கீழடியில் 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட உணவு குவளை!

வெள்ளி ஓகஸ்ட் 16, 2019

கீழடியில், 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட உணவு குவளையை, தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம், கீழடியில், 47 லட்சம் ரூபாய் செலவில், ஐந்தாம் கட்ட அகழாய்வு பணி நடக்கிறது.

ஜூன், 13 முதல் நடந்து வரும் ஆய்வில், பானை, பானை ஓடுகள், மூடிகள், பழங்கால சுவர்கள், உறைகிணறு உள்ளிட்டவற்றை, தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்த உறைகிணறு மூலம், 2,000 ஆண்டுகளுக்கு முன், இங்கு வாழ்ந்த மக்கள், நீர் மேலாண்மை திட்டத்தை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.

அகழாய்வில், 2,000 ஆண்டுகளுக்கு முன், மண்ணால் செய்த உணவு குவளையை கண்டறிந்துள்ளனர். இதன் வாய் அகன்ற நிலையில், பாத்திரத்தின் உள்ளே கருப்பு, வெளியே சிவப்பு நிறமாக, காட்சி அளிக்கிறது.

சற்று சேதமான நிலையில், உணவு குவளையை, ஆராய்ச்சியாளர்கள் மீட்டுள்ளனர். விரைவில் ஆராய்ச்சிக்காக அனுப்ப உள்ளதாக தெரிவித்தனர்.