உறுப்பினர்களும், முதல்- அமைச்சர் நிவாரண நிதிக்கு தங்கள் ஊதியத்தில் இருந்து நிதி வழங்கி, மக்களைக் காக்கும் பணியில் தங்களின் பங்களிப்பைச் செலுத்தினர். அரசியல் கண்ணோட்டங்களை அகற்றி ஒதுக்கிவைத்து, கொரோனா குறித்த விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு பணியில் தி.மு.க. முழு மனதுடன் மத்திய, மாநில அரசுகளின் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குகிறது. முன்கூட்டியே ஆலோசனைகளைத் தெரிவிக்கிறது. தமிழக அரசுக்குத் தேவையான நிதியை மத்திய அரசு வழங்கிட வலியுறுத்துகிறது. மத்திய அரசின் உள்துறை சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளும் இதில் கவனம் செலுத்திட வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

பேரிடர் காலங்களில், அரசியல் எல்லைக் கோடுகளை கடந்த அறம் சார்ந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிட தி.மு.க. ஒருபோதும் தயங்கியதில்லை. தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினர்கள், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்பில் இருப்போர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக வகுக்கப்பட்ட விதிமுறைகளுக்குட்பட்டு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அச்சத்தைப் போக்கி, அனைத்து முனைகளிலும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பணியினைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

கொரோனா அச்சம் தணியும்வரை தனித்திருப்போம்; மனத்திடத்துடன் துணிந்திருப்போம்; எந்நாளும் மக்களுக்குத் துணையிருப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய்ப் பரவலின் நிலை மற்றும் தடுப்புப் பணிகள் குறித்து, தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று கைபேசி காணொலி மூலம் உரையாடி , நிலவரத்தை கேட்டறிந்தார். இதுகுறித்து மு.க.ஸ்டாலின் முகநூலில் கூறியிருப்பதாவது:-

கொரோனா காலத்திலும் தொய்வில்லாது தொண்டாற்றுவோம். கொரோனா காலத்தில் தி.மு.க. சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்களின் குடும்ப உறுப்பினர்களாக உதவிகள் செய்ய வேண்டுகோள் விடுத்துள்ளேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.