கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை தொடர்ந்து நடத்த கோரி வாக்காளர் மனு!

வியாழன் நவம்பர் 07, 2019

கனிமொழிக்கு எதிராக தமிழிசை சவுந்தரராஜன் தொடர்ந்த தேர்தல் வழக்கை தொடர்ந்து நடத்த அனுமதிக்கக் கோரி, ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த வாக்காளர் முத்துராமலிங்கம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

தூத்துக்குடி மக்களவைத் தேர்தலில் கனிமொழி வெற்றி பெற்று எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கனிமொழி வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி அவரை எதிர்த்து போட்டியிட்ட தமிழிசை சவுந்தரராஜன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்து இருந்தார். பின்னர் தமிழிசை தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை வாபஸ் பெற அனுமதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் தமிழிசை மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், கனிமொழிக்கு எதிராக தொடரப்பட்ட தேர்தல் வழக்கை தமிழிசை திரும்பப் பெறுவது தொடர்பாக அரசிதழில் வெளியிட்டு, அதுதொடர்பாக நாளிதழ்களில் அறிவிப்பு செய்ய உத்தரவிட்டார்.

இந்நிலையில் கனிமொழிக்கு எதிராக தமிழிசை சவுந்தரராஜன் தொடர்ந்த தேர்தல் வழக்கை தொடர்ந்து நடத்த அனுமதிக்கக் கோரி தொகுதி வாக்காளர் என்ற முறையில் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

11-ம் திகதி விசாரணை

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், இதுதொடர்பாக உரிய நீதிமன்றக் கட்டணத்தை செலுத்த மனுதாரருக்கு அறிவுறுத்தி விசாரணையை வரும் 11-ம் திகதிக்கு தள்ளிவைத்தார். ஏற்கெனவே தூத்துக்குடி தொகுதி வாக்காளர் சந்தானகுமார் என்பவர், கனிமொழி வெற்றியை எதிர்த்து தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.