கழிவறைகளை சுத்தம் செய்வதால் உங்கள் ஆரோக்கியம் பாதிக்கப்படுமா?

புதன் அக்டோபர் 16, 2019

கழிவறைகளை சுத்தப்படுத்த ஆசிட் உபயோகிக்கிற பழக்கம் உள்ளவரா நீங்கள்? ‘புகைய புகைய ஆசிட்டை ஊத்தி, ஒரு மணி நேரம் ஊற வச்சுத் தேய்ச்சா தான் டாய்லெட் பளபளக்குது’ என அதற்கொரு காரணமும் வைத்திருப்பவரா? ஆசிட் ஊற்றியோ, டாய்லெட் கிளீனர்களை உபயோகித்தோ கழிவறைகளை சுத்தம் செய்வதால் உங்கள் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்பதை அறிவீர்களா?

கடுமையான ஆசிட் மற்றும் டாய்லெட் கிளீனர்களில் உள்ள ஹைட்ரோ குளோரிக் அமிலமானது தொண்டை, மூக்கு பிரச்னைகளுக்கு வழிவகுப்பது முதல், சுவாசக் கோளாறுக்கும் காரணமாகலாம்.

குளோரின் ப்ளீச்சானது கண் எரிச்சலையும் மூச்சுத் திணறலையும் ஏற்படுத்தி, ஆஸ்துமாவை அதிகப்படுத்தலாம்.

இவற்றில் கலக்கப்படுகிற பிற வேதியியல் பொருட்களால், உள்ளுறுப்புகளான கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தில் கோளாறுகள் ஏற்படும். மைய நரம்புகளில் பாதிப்பு மற்றும் புற்றுநோய் வருவதற்கு கூட அதிக வாய்ப்புகள் உள்ளன.

ஆபத்தில்லாத பொருட்களைக் கொண்டு டாய்லெட்டை சுத்தப்படுத்தலாம். இதில் ஒயிட் வினிகருக்கே முதலிடம். இது மிகமிக மைல்டான ஒரு ஆசிட். கிருமிகளைக் கொன்று, உடலுக்குள் நச்சுகளை நீக்க தண்ணீர் போதும்.

துர்நாற்றம் அகற்றும். பாதுகாப்பானதும் கூட. அடுத்தது சோடியம் டெட்ராபோரேட் எனப்படுகிற போரக்ஸ் பவுடர். கறைகளை நீக்கி, கழிவறைகளைப் பளபளவென மின்னச் செய்வதில் இதற்கு இணையே இல்லை.

கடைசியாக சிட்ரிக் ஆசிட். வெந்நீர் உபயோகித்ததன் விளைவாக கறை படிந்து காணப்படுகிற குளியலறை மற்றும் கழிவறைகளை சுத்தமாக்க ஆபத்தில்லாத சிட்ரிக் ஆசிட்டே போதுமானது.