இராமனின் தோள்புயத்தை அளந்த தசரதச்சக்கரவர்த்தியின் மாண்பு அறிக!

உலக மன்னர்களுக்கெல்லாம் எடுத்துக் காட்டானவர்.தன் தலைமுடியில் நரை கண்ட மாத்திரத்தில் இராமருக்கு முடி சூட்டி பட்டாபிஷேகம் செய்து வைக்க முடிவு செய்தார்.
தன் தலைமுடியில் ஒரு நரை கண்டதற்காக முடி துறக்க தசரதச் சக்கரவர்த்தி முடிவு செய்தாரா? என்று இற்றைக் காலத்தவர் வியப்பர்.
ஆனால் யுகம் கடந்த வரலாறுகள் அற்றைக் காலத்து உண்மைகள் என்பதை நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும்.
அந்த வகையில் நரை, திரை, மூப்பு என்பன ஒரு மனிதனின் மரணத்துக்கான அறிகுறி.
எனவே தன் தலைமுடியில் நரை கண்ட மாத்திரத்தில் அடுத்த சந்ததியிடம் தலைமைத் துவத்தைக் கையளிக்க வேண்டுமென தசரதர் முடிவு செய்கிறார்.
இற்றைக்காலத்து முகாமைத்துவ சிந்தனைகளுக்கு தசரதர் எவ்வளவுதூரம் எடுத்துக்காட்டாக இருந்துள்ளார் என்பது அவரின் தீர்மானத்திலிருந்து அறிய முடியும்.
இராமருக்குப் பட்டாபிசேகம் செய்வது என்று முடிவு செய்த தசரதர் முதலில் இராமனின் தோள்புயங்களை அளந்து பார்த்தாராம்.
அயோத்தி மாநகரை ஆளுகின்ற தகைமை இராமனுக்கு உண்டா என்பதைக் கண்டறியவே இராமனின் தோள்புயங்களை தசரதச் சக்கரவர்த்தி அளந்தார் எனலாம்.
இங்கு நாடாளுகின்ற தகைமை பற்றிய பரிசோதனையாகவே தசரதரின் செயலைப் பார்க்க வேண்டும்.
அதாவது எதற்கும் உரிய தகைமை இருத்தல் அவசியம். இதையே இன்றைய முகாமைத்துவ சிந்தனை செப்பி நிற்கிறது.
இதனடிப்படையில்தான் தகைமைப் பரீட்சித்தலாக நேர்முகத்தேர்வு இடம்பெறுகிறது.
ஆக, இராமனின் தோள்புயங்களை அளந்ததன் ஊடாக அயோத்தி மாநகருக்கு மன்னராக இருக்கக்கூடிய தகைமை இராமனுக்கு உண்டா என தசரதச் சக்கரவர்த்தி நேர்முகத் தேர்வு நடத்தினார் எனலாம்.
இராமபிரான் தசரதரின் மூத்த மகன். தந்தை வழி மூத்த மகனுக்கே அரசாளும் உரிமை என்பது மன்னர் மரபு.
இவ்வாறாக மன்னர் மரபு இருந்தபோதிலும் அந்த எல்லை கடந்து, அயோத்தியை ஆளுகின்ற அரசன் தகைமையுடையவனாக இருக்க வேண்டும் எனத் தசரதச் சக்கரவர்த்தி நினைத்தமையாலேயே அவர் மன்னர்களுக் கெல்லாம் உயர்ந்த வழிகாட்டி என்றோம்.
எனவே நாடாளுகின்ற மன்னன் தகைமையுடையவனாக இருத்தல் அவசியம்.
இங்கு தகைமை என்பது தனித்து தோள் வலிமை மட்டுமல்ல. மாறாக ஏழ்மையைப் புரிதலும் வறுமையை உணர்தலும் தன்னுயிர் போல் மன்னுயிரைப் போற்றுகின்ற பண்பும் சகல மக்களையும் சமமாகப் பார்க்கின்ற பக்குவமும் இருக்கக்கூடியவரே நாடாளும் தகைமை கொண்டவர் என்பதைத் தசரதச்சக்கரவர்த்தி உணர்த்தியுள்ளார் என்பது அறிதற்குரியது.நன்றி-வலம்புரி