இயற்கைக்கு மனிதனால் செய்யப்படும் சேதங்களே!வனவிலங்குகளின் எண்ணிக்கை மூன்றில் இரண்டாக குறைவு!!

ஞாயிறு செப்டம்பர் 13, 2020

கடந்த 50 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில் வனவிலங்குகளின் எண்ணிக்கை முன்றில் இரண்டாக குறைந்திருப்பதாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பான உலக வனவிலங்கு நிதியம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பெரும் அழிவு குறைவதற்கான எந்த சமிக்ஞையும் தெரியவில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் பார்க்காத அளவுக்கு மனிதனால் இயற்கை அழிக்கப்பட்டு வருவதாகவும் அது எச்சரித்துள்ளது.

“காடுகளை தீமூட்டுவது, எமது கடல்களில் மீன்பிடிப்பது மற்றும் காட்டுப்பகுதிகளை அழிப்பது வனவிலங்குகள் குறைவதற்கான காரணம்” என்று உலக வனவிலங்கு நிதிய தலைமை நிர்வாகி டான்யா ஸ்டீல் தெரிவித்துள்ளார்.

இதன்போது உலகெங்குமுள்ள வாழ்விடங்களில் பல்வேறு வனவிலங்கு இனங்கள் சுற்றுச்சூழல் விஞ்ஞானிகளால் அவதானிக்கப்பட்டே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

1970 தொடக்கம் பாலூட்டிகள், பறவைகள், நிலநீரில் வாழ் உயிரினங்கள்,ஊர்வன மற்றும் மீன்களின் எண்ணிக்கையில் 68 வீதம் வீழ்ச்சி கண்டிருப்பதாக குறிப்பிடப்பட்டு ள்ளது.

இயற்கைக்கு மனிதனால் செய்யப்படும் சேதங்களே இந்த வீழ்ச்சிக்கு காரணம் என்பது ஆதராபூர்வமானது என்று இது தொடர்பில் தரவுகளை வழங்கிய டொக்டர் அன்ட்ரூ டொர்ரி தெரிவித்துள்ளார்.